தி கராத்தே கிட் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஐம்பது, அறுபது வயதிலும் 'வீக்' வைத்துக் கொண்டும், ‌பொக்கை வாயை மறைத்துக் கொண்டும் மரத்தை சுற்றி டூயட் பாடியே தீருவேன், பைட் எனும் பேரில் இருபது, இருபத்தைந்து பேரை பந்தாடியே தீருவேன்... என அடம்பிடிக்கும் நம்மூர் வயசாளி ஹீரோக்களைப் போல் இல்லாமல், உலகப்புகழ் ஜாக்கிசான் தன் வயதிற்கேற்ற ரோலை ஏற்று நடித்திருப்பதற்காக‌வே தி கராத்தே கிட் படத்தை பார்க்கலாம்..! பாராட்டலாம்!!

கதைப்படி, 12 வயது சிறுவன் ட்ரி பார்க்கர் அப்பாவை இழந்ததால் அம்மாவுடன் அமெரிக்காவை விட்டு கிளம்பி சீனாவிற்கு வருகிறான். வந்த இடம் புது இடம், புது சூழல், புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரம் என்பதால் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் பிடிக்கவில்லை. இச்சூழலில் அங்குள்ள பள்ளியில் சேர்க்கப்படும் அவனை சக சீன மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதுடன் துன்புறுத்தவும் செய்கின்றனர். குங்பூ, கராத்தே எல்லாம் தெரிந்த அந்த மாணவர்களிடம் இருந்து அவனை காக்கவும், தனிமையை போக்கவும் வருகிறார் ஜாக்கிசான். ஹேன் எனும் பாத்திரத்தில் வலம் வரும் ஜாக்கிக்கும் ஒரு உருக்கமான பிளாஷ்பேக்கை வைத்து அவர் சிறுவன் ட்ரி பார்க்கர் மீது வைக்கும் பாசத்திற்கும் ஒரு அர்த்தத்தை கற்பித்து கதையை அழகாக நகர்த்தியிருக்கின்றனர். ஜாக்கியின் பயிற்சியிலும், பாசத்திலும் உண்மையான குங்பூ என்ன என்பதை கற்றுத் தேறும் ட்ரி பார்க்கர் பல போட்டிகளில் பங்கு பெற்று தன்னிடம் விரோதம் பாராட்டும் சீன மாணவர்களை வெல்வதே தி கராத்தே கிட் படத்தின் மொத்த கதையும்.

12 வயது சிறுவன் ட்ரி பார்க்கராக ஜேடன் ஸ்மித் பிரமாதமாக நடித்திருக்கிறான். ‌இவன் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நட்சத்திர தம்பதிகள் வில்ஸ்மித் - ஜேடா பின்கெட் தம்பதியரின் வாரிசு. ஜேடன் ஸ்மித் தான் இதில் ஹீரோ. மகனை ஹீரோ ஆக்கிட வில் ஸ்மித் தயாரித்திருக்கும் படம் இது. இதற்கு முன் தன் அப்பா வில்ஸ்மித்துடன் இணைந்து தி பர்சுட் ஆப் ஹேப்பினஸ் எனும் படத்தில் சிறுவேடத்தில் நடித்து உலகப்புகழ் பெற்றவன்தான் இந்த ஜேடன். ஜாக்கிசான் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதுதான் படத்தின் பெரும்பலம். ஜேடனின் தாயாக ஆஸ்கார்ல அகடாமி விருதுகள் பெற்ற டாராஜி பி.‌ஹென்சன் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜேடன், ஜாக்கிசான், டாராஜி ஆகிய மூவரைச் சுற்றியே கதை உலா வருகிறது என்றாலும், குங்பு, கராத்தே என தி கராத்தே கிட் படம் அசத்தலாகவே இருக்கிறது. அதுவும் சீன பெருஞ்சுவர், புத்த மடாலயங்கள், ‌பெரும் மலைக்காடுகள் என படம் முழுக்க இயற்கை எழில் கொஞ்சுவதும், படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. இந்த அழகு அம்சங்களுடன் ஜேடன் ஸ்மித், ஜாக்கி, டாராஜி உள்ளிட்டவர்கள் போட்டி போட்டு நடித்து படத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றனர். சிறுவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களும் பார்க்க வேண்டிய படம் இது!

1980களில் வெளியாகி வெற்றி பெற்ற தி கராத்தே கிட் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் புதிய கோப்பையில் பழைய தேநீர் என்றில்லாமல் கதையில் பலப்பல மாற்றங்களை உண்டாக்கி, புதிய கராத்தே கிட்டை இயக்கியிருக்கும் ஹரால்ட் ஸ்வர்ட் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு இடையேயான கலாச்சார வித்தியாசத்தை ‌ஜேடன் ஸ்மித் எனும் ஒரே ஒரு சிறுவன் மூலம் மிக அழகாக கதையினூடே படம் பிடித்துக் ‌காட்டியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. அவருக்கு திரைக்கதை எழுதிய கிறிஸ்டோபர் மர்பியும், ஒளிப்பதிவாளர் ரோஜர் ப்ராட்டும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னரும் மிகவும் பக்கபலமாக இருந்து படத்தை பிரமாண்டப்படுத்தி உள்ளனர்.
ADVERTISEMENTS