குட்டிப்பிசாசு திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் குறிவைத்து கோடை விடுமுறைக்கு குதூகலமாய்‌ வெளிவந்திருக்ம் எந்திர மனிதன்தான் குட்டிப்பிசாசு.

கதைப்படி ராம்ஜியும், சங்கீதாவும் ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்கள். சங்கீதா பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ‌போகும்போது அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காவேரியும், அவரது கார் டிரைவர் அண்ணன் கஞ்சா கருப்புவும் மர்மமான முறையில் இறந்துபோக, சங்கீதா மீது உயிரையே வைத்திருக்கும் காவேரி, பிரசவத்தில் அவருக்கு ‌பிறக்கும் பெண் குழந்தையின் உடலுக்குள் புகுந்து கொண்டு தன்னையும், தன் அண்ணன் கஞ்சா கருப்புவையும் பணத்தாசையால் கொன்று குவித்த வில்லன் ரியாஸ்கான் அண்ட் கோவினரை பழி தீர்ப்பதுதான் குட்டிப்பிசாசு படத்தின் மொத்த கதையும். இதில் வித்தியாசம், காவேரியின் ஆவி பேபி கீத்திகாவின் உடம்புக்குள் புகும் அதே நேரம், கஞ்சா கருப்புவின் ஆவி உயிருடன் இருந்தபோது அவர் ஓட்டிய காருக்குள் புகுந்து கொண்டு அவ்வப்போது கார் மனிதனாக உருமாறி மெகா சைஸ் எந்திர மனிதனாகி வில்லன் கோஷ்டியை போட்டுத் தாக்குவதுதான் சிறப்பு! படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கும் இந்த கார் மனிதன் வரும் காட்சிகளுக்காகவே இயக்குனர் கம் தயாரிப்பாளர் இராம. நாராயணனை பலமுறை பாராட்டலாம்.

[gallery columns="4" orderby="rand"]

பலகோடி போட்டு கிராபிக்ஸ், அனிமேஷன் என எக்கச்சக்க செலவுகளை இழுத்து வைத்து எந்திரன், எந்திர மனிதன் என தயாரிப்பாளர்களை நடு வீதிக்கு இழுத்து வரும் இயக்குனர்களுக்கு மத்தியில் சிம்பிளாக, அதேநேரம் செம ஸ்‌டைலாக ஒரு கார் மனிதனை கண்டுபிடித்து கலக்கியிருக்கும் இராம நாராயணன் இஸ் கிரேட்!

நெற்றி நிறைய குங்குமப் பொட்டுடன் கிணத்து காளி அம்மனாக கிணற்றுக்குள் இருந்து வெளிவந்து ஊரை காக்கும் ரம்யா கிருஷ்ணனும் சரி, குள்ள குடுகுடுப்பைகாரனாக வந்து பயமுறுத்தும் காதல் தண்டபாணியும் சரி, படத்தின் ப்ளஸ் பாயிண்ட்டான கார் மனிதன் மாதிரியே கலக்கி இருக்கின்றனர். ராம்ஜி, சங்கீதா, நாசர், பேபி கீத்திகா, கஞ்சா கருப்பு, ரியாஸ்கான் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு. போலீஸ் அதிகாரி லிவிங்ஸ்டனும் வழக்கம்போலவே பலே பலே நடிப்பில் பளிச்சிடுகிறார். தேனிசைத் தென்றல் தேவா குழந்தைகளுக்கான குத்தாட்டத்தையும், கரைத்து குடித்துள்ளார் இப்படத்தின் மூலம். கே.எஸ்.செல்வராஜின் கேமராம் படத்திற்கு பெரிய பலம். லாஜிக் இல்லாத கிராபிக்ஸ் என்றாலும் ரசிக்க முடிகிறது. இதற்கு கேமராவும் ஒரு காரணம்!

மொத்தத்தில் அருந்ததீ, 2010 என டப்பிங் படமென்றாலும் உரிய நேரத்தில் ரீலிஸ் செய்து வெற்றி பெறும் இராம.நாராயணனின் நேரடி படமான "குட்டிப்பிசாசு" குழந்தைகள் நினைத்தால் "வசூல் பிசாசு"!
ADVERTISEMENTS