அஞ்சான் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
anjaanஇயக்குநர் லிங்குசாமியின் எழுத்து, இயக்கத்தில் சிங்கம் சூர்யா நடித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் அஞ்சான். இது யாருக்கும் அஞ்சாத சிங்கமா.? சூர்யாவின் வெற்றி பட வரிசையில் சொக்கத் தங்கமா.? என்பதை இனி இங்கு உரசிப்பார்ப்போம்...!


கதைப்படி, மும்பையில் தாதாவாக திகழ்ந்து, தகவலே இல்லாமல் போன தன் அண்ணன் சூர்யாவை தேடி கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு இரயிலேறுகிறார் மாற்று திறனாளி தம்பி சூர்யா. மும்பை இரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கியதும், அந்தேரி ஏரியாவுக்கு அண்ணன் சூர்யாவைத் தேடி டாக்ஸி பிடிக்கும் தம்பி சூர்யாவை, வாங்க வந்தேறி என வரவேற்கும் டாக்ஸி டிரைவர் காமெடி சூரியை கூடவே கூட்டிக் கொண்டு வழக்கமான தமிழ் சினிமா பாணியில் அண்ணனைத் தேடாமல், தனி ஆளாக அண்ணன் சூர்யாவை தேடுகிறார் தம்பி சூர்யா.


ஒரு கட்டத்தில் அண்ணன், தம்பி இருவர் அல்ல... இருவரும் ஒருவர்தான், ஒரே சூர்யா தான் எனும் உண்மை உலகுக்கும் (மும்பை நிழல் உலகுக்கும்...) உங்களுக்கும் (ரசிகர்களுக்கும்...) தெரிய வரும்போது அஞ்சான் பதினாறடி பாஞ்சானாக விறுவிறுப்பு பிடிக்கிறது. அப்புறம், தம்பி சூர்யா, அண்ணன் சூர்யாவை தேடி வரவில்லை, தம்பி சூர்யா என்று ஒருவரே இல்லை... தன் நண்பன் சந்துரு-வித்யூத் ஜம்வாலை நயவஞ்சமாக சுட்டுக் கொன்றவர்களையும், தன்னை சுட்டு ஆற்றுக்குள் தள்ளிய விரோதிகளையும், அவர்களுக்கு உதவிய துரோகிகளையும் தேடித்தான் அண்ணன் ராஜூ பாய் சூர்யாவே, தம்பி கிருஷ்ணன் சூர்யாவாக அவதாரமெடுத்திருக்கிறார்... எனும் கதையையும், அது பயணிக்கும் தடத்தையும் முன்கூட்டியே யூகிக்க முடியாதவர்களுக்கு, படம் பயங்கர பரபரப்பாக, பரபரப்பு பயங்கரமாக, விறுவிறுப்பாக இருக்கிறது. அதை யூகிக்க முடிந்த இந்த காலத்து கில்லாடி ரசிகர்களுக்கு சற்றே சப்பென்று இருக்கிறது.


அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா, தளபதி படங்களை பலமுறை பார்த்தவர்களுக்கு இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் கதை பண்ணிய கதையும், சிங்கம் ஸ்டார் சூர்யாவை,,சூப்பர் ஸ்டாராக காட்ட முயலும் கலையும் சற்று கூடுதலாகவும் யூகிக்க முடிகிறது, தெரிகிறது, புரிகிறது! ஆனால், அதை போரடிக்காமல் சின்ன, சின்ன நகாசு வேலைகளை செய்து நகர்த்தியிருப்பதால் அஞ்சான், நோஞ்சானாக தெரியாமல் பாஞ்சானாக பளிச்சிடுகி்றான்.


சூர்யா வழக்கம் போலவே அண்ணன் ராஜூபாயாகவும், தம்பி கிருஷ்ணாவாகவும் இருவேறு கெட்-அப்புகளில்(கவனிக்கவும், டபுள்-ஆக்டில், டூயல் ரோலில் அல்ல...) பிச்சி பெடலெடுத்திருக்கிறார். நான் சாகணும்னாலும் நான் தான் முடிவு பண்ணனும்... நீ சாகணும்னாலும் அதையும் நான்தாண்டா முடிவு பண்ணனும் என சூர்யா துரோகிகளையும், விரோதிகளையும் சுட்டு தள்ளும் இடங்களாகட்டும், சுடணும்னா சுடணும் அதை விட்டு விட்டு சும்மா பேசிட்டு இருக்கக்கூடாது... என எதிராளிகளை போட்டு தள்ளும் இடங்களிலாகட்டும், இன்னும் க்ளைமாக்ஸில் மெயின் வில்லன் இம்ரானை தீர்த்துகட்ட தனக்கு உதவிடும் வில்லனின் கூட்டாளிகள் மூவரை சுட்டுத்தள்ளிவிட்டு எதிரியிடம் கூட துரோகிகள் இருக்கக்கூடாது... என பன்ச் டயலாக் அடிப்பதிலாகட்டும் சூர்யா, சூரியனாக ஜொலிக்கிறார்!


ஆனால் அப்புறம் எதற்கு? மேலே மேலே மேலே என வேற, வேற, வேற... என்று முன்பு ஒரு படத்தில் பேசிய சகநடிகர் விஜய்யை இமிடேட் செய்ய வேண்டும் எனும் எண்ணமும், சின்னதா வேட்டு சத்தம் கேட்டதும் பயந்து பறக்குறதுக்கு நான் என்ன புறாவா.? நிண்ணு நிதானமா இரையை தூக்கிட்டு போற கழுகுடா... என பேசும் வசனத்தில் புறாவா? சுறாவா? என புரியாமல் சூர்யா ரசிகர்கள், தியேட்டரில் விஜய்க்கு பன்ச் வைத்ததாக நினைத்து விசில் பறக்க விடுவதும், வில்லன் இம்ரானை மற்றொரு நடிகர் விக்ரம் சாயலில் பிடித்து போட்டு படுத்தி எடுப்பதையும் பார்த்தால் சூர்யாவும்., அவரது போட்டியாளர்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலம் ஏதேதோ மெஸேஜ் சொல்ல களம் இறங்கிவிட்டது புரிகிறது. போகட்டும்! படம் பேசட்டும்!


நாயகி சமந்தா, போலீஸ் கமிஷனர் மகளாக கிக் என்ட்ரி கொடுத்து, ரசிகர்களின் இதயங்களை பக் பக் என அடிக்க விடுகிறார். வழக்கம் போலவே ஆக்ஷ்ன் படங்களில் கதாநாயகிகளுக்கே உரிய முக்கியத்துவம் அம்மணிக்கும் தரப்பட்டிருந்தாலும், அம்மணி சமந்தாவை காட்டிலும் சக்கை போடு போட்டிருக்கின்றனர் பார்ட்டிகளில் ஆடும் பஞ்சுமிட்டாய் பெண்கள். பலே, பலே!


காமெடி சூரி, தெலுங்கு பிரம்மானந்தம், சூர்யாவுக்கு உதவும் டிராவல்ஸ் இஸ்லாமியர் ஜோமல்லூரி மற்றும் சூர்யாவின் நண்பர், தாதாவாக வரும் சந்துரு-வித்யூத் ஜம்வால், வில்லன்கள், விரோதிகள், துரோகிகள்... என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


யுவனின் இசையில், ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி... எனத் தொடங்கித் தொடரும் பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ர(ரா)கம்! சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அஞ்சானின் கூடுதல் பலம்! பிருந்தாசாரதியின் வசன வரிகள் பெரும்பலம்!


ராஜூபாய், சூர்யாதான் என்னை பார்க்க கூடாது, நான் அவரை பார்ப்பதில் என்ன தவறு... என சூர்யாவுக்கு உதவும் ஜோமல்லூரி பாய் வீட்டில், சமந்தா பர்தாக்குள் பவனி வருவது டைரக்டர் லிங்குசாமியின் புத்திசாலித்தனத்திற்கு உதாரணம். அதேநேரம், சமந்தா, தாதா சூர்யாவை காதலிப்பதை கமிஷனர் அப்பா கண்டு கொள்ளாததும்., சமந்தா, காதலர் சூர்யாவின் பெயரை ராஜூ என கையில் பச்சைக் குத்திக்கொள்ளாமல் எல்லோரும் சூர்யாவை பயபக்தியுடனும், பாசத்துடனும் அழைப்பது போல் ராஜூ பாய் என்றே பச்சை குத்தியிருப்பதும் அபத்தம்! அதிலும் அந்த பச்சை ஸ்கெட்ச் பேனாவால் குத்தப்பட்ட பச்சை என்பதும் அப்பட்டமாக தெரிவது கூடுதல் அபத்தம்!


இதுமாதிரி ஒரு சில அபத்தங்களை ஒதுக்கிவிட்டால் இரண்டு மணிநேரம் 51 நிமிட படமும் சற்றே சுருங்கும். ஒருசில இடங்களில் போரடித்து கொஞ்சமே கொஞ்சம் நோஞ்சானாக தெரியும் அஞ்சானும் முழுக்க முழுக்க 64 அடி பாஞ்சானாக பளிச்சிடுவான்.


மொத்தத்தில், அஞ்சான் - சற்றே சாஞ்சான் - ஆனாலும் பாய்ந்தான் - பாய்ந்துள்ளான்!!
ADVERTISEMENTS