பயம் அறியான் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஆக்ஷன் சப்ஜெக்ட் எனும் பெயரில் வழக்கம்போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கும் ரவுடி - போலீஸ் கதைதான். அதிலும் கூட அதிகப்படியான ஆபாசத்தையும் சேரத்து அரைத்து முகம் சுளிக்க வைத்திருப்பதுதான் பயம் அறியான் படத்தின் ஹைலைட்.

பத்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து பிள்ளை பட்டினி கிடந்து விடக்கூடாது என பாடுபடும் தாய்க்கு பிறந்த ஊதாரி உதவாக்கரை பிள்ளை ஹீரோ மகேஷ் ராஜா. அவரையும், அவரது நண்பர்களையும் ஆசை நாயகிக்காக ஆசை ஆசையாக மோசடி ‌பல செய்து சொத்து சேர்க்கும் போலீஸ் அதிகாரி கிஷோர், தனது அண்டர்கிரவுண்ட் வேலைகளுக்கு அல்லக் கையாக பயன்படுத்திக் கொண்டு கொலை, ‌கொள்ளைகளில் ஈடுபடுத்துகிறார். இதில் கிடைக்கும் துட்டில் மது, மாது என கூத்தும், கும்மாளமுமாக வாழும் மகேஷ் கண்ணில் நாயகி உதயதாரா படுகிறார். கல்லூரி மாணவியான அவரிடம், தன் உடைந்த இங்கிலீஷ் மூலம் காதல் வலைவீசி கடுப்பேற்றுகிறார் (நம்மையும்தான்) ஹீரோ!. இருவரும் ஒருவழியாக ஈருயிர், ஓர் உடலாக ஆகும் தருணத்தில் மகேஷ் ராஜாவின் குரூப்பில் உள்ள பாய்ஸ் மணிகண்டனை உசுப்பேற்றி இவருக்கு எதிராக திருப்பி விடும் போலீஸ் கிஷோர், மணிகண்டன் தன் ஆசை நாயகியை அடைந்த குற்றத்திற்காக இவரையும் போட்டுத் தள்ள துரத்துகிறார். கிஷோர் கொன்றாரா? மகேஷ் வென்றாரா? உதயதாரா என்ன ஆனார்? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு ரசிகர்களை பற்றிய பயம் அறியாமல் விடை சொல்கிறது மீதிக்கதை!

மகேஷ் ராஜா, உதயதாரா, கிஷோர், மணிகண்டன், தேவி கிருபா, அஸ்வதி, சரண்யா, பொன்னம்பலம், காதல் சுகுமார், கொட்டாச்சி உள்ளிட்ட ஒருடஜன் தெரிந்த - தெரியாத, அறிந்த - அறியாத நட்சத்திரங்களில், உதயதாராவும், பொறுக்கி போலீஸ் கிஷோரும் மட்டுமே ஓரளவு ஜொலிக்கிறார்கள். அதிலும் கிஷோர் முகம் முழுக்க கறுப்பு பூசிக் கொண்டு பண்ணும் காட்டுமிராண்டித்தனங்கள் சற்றே படத்திற்கு த்ரில்லையும், திருப்பத்தையும் தருகின்றன. நமக்கு சற்றே திருப்தியை தருவதும் இவர்தான்.  இவரை மாதிரியே ஆர்.சரவணனின் ஒளிப்பதிவும், பி.சி.சிவனின் இசையும் சற்றே ஆறுதல்.

பாசக்கார அம்மாவாக மிகையான நடிப்பால் சரண்யா ஒருபக்கம் ஆரம்ப காட்சிகளில் பாடாய் படுத்துகிறார் என்றால், மற்றொரு பக்கம் சுகுமார், கொட்டாச்சி உள்ளிட்டவர்கள் காமெடி எனும் பெயரில் காம நெடியாக கடிப்பது மேலும் கொடுமை.

இப்படத்தில் ஒரு காட்சியில், பொன்னம்பலம், "கஷ்டப்பட்டு கொலை பண்ணி சம்பாதித்த காசு... பார்த்து பத்திரம்" என்பார். இப்படியொரு டயலாக்கை இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேச்சுக்காவது இயக்குனர் பிரதீஷிடம் சொல்லியிருந்தால் ஒருவேளை பயம் அறியான், பார்க்கும்படி இருந்திருக்கும்.
ADVERTISEMENTS