கச்சேரி ஆரம்பம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ஜீவா- பூனம் பஜ்வா நடித்திருக்கும் கச்சேரி ஆரம்பம் படமும், தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான குட்டி படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதைதான். அதாகப்பட்டது..., ஹீரோயினை சர்வ வல்லமை படைத்த ஒருவர் வற்புறுத்தி காதலிப்பார். ஹீரோ குறுக்கே புகுந்து அவருக்கு நன்மைகள் செய்வது மாதிரியும், காதல் தூது போவது மாதிரியும் நடித்து ஹீரோயினை கரம் பிடிப்பதே மேற்படி இரண்டு படங்களின் கதையும்!

கதைப்படி, ஜீவா ஊரில் வசதியான வீட்டுப்பிள்ளை. அப்பாவிற்கு அடங்காத பிள்ளை. குடும்பத்தில் ‌கோபித்துக் கொண்டு சிட்டிக்கு வருகிறார். வந்த இடத்தில் பஜாரில் உள்ள வடிவேலு கடையில் வேலை பார்‌த்துக் கொண்டே, தன்னை ஒருமுறை லாரி விபத்தில் இருந்து காபந்து செய்யும் பூனம் பஜ்வாவை காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் பூனமோ... சிட்டியின் பெரிய தாதா சக்கரவர்த்தியால் ஏற்கனவே காதலிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஹவுஸ் அரஸ்ட்டில் வாழ்ந்து வருகிறார். அத்தனை பெரிய ரவுடியை சாதுர்யமாக எதிர்த்து ஜீவா, பூனத்தை கைப்பிடித்தாரா? இல்லையா? என்பது சுவாரஸ்யமான மீதிக்கதை!

வெகுளியாகவும், வெகுண்டெழுந்தும் வித்தியாசமாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார் ஜீவா.

பூனம் பஜ்வா, ஜேடி சக்கரவர்த்திக்கு பயந்து ஜீவா மீது இருக்கும் காதலை சொல்லாமல் அமைதியாக நடக்கும்போதும் சரி, ஆர்ப்பாட்டமாக பாடல் காட்சிகளில் ஆடும்போதும் சரி... அசத்தல். வில்லன் ஜேடி சக்கரவர்த்தி அமைதியான, அழகான கொடூரம். வடிவேலு வழக்கம்போல கலகல!

காட்சிக்கு காட்சி பழைய படங்களுடன் சம்பந்தப்படுத்தி ஜீவா கொடுக்கும் ஓப்பனிங் நல்ல காமெடி புதுமை. காதல் தண்டபாணி - பூனம் மீது காதல் கொள்வதும், கலாட்டா செய்வதும் சில இடங்களில் கடி, பல இடங்களில் காமெடி!

டி.இமானின் இசையும், பாடல்களும், வைத்தியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம். க்ளைமாக்ஸில் சக்கரவர்த்தி மனம் திருந்தி ஜீவா - பூனம் பஜ்வா ஜோடியை சேர்த்து வைப்பது தவிர மற்ற அத்தனை வித்தியாசங்களும் விறுவிறுப்பு. திரைவண்ணன் இயக்கத்தில் கச்சேரி ஆரம்பம் - காமெடி பிம்பம்.
ADVERTISEMENTS