பெண்ணின் கதை திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
03ராம்கி, சுரேஷ் , பாபுகணேஷ், ரமேஷ் கண்ணா, வையாபுரி, ஐசரிகணேஷ், ஜனகராஜ், விந்தியா, மும்தாஜ் , கனகா, ஸ்ரீவித்யா, ஷர்மிலி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் கே.ராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கும் திரைப்படம் தான் பெண்ணின் கதை.

மாநகராட்சி பஸ் டிரைவர் கே.ராஜன், அவரது பேராசை பிடித்த ஊதாரி மகன் சுரேஷ், குடும்பத்திற்காக உழைத்து கொட்டும் மகள் கனகா. மூத்த மகள் விந்தியாவை, பாபுகணேஷூக்கு கடன், உடன்பட்டு கட்டிக்கொடுத்துவிட்டு இளைய மகள் கனகாவிற்கு வரன் பார்க்கிறார் கே.ராஜன். அப்பாவின் சம்பளம், அக்கா கல்யாணத்திற்கு பட்ட கடனுக்கும் , வட்டிக்கும் கட்டுப்படியாகாமல் போக, தன் சம்பளத்தில் தான் குடும்ப வண்டி ஓடுகிறது....எனும் உண்மை தெரிந்த கனகா, தன்னை பெண் கேட்டு வரும் வரன்களை எல்லாம் ஒரு மொட்டை கடுதாசி மூலம், ஓட விடுகிறார். அவரது அப்பா கே.ராஜன் வாயிலாக கண்டெக்டர் வேலை வாங்கிய ராம்கி, கனகா மீது காதல் கொள்கிறார்.

கனகா - ராம்கியின் காதல் சந்திக்கும் போராட்டங்கள்.... கட்டினால் ஒரு கோடீஸ்வரியை தான் கட்டுவேன்... என வேலைவெட்டி இல்லாமல் சுற்றித்திரியும் சுரேஷ், காஸ்ட்லி கார்களில் அடிக்கடி வலம் வரும் மும்தாஜ் மீது மோகம் கொள்கிறார். இதனால் அவர் சந்திக்கும் ஏமாற்றங்கள்... பாபு கணேஷோ, பெரிய விபச்சார புரோக்கராக இருந்துகொண்டு விந்தியாவை, வெள்ளை புடவை கட்டி போராட வைக்கிறார். இதனால், விந்தியா சந்திக்கும் வேதனைகள்... சுரேஷ், விந்தியா, கனகா தவிர ராஜனுக்கு இன்னொரு மகளும் இருக்கிறார். அவர் காரணமே இல்லாமல், கண்ணீரும், கம்பலையுமாக ஒருசில காட்சிகளில் அவ்வப்போது வந்து போகிறார்.

இந்த நான்கு குழந்தைகளின் நல்வாழ்விற்காக, கே.ராஜன்., கண் ஆபரேசனுக்கு காத்திருக்கும் தனது வயதான அப்பா ஜனகராஜூக்கு தெரியாமல், தங்களது பூர்வீக் சொத்தான, சொந்த வீட்டை விற்று அதன்மூலம் பிரச்சினைகளை தீர்க்க பார்க்கிறார். ஆனால், அதுவே பெரும் பிரச்சினையாகி கோர்ட், கேஸ் என்று கே.ராஜனை அலைந்து திரிய வைக்கிறது. அதிலும் ராஜன் வெற்றி பெற்று தன் நான்கு பிள்ளைகளுக்கும் நல்வாழ்க்கை அமைத்து கொடுத்தாரா? இல்லையா? என்பது தான் பெண்ணின் கதை திரைப்படத்தின் மீதிக்கதை!.

நியாயப்படி, படம் முழுக்க ஒரு ஆணான கே.ராஜன் போராடும் இந்த படத்திற்கு ஒரு ஆணின் கதை என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்..? சரி போகட்டும்...!

ராம்கி, சுரேஷ், பாபுகணேஷ், ரமேஷ்கண்ணா, ஜனகராஜ், கே.ராஜன், ஐசரிகணேஷ், வையாபுரி உள்ளிட்ட ஆண் நட்சத்திர பட்டாளத்தில் ராம்கி, சுரேஷை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் கே.ராஜன்!. அதிலும் படம் முழுக்க கன்னங்களில் கண்ணீர் கோடுகள் வழிந்தபடி, சோகத்தை பிழிய பிழிய நடித்திருக்கும் கே.ராஜனுக்கு, ஜனகராஜ் அப்பா என்பது டிராஜிடியையும் மீறிய காமெடி.

விந்தியா, மும்தாஜ், கனகா, ஸ்ரீவித்யா, ஷர்மிலி உள்ளிட்ட பெண் நட்சத்திரங்களில் நீதிபதியாக மறைந்த ஸ்ரீவித்யா வரும் காட்சிகள், எந்த காலத்து படம் இது? எனும் கேள்வியை எழுப்புகிறது!. அதேமாதிரி பாதிபடத்திற்கு அப்புறம் மும்தாஜ் காணாமல் போனதற்கு காரணம் சொல்லியவர்கள்., வெள்ளை புடவை விந்தியாவிற்கு பதில் வேறு நடிகையை நிறுத்தியதற்கு விளக்கம் சொல்லாததும் வேடிக்கை!.

கிருஷ்ணாவின் இசையில், சுரேஷ் - மும்தாஜ் ஜோடி வெளிநாடுகளில் எல்லாம் டூயட் பாடுவது ரசிகர்களுக்கு ஜாக்பாட் அதிர்ஷ்டம்! கே.ராஜனின் எழுத்திலும், பாபுகணபதியின் இயக்கத்திலும், ஓர் அழகிய குடும்ப சித்திரத்தை தர முயன்று, அதில் நிறைய தாமதத்தால், கொஞ்சமே கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறது பெண்ணின் கதை படக்குழு!

மொத்தத்தில், பெண்ணின் கதை - பெரும் சோகக்கதை...!"
ADVERTISEMENTS