மேகா திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
34இளையராஜாவின் இசையை நம்பி லவ், த்ரில், திகில், சஸ்பென்ஸ்...எல்லாம் கலந்த கலப்படமாக, கலர்ஃபுல் படமாக, கமர்ஷியல் படமாக வந்திருக்கும் திரைப்படம் தான் மேகா!


கதைப்படி, ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் வளர்ப்பு மகனாக வருகிறார் ஹீரோ அஸ்வின். வளர்ந்ததும் இவர், காவல்துறை தடயவியல் நிபுணராகவும் ஆகிறார். அஸ்வின் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்த சிலநாட்களிலேயே வளர்ப்பு அப்பா மர்மமாக இறக்கிறார். அப்பாவின் மர்ம மரணத்திற்கு காரணமானவரை கண்டுபிடிக்கும் அஸ்வின், அதற்குரிய ஆதாரங்களை தேட ஆரம்பிக்கிறார். இதுஒருபக்கம், மற்றொருபக்கம்., நாயகி சிருஷ்டி டாங்கே(இவர் முன்பே சில தமிழ் படங்களில் முகம்காட்டிய மும்பை அம்மணி தான்...) உடனான அஸ்வினின் காதலும், அதனால் அஸ்வினும், சிருஷ்டியும் சந்திக்கும் பிரச்னைகளுமாக மேகா வேகமெடுக்கிறது. இறுதியில் காதலிலும், வளர்ப்பு அப்பாவை கொன்றவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தருவதிலும் அஸ்வின் வென்றாரா.? இல்லையா...? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமாக படமாக்கப்பட்டிருக்கும் மீதிக்கதை!


ஒரு மழைக்காலத்தில் சந்தித்து கொள்ளும் நாயகரும், நாயகியும் கண்டவுடன் காதல் கொள்கின்றனர். தடய அறிவியல் துறையை சார்ந்த அதிகாரியான நாயகர் அஸ்வின், நாயகி சிருஷ்டியுடனான காதல், தடயம் அறிதல் எனும் பெயரில் துப்பறிதல், வில்லன்களிடம் அடி, உதைபடுதல்...என்று வழக்கமான பாணியிலேயே கதை சொல்லப்பட்டிருந்தாலும் முதல் காட்சியில் வரும் மழை, குடை, ஈரமான மண்வாசனை உள்ளிட்ட குளு குளு விசயங்கள் படம் முழுக்க பரவி, விரவிகிடப்பதும், தடய அறிவியல் துறை அதிகாரியின் காதல், துப்பறிதல்... என புதிய பாணியில் படம் முழுக்க ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருப்பதிலும் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.


கதாநாயகராக அஸ்வின் கலக்கி இருக்கிறார். கதாநாயகி சிருஷ்டியின் நடை, உடை, பாவனைகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. அதிலும் அந்த திருமண மண்டப காட்சியில் சிருஷ்டி, திருஷ்டி சுற்றி போடுமளவிற்கு நடித்திருக்கிறார். அங்கனா ராய், ஒய்.ஜி.மகேந்திரன், ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், விஜய்குமார் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


முகிலே மேகமோ செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா.... பாடலும் இளையராஜா குரலில் ஒலிக்கும் ஜீவனே ஜீவனே... பாடலும் ஜீவனுள்ள பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் காட்டிலும், இளையராஜாவின், ரீ-மிக்ஸ் புத்தம் புது காலை பொன்னிற வேளை... பாடல் சுகராகம். ஆனால் அந்த பாடலை படமாக்கிய விதத்தில் தொடங்கி, இன்னும் சில விஷயங்களில் கார்த்திக் ரிஷி விட்டிருக்கும் கோட்டை, பெரிய ஓட்டை இல்லையென்றாலும் மேகா மாதிரி நல்ல படத்திற்கு வாகா(ய்) இல்லை!


மொத்தத்தில், மேகா - ஆஹா ஓஹோ என இல்லை என்றாலும், வெந்தும் ''வேகா''மலும் இல்லை! ''மேகா இசைஞானியின் ராகா!''
ADVERTISEMENTS