ஆள் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
22‛‛சாமானியன் ஒருவன்... எப்படி.? தீவிரவாத கும்பலில் சிக்கி சின்னாபின்னமாகிறான்.?!'' என்பதை சொல்லும் படம் தான் ‛ஆள்'. வித்தியாசமான கதைகளை, படங்களை... விரும்பி செய்யும் நடிகர் விதார்த்தின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு வித்தியாசமான படமான ‛ஆள்' எந்தளவிற்கு? விதார்த்துக்கு வெற்றியை தேடித்தந்திருக்கிறது? எனப் பார்ப்போம்...

தமிழகத்தை சார்ந்த அமீராகிய விதார்த், வடகிழக்கு மாநில கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணி புரிகிறார். அம்மா, தம்பி, தங்கை என ஊரில் இருக்கும் குடும்பத்தின் மீது உயிரையே வைத்திருக்கும் விதார்த்தின் கண்முன்னே, அவரது கல்லூரி மாணவர் ஒருவரை மதவெறியால் அடித்து நொறுக்குகிறது ஒரு கும்பல். அந்த கொலைவெறி கும்பலிடமிருந்து அந்த இஸ்லாமிய மாணவனை காபந்து செய்யும் விதார்த், தன் அறையிலேயே அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.

மதவெறி கும்பலிடமிருந்து தன்னை காபந்து செய்யும் பேராசிரியர் விதார்த்தை, தீவிரவாதிகள் தொடர்பில் இருக்கும் அந்த மாணவன், தீவிரவாத செயல்களில் தள்ளி, விதார்த்தின் உயிருக்கே உலை வைக்கும் கதை தான் ‛ஆள்' படத்தின் மீதி கதை, களம் எல்லாம்! தமிழகத்தை நாசம் செய்யும் நோக்கத்துடன் விதார்த்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தீவிரவாத கும்பலின் எண்ணம் ஈடேரியதா? இல்லை விதார்த்தின் உயிருக்கு உலையானதா.? என்பது க்ளைமாக்ஸ்!

ஹீரோ விதார்த்தின் அமீர் பாத்திரம் இண்டர்வெல் வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன்பிறகு மீதிப்படத்திலும் அந்த அமீர் எனும் விதார்த் பாத்திரம் எதையும் சாதிக்காமல் உயிரை விடுவது ‛ஆள்' படத்தின் பெரும் பலவீனம்! ஆனால் அதையும் மீறி குடும்பபாசம் நிரம்பிய சாமான்யனாக விதார்த், தான் ஏற்றுள்ள அமீர் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளதற்காக பாராட்டலாம்.

கதாநாயகி கார்த்திகா ெஷட்டிக்கு நடிக்க வாய்ப்பும், உரிய முக்கியத்துவமும் தரப்படவில்லை. விதார்த் சந்திக்கும் முகம் தெரியாத நபர்களில் தொடங்கி நாயகன், நாயகியின் உற்றார், உறவினர் வரை... எல்லோரும் நடை, உடை, முகபாவனைகளில் ஒரே மாதிரி இருப்பதும், நடிப்பதும் செம போர்!

ஜோஹனின் பின்னணி இசையும், உதய்குமாரின் ஒளிப்பதிவும், ஆனந்த் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்திற்கு பக்க பலமாக இருக்க பாடுபட்டு இருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸில் சாகப்போகும் விதார்த், தனக்கு பிடித்த தேசிய கொடியை பார்த்து கண்மூடியபடி வெடிகுண்டுக்கு இரையாகும் காட்சியிலும், வடசென்னை டயர் ரீட்ரேடிங் ஏரியாவில் நடக்கும் சண்டைக்காட்சியிலும் மட்டுமே பலமாக தெரியும் ‛ஆள்' மற்ற இடங்களில் ரசிகர்களை ‛தேள்' ஆக கொட்டுகிறது!

ஆகமொத்தத்தில், ‛ஆள்' - ‛ஆல்' சென்டருக்கும் பிடிக்குமா தெரியவில்லை.?!
ADVERTISEMENTS