பெண் சிங்கம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் பிறந்த பெண் சிங்கத்திற்கு கமர்ஷியல் என்ற ஆபரணத்தை அணிவித்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம். வனத்துறை அதிகாரியான உதய்கிரண், வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மீராஜாஸ்மினை காதலிக்கிறார். மீரா ஜாஸ்மினுக்கோ ஐ.பி.எஸ் படிப்பின் மீது காதல். மீரா ஜாஸ்மினின் ஐ.பி.எஸ் காதலுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து உதவி செய்கிறார் உதய்கிரண். இதனால் உதய்கிரணை காதலிக்கும் மீராஜாஸ்மின் ஐ.பி.எஸ் பயிற்சிக்காக உதய்கிரணை விட்டு பிரியும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் உதய்கிரணுக்கும், சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்தும், ராதாரவிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் உதய்கிரணை பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் ராதாரவி, உதய்கிரணின் நண்பனான ரிச்சர்ட்டை வைத்து உதய்கிரணை பழிவாங்க சதிதிட்டம் தீட்டுகிறார். பணத்தின் மீது உள்ள ஆசையால் இந்த சதிதிட்டத்திற்கு துணை போகும் ரிச்சர்ட்டின், மூலம் உதய்கிரண் கொலை குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்கு செல்கிறார். அப்படி சிறைக்கு செல்லும் உதய்கிரண், சிறையில் இருந்து தப்பித்துவிடுகிறார். தப்பித்த உதய்கிரணை பிடிக்கும் பொறுப்பை ஏற்கும் புதிய ஐ.பி.எஸ் அதிகாரியாக வருகிறார் மீராஜாஸ்மீன்.

காதலா? கடமையா? என்று வரும் நிலையில், கடமையை மீறாமல் அதே சமயத்தில் காதலனையும் இழக்காமல் எதிரிகளுக்கு எதிராக இந்த பெண் சிங்கம் எப்படி கர்ஜிக்கிறது என்பதுதான் படம். கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இப்படத்தை ஒரு கமர்ஷியல் படமாக இயக்க வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணம் படம் பார்க்கும் அனைவருக்கும் தெரிந்து விடும். அந்த அளவிற்கு பாடல்களிலும், அதை படம்பிடித்த விதத்திலும் கமர்ஷியல் காரத்தை வாரி இறைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தில் இடம்பெறும் வீரமங்கை வேலுநாச்சியாரின் ஓரங்க நாடகம், பாவேந்தர் பாரதிதாசனின் பாடல், விவேக் பேசும் சில வசனங்கள் போன்றவை இது கலைஞருடைய படைப்பு என்று நமக்கு ஞாபகம் படுத்துகிறது. கிட்டதட்ட ஒரு தொலைகாட்சி தொடரை, ஒரு படமாக பார்த்த அனுபத்தை கொடுக்கிறது.

பெண் சிங்கமாக நடித்திருக்கும் மீராஜாஸ்மினுக்கு பெரிதாக நடிக்க வேண்டிய வேலை ஏதும் இல்லை. ஆனால் படத்தில் இடம்பெறும் வேலுநாச்சியார் நாடகத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். ஹூரோவோடு டூயட் பாடுவதில் துவங்கி இறுதியில் வில்லைனை தன் துப்பாகியால் சுடும்வரை தனக்கு கொடுத்த பணியை தரம் உள்ளதாகவே செய்திருக்கிறார் மீராஜாஸ்மின்.

வனத்துறை அதிகாரியாக வரும் உதய்கிரண், கலைஞருடைய வசனத்தின் மூலம் தனது வாய்ஜாலத்தை காட்டியிருக்கிறார். மொழி தெரியாத இந்த மெழுகு பொம்மையின் இந்த முயற்சியை பாராட்டியாகத்தான் வேண்டும். (டப்பிங் வேறு ஒருத்தர்ல)

மூன்றடி விரித்து விட்ட கூந்தலோடு கூர்மையான தமிழ் வார்த்தைகளை பேசி, புதிய வில்லனாக அவதரித்திருக்கும் ரிச்சர்டின் ரிசல்ட்டும் பாஸ்தான். அதுவும் வரதட்சனைக்கு ரிச்சர்ட் சொல்லும் புதிய பெயரும், அதை அவர் சொல்லும் விதமும், சைலன்ட் வில்லன்களுக்கே உள்ள ஒரு ஸ்டைல்  நமக்கு ஒரு வில்லன் கிடைச்சாச்சு பார்க்கலாம் டைரக்டர் கிடைப்பாரான்னு??

நகைச்சுவகைக்காக விவேக் இருக்கிறார். (ஆனால் நகைச்சுவை தான் இல்லை). வழக்கம் போலவே வழ வழ மொக்கை போடுகிறார் விவேக்.. ப்ளீஸ் அவருக்கு யாராவது நகைச்சுவைன்னா என்னனு கோச்சிங் கொடுங்கப்பா இல்லனா நம்மை அவர் என்ன செஞ்சாலும் நாம சிரிக்கிறோம்னு நினைச்சுட போறார்… தேவாவின் இசையில் அத்தனை பாடல்களின் வார்த்தைகளும் செவிக்குள் சென்றுஅவிடுகிறது. அதனால் நம் மனதிற்குள்ளும் அவை நின்றுவிடுகிறது. விஜய்ராகவின் கேமரா படம் பிடித்திருக்கும் பாடல் காட்சிகள் ஒளிப்பதிவு ஏ/சி இல்லாத திரையரங்கை கூட குளிச்சியாக்கி விடுகிறது.

கலைஞரின் படைப்பிற்கு, பாலிஸ் போட்டு அதை பக்குவமாக அளித்திருக்கும் இயக்குநர் பாலி ஸ்ரீரங்கத்தை பாராட்டியாகத்தான் வேண்டும். கலைஞரின் மாறுபட்ட பரிணாமமாக வெளிவந்திருக்கும், இந்த ‘பெண் சிங்கம்’ பெண்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தர மக்களும் பார்த்து ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.
ADVERTISEMENTS