புதியதோர் உலகம் செய்வோம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
38
‛‛லஞ்சம், ஊழல் உள்ளிட்டவைகளை உங்கள் வீட்டில் இருந்து ஒழிக்க தொடங்குங்கள்...'' எனும் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே.அப்துல் கலாமின் வாக்கியத்தை வைராக்கியமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம்!லஞ்சம் வாங்கும் அப்பாக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் அம்மாக்களையும், குழந்தைகள் திருத்தும் குதூகலமான கதை தான் ‛புதியதோர் உலகம் செய்வோம்' படம்!

ஆஜித், பிரவீன், அனு, யாழினி ஆகிய நான்கு இளம் சிறரார்களும் நண்பர்கள். ஆஜித், பிரவீன் இருவரது அப்பாக்களும் செய்யும் ஊழலால், சிறுவர்களது தோழியின் குடும்பம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அப்பாக்களுக்கு துணையாக இந்த விஷயத்தில் இருக்கும் தங்களது அம்மாக்களையும், தவறு செய்த அப்பாக்களையும் ஆஜித், பிரவீன் இருசிறுவர்களும் எப்படி திருத்த முயற்சிக்கிறார்கள் என்பது தான் புதியதோர் உலகம் செய்வோம் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

ஆஜித், பிரவீன், அனு, யாழினி உள்ளிட்ட நால்வரும் நன்றாக நடித்திருக்கின்றனர். நான்கு குழந்தைகளுமே நன்கு பாடக்கூடியவர்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பாடி பரிசு பெற்றவர்கள் என்பது தெரியும். நால்வரும் நடிப்பு விஷயத்திலும் வெளுத்து வாங்கியிருக்கின்றனர். அப்பாவின் லஞ்ச பணத்தை அடித்து அதை நல்ல காரியத்திற்கு செலவிடும் ஆஜித் மனதை தொடுகிறான். அதேநேரம் சற்றே உருவம் பெரிதான பிரவீனின் இயற்கை உபாதைகளை எல்லாம் காமெடி என்ற பெயரில் படமாக்க முயன்றிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. மற்றபடி இந்த நான்கு சிறுவர்களுடன் வரும் இமான் அண்ணாச்சியின் காமெடி கதாபாத்திரம் ‛நச்' என்று இருக்கிறது. இவர் தான் இப்படத்தின் பெரும்பலம்! தனி டிராக்கில் சுவாரஸ்யம் கூட்டும் இந்த நான்கு சிறுவர்களது ஆசிரியரின் லவ் ஸ்டோரி, கணேஷின் வில்லத்தனம் எல்லாம் கலந்துகட்டி நம்மை இருக்கையோடு கட்டி போடுகிறது.

பிரவீன் சைவியின் இசை, பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவு, தயாரிப்பாளர் நாகராஜன் ராஜாவின் திரைக்கதை, வசனம், பி.நித்தியானந்தத்தின் இயக்கம், எல்லாம் சேர்ந்து ‛புதியதோர் உலகம் செய்வோம்' படத்தை பாதி புதுமையாக செய்திருக்கிறது. ஆனாலும், ஊழல், லஞ்சம் ஒழிப்பு என்று அடிக்கடி வருவதால் சற்றே பிரச்சாரநெடி அடிக்கிறது. இயக்குநர் பி.நித்தியானந்தம் இதை இன்னும் கவனமாக தவிர்த்திருந்தார் என்றால் முழுக்க முழுக்க ‛‛புதியதோர் உலகம்'' செய்யப்பட்டிருக்கும்! -

ADVERTISEMENTS