தலக்கோணம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
12
பிரபல இயக்குநர் சமுத்திரகனியின் உதவி இயக்குநர் எனும் அடையாளத்தோடு களம் இறங்கி, புதுமுகங்களை வைத்து ‛தலக்கோணம்' படம் பண்ணியிருக்கிறார் புதியவர் கே.பத்மராஜ்! இவர், குருவை மிஞ்சிய சிஷ்யனா.? ஆசானின் சாயல் இல்லா மாணவனா? என்பதை இனி இங்கு தலக்கோணம் விமர்சனத்தில் மூலம் பார்ப்போம்...

கதைப்படி, தலக்கோணம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாத கும்பல், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத கடுப்பில் முதல்நிலை மந்திரியின் மகளை கடத்த திட்டமிடுகிறார்கள். அதன்படி தங்கள் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கு வரும் மந்திரியின் மகளும், நாயகியுமான புதுமுகம் ரியா நட்சத்திராவையும், அவரது நண்பரும், காதலருமான நாயகர் ஜித்தேசையும் கடத்துகின்றனர். தீவிரவாதிகளை அழித்து மந்திரியின் மகளை காபந்து செய்ய தலக்கோணம் காட்டிற்குள் நுழையும் போலீஸ் படை, தீவிரவாதிகளை ஒழிப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட மந்திரியின் மகளை தீர்த்துக்கட்ட அதிக அக்கறை காட்டுகிறது. காரணம்.? வேறுயார் மந்திரியே தான்!

நாயகரும், நாயகியும் ஒருபக்கம், தங்களை கொல்லத்துடிக்கும் தீவிரவாத கும்பலிடமிருந்தும், மற்றொருபக்கம் மந்திரியின் கையாட்களாக செயல்படும் காவல்துறையினரிடமிருந்தும் உயிர் தப்பி பிழைத்தனரா.? இல்லையா..? என்பது தான் தலக்கோணம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! இந்தக்கதையுடன், அப்பாவே பெற்ற மகளை கொல்ல சொல்லும் சஸ்பென்ஸ், காதல் நட்பு, துரோகம், வீரம் எல்லாவற்றையும் கலந்து கட்டி தலக்கோணத்தை படமாக்கியிருக்கிறார்கள். அது இயக்குநர் உள்ளிட்ட ஒருசில தொழில்நுட்ப கலைஞர்களின் தலைகணத்தால் சற்றே கோணல் மாணல் ஆகியிருப்பது தான் தலக்கோணத்தின் சின்னதொரு பலவீனம்!

கதாநாயகர் ஜித்தேஷ் தனது முந்தைய படமான ‛சிக்கி முக்கி'யில் நடித்திருப்பதைக்காட்டிலும் நிறைய உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். பாட்டு, பைட் காட்சிகளில் நம்பிக்கை தரும் நாயகராக தெரிகிறார்.

அறிமுக நாயகி ரியா நட்சத்திரா நடிப்பை காட்டிலும் இளமை துடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்.

கஞ்சா கருப்பு, பாண்டு, காதல் அருண், டெலிபோன் ராஜ், ‛‛மனதை திருடிவிட்டாய்'' இயக்குநர் நாராயணமூர்த்தி உள்ளிட்டவர்களின் காமெடி கூட்டணியில் சிரிப்பை விட கடுப்புதான் அதிகம் வருகிறது.

கோட்டா சீனிவாசராவ், பெரோஸ்கான், திண்டுக்கல் மெய்யப்பன், சண்முக சுந்தரம், நம்பிராஜ் பாலா, ஆஷா ரேகா உள்ளிட்ட நட்சத்திரங்களில் கோட்டா சீனிவாசராவும், அவரது தலக்கணமான நடிப்பும் தான் தலக்கோணத்தின் பெரும்பலம்! அதிலும் தன் மனைவியை பார்க்கக்கூடாத தருணத்தில் பார்த்து மனம் பதைபதைக்கும் காட்சியில் மனிதர் நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். பலே, பலே!

யூ.கே.செந்தில்குமாரின் உதவியாளர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, தலக்கோணம் காட்டை, இதுவரை யாரும் காட்டாத விதத்தில் காட்டி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சுபாஷ்-ஜவகர் சகோதரர்களின் இசை ஓ.கே.!

தீவிரவாதிகள் யார்? எந்த அமைப்பை சார்ந்தவர்கள்.? எதற்காக மந்திரியின் மகளை கடத்த களம் இறங்குகின்றனர்? காட்டில் இருக்கின்றனர்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு, இயக்கநர் கே.பத்மராஜா, தன் குருநாதர் சமுத்திரகனி பாணியில் இன்னும் பக்காவாக கதை, திரைக்கதையில் பதில் சொல்லியிருந்தார் என்றால், ‛தலக்கோணம்' இப்படி ‛முதல் கோணமாக' இருந்திருக்காது!

மொத்தத்தில், ‛‛தலக்கோணம்'' - ‛‛முற்றிலும் கோண(ல்)ம்!!''
ADVERTISEMENTS