இரும்புக்குதிரை திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
28முரளியின் வாரிசு அதர்வா நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்! மாற்றத்திற்கான படமோ., மாற்று சினிமாவுக்கான படமோ அல்ல... இந்த ‛இரும்புக்குதிரை என்பது தான் வேதனை!சிலருக்கு குதிரை, குதிரை ரேஸ் பிடிக்கும்... பலருக்கு குதிரை மாதிரி பெண்களை பிடிக்கும்... ஒரு சிலருக்கு ‛இரும்புக்குதிரை மாதிரி பறக்கும் பைக்குகளை பிடிக்கும்... அப்படி நாயகி ப்ரியா ஆனந்துக்கு விதவிமான பைக்குகளையும், அதன் சப்தங்களையும் பிடிக்கிறது. அவருக்காகவே ப்ரியாவின் காதலர் அதர்வா, தன் வாழ்க்கையில் பெரும் இழப்பு ஏற்பட காரணமான ‛டுக்காட்டி ரேஸ் பைக்கையே வாங்குகிறார்! அப்புறம்? அப்புறமென்ன.? அந்த பைக்கின் பின்னால் காதலி ப்ரியாவை வைத்துக் கொண்டு சாலைகளில் பறக்கிறார். எஞ்சிய நேரங்களில் ரேஸ்., சேஸ்... என்று புகுந்து புறப்படுகிறார். இதில் எதிர்பாராமல் வில்லனை சந்திக்கும் அதர்வா, அவரிடம், காதலி ப்ரியாவையும், தன் பிரியத்திற்குரிய பைக்கையும் இழக்கும் சூழல். இரண்டையும் வில்லனுடனான சவாலில் ஜெயித்து எப்படி மீட்கிறார்! என்பதுதான் ‛இரும்புக்குதிரை படத்தின் தலையை சுற்றி மூக்கை தொடும் முழுநீளக்கதை!

அதர்வா, சிக்ஸ்பேக், டுக்காட்டி பைக் என ஹீரோவாக நிற்கிறார். ஆனால் கேரக்டராக ஜொலிக்கவில்லை. தன் படத்தில் ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி(லட்சுமி ராய்) மாதிரி சதைகளை நம்பாமல் இனியாவது அதர்வா, நல்ல கதைகளை கேட்டு நடிக்க வேண்டுமென்பது நம் அவா மட்டுமல்ல... ரசிகர்களின் விருப்பமும்கூட! செய்வாரா அதர்வா? பொறுத்திருந்து பார்ப்போம்!!

ப்ரியா ஆனந்த், வழக்கம்போலவே வட இந்திய நடிகைகளையும் தாண்டி கவர்ச்சி காட்டி இருக்கிறார். ஆனால், படத்தில் பைக் விற்கும் பந்தா பெண்ணாக வரும் லட்சுமிராயின் திரட்சிக்கும், கிளர்ச்சிக்கும் முன் ப்ரியாவின் பிசாத்து கவிச்சி சாரி, கவர்ச்சி பிசுபிசுத்து போகிறது பாவம்! ப்ரியாவிற்கு லட்சுமி பெட்டர்!

ஏழாம் அறிவு ஜானியின் வில்லத்தனம் தான் படத்தின் பெரும்பலம்! அதுவும் எப்படியும் இறுதியில் ஹீரோ தான் ஜெயிப்பார்... என்பதை உணரும் போது பலவீனமாகிவிடுகிறது. ஆனாலும், ரியல் லேடி ரேஸ் பைக்கர் அலிஷா அப்துல்லா, வில்லன் ஜானியின் ஜோடியாக பைக் ஓட்டி மிரட்டுவதும், இன்னும் சில விஷயங்களில் ரசிகர்களை மிரள செய்வதும் ஆறுதல்!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் சரி, பாடல்கள் இசையும் சரி மிரட்டவில்லை, ரசிகர்களை தியேட்டரவை விட்டு விரட்டுகிறது. ஒளிப்பதிவாளர் குருதேவின் ஒளிப்பதிவு கச்சிதம்!

தேவதர்ஷினியின் டிராமாட்டிக் நடிப்பு, கதையிலும், திரைக்கதையிலும் இல்லாத விறுவிறுப்பு, டுக்காட்டி பைக்கை யார் வைத்திருந்தாலும் அவர்களை விரட்டிப்பிடிக்கும் வில்லன் ஜானி, ஒருகாட்சியில், கைக்கெட்டிய தம்பியின் டுக்காட்டி பைக்கை தான், ஹீரோவிடம் விட்ட சவாலுக்காக மறந்துவிட்டு நாயகி ப்ரியா ஆனந்த்தை மட்டும் தூக்கி செல்வதும், அப்புறம் என் பைக்கை திரும்பி கொடு... என்று ஹீரோவிடம் கேட்பதும், கெஞ்சுவதும் கொஞ்சம் மிஞ்சுவதும் செம காமெடி. இதுமாதிரி மிகப்பெரும் ஓட்டைகள்... புதியவர் யுவராஜ் போஸின் இயக்கத்தில், ‛இரும்புக்குதிரையை நொண்டிக்குதிரையாகவும் சண்டிக்குதிரையாகவும் ஆக்கிவிடுகிறது.

மொத்தத்தில், ‛‛இரும்புக்குதிரை - சண்டிக்குதிரை - நொண்டிக்குதிரை! -

ADVERTISEMENTS