ஜீவா திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
17பிரபல இளம் நடிகர்களும், நெருங்கிய நண்பர்களுமான விஷாலும், ஆர்யாவும் இணைந்து தங்களது இன்னொரு நண்பரும், முன்னணி இளம் நடிகருமான ஜீவாவின் பெயரையே பட டைட்டிலாக்கி, மற்றொரு வளரும் இளம் நடிகரும், தங்களது நண்பருமான விஷ்ணு விஷால், நாயகராக நடிக்க தயாரித்திருக்கும் படம் தான் ''ஜீவா!''


சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ''ஆடாம ஜெயிச்சோமடா'' படத்தில் 'மேட்ச் பிக்சிங்' எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் கதைக்களம் என்றால் இந்த ''ஜீவா'' படத்தில் கிரிக்கெட் வீரர்கள் செலக்ஷ்ன் கமிட்டியில் நடக்கும் ஜாதிவெறியாட்டம் தான் கரு, கதை, களம் எல்லாம்!


கதைப்படி, சின்ன வயதிலேயே அம்மாவை இழந்து, அந்த சோகத்திலேயே குடிகாரரான அப்பாவுடன் வசித்தாலும், அடுத்த வீட்டு குடும்பத்தின் அரவணைப்பில் வளரும் 'ஜீவா' எனும் விஷ்ணு விஷாலுக்கு குடியிருப்பு சிறுவர்களுடன் சின்னஞ்சிறுவனாக, தெருவில் கிரிக்கெட் விளையாடும் காலந்தொட்டே இந்திய அணிக்காக ஆட வேண்டுமென்பது லட்சியமாக இருக்கிறது.


விஷ்ணுவின் லட்சியத்திற்கு குடிகார அப்பா மாரிமுத்து தடையாக இருந்தாலும், வளர்ப்பு அப்பா சார்லியும், அவரது குடும்பமும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. இதனிடையே பள்ளிபருவத்திலேயே நாயகி ஸ்ரீதிவ்யாவுடனான காதலில் சிக்கி கவனம் தடுமாறும் ஜீவாவை அதாங்க விஷ்ணுவை, கிரிக்கெட்டை காட்டி வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுத்தும் வளர்ப்பு அப்பா சார்லி, விஷ்ணு தொடர்ந்து கிரிக்கெட் க்ளப்புகளில் விளையாட விஷ்ணுவின் அப்பா மாரிமுத்துவிடம் ஸ்பெஷல் பர்மிஷனும் வாங்கி தருகிறார். கிரிக்கெட் க்ளப் என்று தீவிர கவனம் செலுத்தி காதலை மறக்கும் விஷ்ணுவிற்கு அவரது தீவிர உழைப்பும், சூரி, ரஞ்சித் எனும் லஷ்மணன்... உள்ளிட்ட கிரிக்கெட் நண்பர்களின் (என்ன.? பரோட்ட சூரி, கிரிக்கெட்டை பிளேயரா! என அதிர்ச்சியில் 'ஆ' வென வாய் பிளக்காதீர்கள்... அவரும் சீனியர் ப்ளேயராக அந்த பாத்திரத்துடன் படத்தில் அம்சமாக பொருந்தி நடித்திருக்கிறாராக்கும்!) ஒத்துழைப்புடன் ரஞ்சி கோப்பையில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.


அங்குதான் சூடுபிடிக்கிறது கதை! ரஞ்சி கோப்பைக்கு செலக்ட் ஆகும் விஷ்ணுவும், அவரது நண்பர் ரஞ்சித் எனும் லக்ஷ்மணனும் கடைசிவரை சப்ஸ்டியூட்டாக பிற வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுக்கவும், ஜூஸ் எடுத்து போகவும் கேலரியில் அமர வைக்கப்பட்டு, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகியின் ஜாதி வெறிக்கு தீணியாகின்றனர். ஒருவருடம் நண்பர்கள் இருவரும், தலைமை நிர்வாகியின் ஜாதி வெறியால் ரஞ்சி கோப்பைக்கும் செலக்ட் ஆகாமல் போக, அதில் வெகுண்டெழும் நண்பரை பறிகொடுக்கும் விஷ்ணு, கிரிக்கெட்டில் சாதித்தாரா.? காதலியை கரம் பிடித்தாரா.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ''ஜீவா'' படம் மொத்தமும்!


'ஜீவா' வாக விஷ்ணு, நடுத்தர குடும்பங்களில் இருந்து படிப்படியாக முன்னேறி, முன்னணி கிரிக்கெட் ப்ளேயராக வந்த கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட நிஜகிரிக்கெட் வீரர்களை நம் கண்முன் நிறுத்துகிறார் பல காட்சிகளில்! இது ஜீவா படத்தின் பெரும் பலம்!


''திருடுவேன்... ஆனா பொய் சொல்லமாட்டேன்...'' என பேசியபடி அப்பா வாங்கி வைத்திருக்கும் ஒயினை அடிக்கடி திருட்டுத்தனமாக ருசி பார்த்து, ஒருமுறை நாயகர் விஷ்ணுவிடமும் மாட்டிக் கொள்ளும் 'ஜெனி'யாக., கதாநாயகியாக வரும் ஸ்ரீதிவ்யா பாந்தம், பிரமாதம்! பள்ளி பருவ காதலிலும் சரி, பருவ வயது காதலிலும் சரி, தான் அறிமுகமான 'வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை' அடுத்தும் அசராமல் மற்றுமொரு ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. பேஷ், பேஷ்!


சூரி கிரிக்கெட் ப்ளேயரா.? என யோசிக்காமல் போனால் அவரும் சில பல வீரர்களை தன் நடை, உடை, பாவனைகளில் வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியிருப்பது புரியும்! இதுமாதிரி குளோசிங், டீமையே குளோஸ் பண்ணும் பேட்ஸ்மேன்களும் நம் இந்திய அணி டீமிலும் உண்டுதானே.?! இந்த சீனியரால் படத்தில் காமெடி சிக்ஸர்களுக்கும் பஞ்சமில்லை!


வீரர் ரஞ்சித்தாக வரும் லஷ்மண், சார்லி, மாரிமுத்து, தயாரிப்பாளர் அம்மா.டி.சிவா, க்ளைமாக்ஸில் முகம் காட்டும் ஆர்யா, நிஜவீரர் இர்பான் பதான் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


மதியின், மதிநுட்பமமான ஒளிப்பதிவு, டி.இமானின் இதமான இசை, ரூபனின் சாதுர்யமான படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் என்.சுசீந்திரனின் எழுத்து-இயக்கத்தில் ''ஜீவா'' கிரிக்கெட் பேக்ரவுண்டில் 'ஜிலிரீ'ட வைக்கின்றார்! அப்பப்பா இயக்குநர் சுசீந்திரனுக்கு தான், எத்தனை தைரியம், சாதுர்யம். ஒரு பாதிக்கப்பட்ட நிஜ கிரிக்கெட் பிளேயரை அருகில் வைத்துக்கொண்டு, நம்மூர் கிரிக்கெட் செலக்ஷ்ன் கமிட்டியில் நடக்கும் தில்லு முல்லுகளை கதை திரைக்கதையாக்கியிருப்பாரோ.? எனும் அளவிற்கு மனிதர் என்னமாய் அசத்தியிருக்கிறார்..!!


மொத்தத்தில், ''உண்மையா உழைக்கிறவங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திகிட்டே இருக்கும்'' என இப்படத்தில் வரும் வசனம் போன்றே, ''ஜீவா''விற்கும் ரசிகர்களிடத்தில் ''லம்ப்பா'' அதிர்ஷ்டம் நிச்சயமிருக்கு!!
ADVERTISEMENTS