சிகரம் தொடு திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
26கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, விக்ரம்பிரபு நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், தூங்காநகரம் பட இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், யுடிவி மோஷன் பிக்சர்ஸின் இந்த வாரத்து ரிலீஸ்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் சிகரம் தொடு. வசூலிலும், வரலாற்றிலும் தொட்டதா சிகரம்.? பார்ப்போம்...


ஒரு கலவரத்தில் தன் ஒற்றை காலையும், உமையொரு பாகமான மனைவியையும் இழந்து தவிக்கும் போலீஸ்காரர் சத்யராஜின் வாரிசு விக்ரம் பிரபு. தன் ஒற்றை வாரிசை போலீஸ் துறையில் பணியமர்த்தி ஒரு போலீஸ்காரனாக தன்னால் சாதிக்க முடியாததை தன் மகன் விக்ரம்பிரபு மூலம் சாதிக்க ஆசைப்படுகிறார் அப்பா. தன் தாயையும், அப்பா, தன் காலையும் இழக்க காரணமானது போலீஸ் துறை தான் என்பதால் அத்துறையை வெறுக்கும் விக்ரம் பிரபு, அப்பாவின் திருப்திக்காக உடற்பயிற்சி, போலீஸ் தேர்வு என ஒருபக்கம் போலீஸ் வேலைக்கு முயற்சித்துக் கொண்டே, மற்றொரு பக்கம் வங்கி பணிக்கான முயற்சிகளிலும் தீவிரமாக இருக்கிறார்.


இந்நிலையில் ஒரு வடக்கு இந்திய ஆன்மிக யாத்திரையில் கதாநாயகி மோனல் கஜாரை சந்திக்கும் விக்ரம் பிரபு, அவர்வசம், தன் நிசத்தை இழக்கிறார். டாக்டரான மோனலுக்கும், போலீஸ் புருஷன் என்றால் உவ்வே என்று குமட்டிக்கொண்டு வருகிறது. இதுமாதிரி சூழலில் ஒருகட்டத்தில், நாயகருக்கு திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கிடைக்கிறது. ஒருமாத காலம் அப்பாவிற்காக பணியில் இருந்துவிட்டு, அதன்பின் தன் காதலிக்காகவும், வங்கி பணி கனவிற்காகவும் போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிடும் முடிவில் வேலையில் சேருகிறார் விக்ரம்! ஆனால் எதிர்பாராத விதமாக சென்னை சிட்டியே தேடும் ஏடிஎம்., கொள்ளையர்களான கெளரவ்(படத்தின் இயக்குநரே தான்...) கோஷ்டியினரை துரத்தி பிடிக்கும் ஹீரோ, அவர்களால் தொடர்ந்து போலீஸ் பணியை விரும்பி வேட்கையுடன் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார். அது எப்படி.? ஏன்.? எதற்கு? என்பதற்கும், காதலி மோனல் கஜாரும் கட்சி மாறினாரா.? விக்ரமின் காதல் நிறைவேறியதா.? காட்சிகள் மாறியதா..? என்பதற்கும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது.! சிகரம் தொடு படத்தின் மீதிக்கதை!


முரளி பாண்டியனாக வரும் விக்ரம் பிரபு, நிஜத்தில் பிரபுவின் மகன் என்றாலும், உயரம், உருவம், கம்பீரம்... உள்ளிட்டவைகளில் சத்யராஜின் மகனாகவும், சிகரம் தொடு படத்தில் சக்கைபோடு போட்டிருக்கிறார். போலீஸ் கட்டிங், டிரையினிங் உள்ளிட்ட காட்சிகளில் அவர் காட்டும் மிடுக்கு... இன்றைய இளம் நிஜ போலீஸ் அதிகாரிகளையே கண்முன் நிறுத்துகிறது. காதல் காட்சிகளிலும், சதீஷூடன் பங்கெடுக்கும் காமெடி காட்சிகளிலும் தான் ஒரு பாரம்பரியமிக்க தேர்ந்தெடுத்த நடிகன்... என்பதை ஃபிரேம் டூ ஃபிரேம் நிரூபித்திருக்கிறார் விக்ரம் பிரபு.


கதாநாயகி மோனல் கஜார், அழகு பதுமையாக ஹோம்லி குல்கந்தாவாகவும், கிளாமர் கிளியாகவும் ரசிகர்களுக்கு பி.பீ எகிற செய்கிறார்.


காமெடி சதீஷ் டபுள் மீனிங்கில் ஆங்காங்கே சந்தானத்தை(இப்படத்தில் இல்லாத...) மிஞ்சி விடுகிறார்.


போலீஸ் டிஜிபி.,யாக வரும் முன்னாள் காவல்துறை அதிகாரி நடராஜன், எஸ்.ஐ., செலக்ஷ்ன் ஆபிஸராகவும், கதாநாயகியின் அப்பாவாகவும் வரும் ரம்மி பட இயக்குநர் பாலகிருஷ்ணன், கோவை சரளா, வங்கி அதிகாரியாக வரும் கமலா திரையரங்கு அதிபர் சிவ வள்ளியப்பன், தாத்தாவாக வரும் கல்யாணமாலை மோகன், காமெடி போலீஸ் மனதை திருடிவிட்டாய் பட இயக்குநர் நாராயண மூர்த்தி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


டி.இமானின் இசையில் அன்புள்ள அப்பா அப்பா... பாடலில் தொடங்கி அத்தனை பாடல்களும் சுகராகம். இருட்டிலும் மிளிரும் விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு, மணிரத்னம் படங்களையே சில இடங்களில் பீட் செய்து விடுகிறது என்றால் மிகையல்ல! அதுவும் அந்த பீச் ஷாட் யப்பா!! அதேமாதிரி ஹரித்துவார் மற்றும் இமாலய மலை காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறது கேமரா.!!


லைப்புல எல்லோருக்கும் ஜெயிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும், அதை சரியாக பயன்படுத்தி ஜெயிச்சிடணும்..., ஈசிஜி மெஷின் கூட ஏற்ற இறக்கத்தோடு ஓடினால் தான் உயிர் இருக்கிறதா அர்த்தம்., அது ஒரே நேர்கோட்டில் ஓடினா செத்துட்டதா அர்த்தம்... உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற வசன வரிகளிலும், காட்சி அமைப்புகளிலும் நம்மை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் கெளரவ், வில்லனாக ஏடிஎம்., கொள்ளையனாக நடித்து கொல்வதை தவிர்த்திருக்கலாம்!


அம்மாம்பெரிய இன்டர்நேஷனல் லெவல் ஏ.டி.எம்., கொள்ளையை துப்புதுலக்க மொத்த சிட்டியிலும் புத்தம் புதிய எஸ்.ஐ., விக்ரம் பிரபுவை விட்டால் வேறு ஆளே இல்லாத மாதிரி, தமிழ் சினிமா வழக்கப்படி, விக்ரம் பிரபு மட்டுமே அந்த கேஸை டீல் செய்வது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும்... வட இந்திய ஆன்மிக யாத்திரை, ஏடிஎம் கொள்ளை என சிகரம் தொடு - புதுமையாக சிகரம் தொட்டிருக்கிறது!
ADVERTISEMENTS