யோகி திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
எந்த குழந்தையும், நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவம் அன்னை வளர்ப்பினிலே... என்பது பழைய பாடல். அன்னைக்கு பதில் தந்தையால் அயோக்கியனாகும், அன்பிற்கு ஏங்கும் ஒருவனின் கதைதான் யோகியின் கதை!

கொடூர அப்பாவின் அடாவடித்தனத்தால் சின்ன வயதில் தாயையும், தங்கையையும் தன் கண் முன்னே பறிகொடுக்கும் யோகி, தந்தையை பலிகொடுத்து சுற்றமும், நட்பும் சூழ வளர்ந்து ஆளாகி, கொலை - கொள்ளை என கொடூரமாக அலைந்து திரிகிறார். ஒரு கொள்ளையில் பெண் குழந்தை ஒன்று அவர் வசம் வந்து சேர, அதுவரை கொடூரமாக வாழ்ந்து வந்த யோகி, அக்குழந்தையை, சின்ன வயதில் தன் தந்தையால் தான் பறிகொடுத்த தன் தங்கையாக கருதி பாசத்தை பொழிந்து, பையிலும் கையிலும் தூக்கி கொஞ்சுகிறார். ஆனால், எல்லாம் இரண்டு நாட்கள்தான். குழந்தையை உரியவர்களிடம் ஒப்ப‌டைக்க வேண்டும் என்ற உண்மையை நாயகி மதுமிதா உரைக்க, குழந்தையை அதன் தந்தையிடம் ஒப்படைக்க கிளம்புகிறார். அக்குழந்தையின் தந்தையோ குழந்தையை கொல்லத் துடிக்கிறான். அது ஏன்? எதற்கு? யோகி அமீர் குழந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மீதிக் கதை!

யோகி அமீர் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் தன் நாயகர்களை வாழ வைத்த இயக்குனர் அமீர், இதில் ஹீரோவாக... அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக வாழ்ந்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். அமீரை மாதிரியே, அவருடைய நண்பராக வரும் பாடலாசிரியர் சிநேகன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார்கள். சபாஷ்!

புருஷனை பிரிந்து ஆந்திரா காக்கிநாடாவில் இருந்து கைக்குழந்தையுடன் வந்து பொம்மை தயாரித்து விற்கும் மதுமிதாவின் பெண்மையும், தாய்மையும் பிரமாதம். குழந்தையை அமீரிடம் பறிகொடுத்து விட்டு தவிக்கும் சுவாதியும், ஆஸ்பத்திரி பெட்டில் அடிபட்டு படுத்துக் கொண்டே நடிப்பில் ஸ்கோர் செய்து விடுகிறார்.

இவர்கள் தவிர பொன்வண்ணன், வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட இன்னும் பலரும் படத்தில் உண்டென்றாலும் அமீர், சிநேகன், மதுமிதா, சுவாதி மாதிரியே ஏன்? அவர்களை காட்டிலும் ஒரு படி மேலேயே பெயர் வாங்கி விடுகிறார் அமீரின் அப்பா பாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் அந்த தாடிக்காரர். தாடியை நீவி விட்டுக் கொண்டு தள்ளுவண்டியில் பிச்சையெடுக்கும் அவருக்குள் அத்தனை கொடூரமா? பிச்சைக்காரர்களும் தன் வீட்டில் எத்தனை கொடூரமானவர்கள் என்பதை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கின்ற இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவிற்கு தனியாக சொல்ல வேண்டும் ஒரு சபாஷ்!

அதென்ன சைக்கோ ஹீரோக்கள் என்றால் படம் எடுத்து ஆடும் நல்ல பாம்புக்கு பழி்பபு காட்ட வேண்டும், எலி குஞ்சுகளை கொல்ல வேண்டும், விஷ பாம்பு இருக்கும் வீட்டில் குழந்தையை கொண்டு வந்து போட்டு முரட்டுத் தனம் காட்ட வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன? அமீரை அவரது அப்பா கேரக்டர் கொடுமை படுத்துவதைக் காட்டிலும், சுவாதியின் குழந்தையை கொண்டு வந்து கொஞ்சுகிறேன் பேர்வழி என கொடுமையோ கொடுமை படுத்துகிறார் அமீர். மிருக வதை தடுப்பு சட்டம் மாதிரி சினிமாக்காரர்களுக்காக சிறுவர் வதை தடுப்பு சட்டம் ஏதாவது கொண்டு வந்தால்தான் சரிப்படுவார்கள் எனும் எண்ணமும் எழுகிறது. நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம் சம்பந்தப்பட்டவர்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஆர்.பி.குருதேவ், கே.தேவராஜ் ஆகியோரது ஒளிப்பதிவு, ராம்சுதர்சனின் படத்தொகுப்பு உள்ளிட்டவைகள் படத்தின் ‌பெரும் பலம்.

ஆயிரம் அல்டா, உல்டா செய்திருந்தாலும், டூ - சி எனும் கொரியன் படத்தையும், அதை‌ யோகிக்கு முன்பே உல்டா செய்து தமிழில் வெளிவந்த திரு திரு துறு துறு உள்ளிட்ட படங்களையும் யோகி ஞாபகப்படுத்த தவறவில்லை.

என்னதான் கதையும், இயக்கமும் சுப்பிரமணியம் சிவாவினுடையது என்றாலும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நாயகராகவும் நடித்திருக்கும் அமீரிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம். அதில் நடிப்பில் மட்டுமே நாம் எதிர்பார்த்ததற்கு மேலாக பூர்த்தி செய்து ஜெயித்திருக்கிறார் அமீர். ஆகவே யோகி நம்பிக்கை துரோகியும் அல்ல, நல்ல விரோதியும் அல்ல.. அமீரை விரும்புபவர்களுக்கு நண்பன்.
ADVERTISEMENTS