ராவணன் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
புராண ராமாயண‌த்தில் மறைந்திருந்து வாலியை கொல்வான் ராமன். இதில் தன் மனைவியை வைத்து ராவணனை கொல்கிறான் ராமன். ஆனால், கொல்பவர் ராமனும் அல்ல கொல்லப்படுபவர் ராவணனும் அல்ல... என்பதுதான் ராவணன் படத்தின் கதைக்கரு!

கதைப்படி, அந்த அடர்ந்த காட்டிற்கும் அந்த காட்டை சார்ந்துள்ள ஊர் மக்களுக்கும் கடவுளாக வாழ்கிறார் வீரா அலைஸ் வீரையன் எனும் விக்ரம். சட்டத்தின் பார்வையில் தவறானவர்களாகத் தெரியம் விக்ரமையும் அவரது சகாக்களையும் போட்டுத்தள்ள வருகிறது தேவ் எனும் பிருத்விராஜ் தலைமையிலான போலீஸ் டீம். விக்ரமை பிடிக்க அல்லது சாகடிக்க வந்த அவர்கள், திருமண கோலத்தில் இருக்கும் அவரது தங்கை பிரியாமணியை பிடித்து போய் கற்பழித்து கந்தல் துணியாக்குகிறது. அதனால் தற்கொலை செய்து கொள்ளும் பிரியாமணியை பார்த்து கதறும் விக்ரம் எடுக்கும் அவதாரம்தான் ராவணா அவதாரம்.

பிருத்விராஜின் ஆசை மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்தி காட்டிற்குள் சிறை வைக்கும் விக்ரம், ஐஸ்வர்யா ராயை தேடி வரும் பிருத்விராஜ் தலைமையிலான போலீஸ் டீமிற்கும் வேட்டு வைத்தாரா அல்லது ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் போலீசுக்கு சவால் விட்டு வாழும் விக்ரம் அண்ட் கோ., வினரை பிருத்விராஜ் தீர்த்து கட்டினாரா? உள்ளி்ட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்க முயற்சிக்கிறது ராவணனின் மீதிக்கதை! ராவணனின் கதையா? வீரப்பனின் கதையா என்று சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தலாம்

வீரா எனும் வீரைய்யாவாக விக்ரம் ராவணனை ஞாபகப்படுத்துகிறாரோ இல்லையோ... சந்தனக்கட்டை வீரபப்னையும் அவரது கதையையும் ஞாபகப்படுத்தும் விதமாக வித்தியாசமாக நடித்திருக்கிறார் விக்ரம்.  அந்த அழுக்கான மேக் அப்பிலும் அழகாக தெரியும் விக்ரம் பக் பக் பக் என்றும் டர் புர் என்றும் அடிக்கடி விதவிதமாக ஒலிகள் எழுப்புவது ஐஸ்வர்யாராயை பயமுறுத்தியதோ இல்லையோ..., ரசிகர்களுக்கு அவர் பாத்திரத்தி்ன் மீது இருக்கும் மதிப்பு மரியாதையை குறைத்து விடுகிறது. மணிரத்னம் படத்தில் ஹூரோக்கள் இப்படிப்பட்ட ஒலிகளை எழுப்புவார்களா என்ன?    இதே மாதிரி குருவம்மா இங்கேயே தங்கிவிடு என ஐஸ்வர்யா ராயை பார்தது விக்ரம் அடிக்கடி சொல்வதும் அர்த்தம் சொல்லாமல் இருக்கிறது. கதாநாயகி ஐஸ்வர்யா ராய், ராகினி எனும் அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.கூடவே வீரதீர சாகசங்களிலும் ஈடுபடும் அம்மணி, போலீஸ் புருஷன் பிருத்விராஜைக் காட்டிலும் தன்னை கடத்தி வைத்திருக்கும் விக்ரமிடம் அதிகம் முகபாவங்களில் நெருக்கம் காட்டுவது ஏனோ தெரியவில்லை! ஏன் இந்த தடுமாற்றம்  ஐஸ்?!

போலீஸ் அதிகாரியாக பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டதற்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காட்டிலாக்கா ஆபிசர் கம் அனுமாராக கார்த்திக் பாட்டிலும் கையுமாக படு ரகளை. விக்ரமின் அண்ணனாக பிரபு பிரமாதம்! தம்பி முன்னா, டி.எஸ்.பி. ஜான் விஜய் வெண்ணிலாவாக பிரியாமணி, ரஞ்சிதா, வர்ஷா, பிரியாமணியின் காதலன் வேலனாக அஸ்வந்த் திலக் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்...! எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அரவாணியாக வரும் வையாபுரி.

ஆறு பாடல்கள் இருந்தும் உசுரே போகுதே..., கோடு போட்டா.. ஆகி்ய இரண்டு பாடல்கள் தான் வைரமுத்துவை ஞாபகப்படுத்துகின்றன. ஏ.ஆர்.ரகுமானின் இசையும் சந்தோஷ் சிவன்- வி. மணிகண்டன் இருவரது ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்!

தொழில்நுட்பத்திலும், பிரமாண்டத்திலும் இதுவரை பார்த்ததைவிட நூறு மடங்கு அழகான... அதேசமயம் வழக்கமான மணிரத்னம் படம்! ஆனாலும் அடிக்கடி மணி எத்தனை? என பார்க்க தூண்டும் கதைக்களத்தை மட்டும் இன்னும் சற்றே கவனித்திருந்தால் ராவணன் மேலும் ரசனைக்குரியவன் ஆகி இருப்பான்.
ADVERTISEMENTS