தைரியம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
புதுமுகம் குமரனின் தைரியம்தான் தைரியம் படத்தின் மொத்த கதையும்!

தன் தோழி கார்த்திகாவை கடத்திச் சென்று கற்பழிக்கப் பார்க்கும் ரியாஸ்கானையும், அவரது ஆட்களையும் அமைச்சரின் மகன் என்பது தெரியாமலே அடித்து துவம்சம் செய்கிறார் புதுமுகம் குமரன். இவர் அடித்த அடியில் ரியாஸ்கான் குற்றுயிரும், கொலை உயிருமாக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக., மறுநாள் டி.வி., பார்க்கும்போதுதான் குமரனுக்கே தெரியவருகிறது. இது ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கம் அதே மந்திரியின் மகள் என்பது தெரியாமல் தீபுவிற்கும், குமரனுக்கும் காதல் பிறக்க., கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ஏற்கனவே நண்பர்களான இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. கோமா ஸ்டேஜில் இருக்கும் ரியாஸ்கான் எழுந்து கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தப் போகிறார் என எண்ணினால்... அதுதான் இல்லை! அமைச்சருக்கும், குமரனின் தந்தை தேவனுக்கும் பொ எதிரியான வில்லன் காமராஜ், அவர் தம்பி காலாட்படை ஜெய் ஆகியோர் விஸ்வரூபம் எடுத்து இரு குடும்பங்களையும் கூண்டோடு கைலாசம் அனுப்பப் பார்க்கின்றனர். அவர்களை எவ்வாறு தைரியமாக எதிர்கொள்கிறார் குமரன் என்பதும், ரியாஸ்கானின் கோமா ஸ்டேஜிற்கும், அவரது ஆட்கள் 6 பேர் கொல்லப்பட்டதற்கும் யார் காரணம்? என்பதையும் விளக்குகிறது மீதிக் கதை!

கதாநாயகர் குமரனாக புதுமுகம் குமரன் தான் ஒரு அறிமுகம் என்பதையும் தாண்டி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் அரும்பு மீசையுடனும், ஒரு காட்சியில் அடர்த்தியான மீசையுடனும் மாறி மாறி வருவதை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நாயகிகள்  தீபு, கார்த்திகா இருவரில் ஒருதலைக் காதலியாக வந்து, பின் தோழியாகவே தொடரும் தூத்துக்குடி கார்த்திகா ஸ்கோர் செய்து விடுகிறார். வில்லன்கள் பொன்னம்பலம், ரியாஸ்கான், காமராஜ், ஜெய் போன்றவர்களில் பொன்னம்பலமும், ஜெய்யும் பயமுறுத்துகிறார்கள்.

இவர்கள் தவிர தேவன், பிரகதி, ரேகா, அஜெய் ரத்னம், அலெக்ஸ், வாசு விக்ரம், கே.என்.காளை, கவுதமி, ஆர்த்தி, கணேஷ், பாலாஜி, கொட்டாச்சி, காந்த், ரிஷா, சிட்டிசன் பட இயக்குனர் சரவண சுப்பையா என ஒரு பெம் பட்டாளமே படம் முழுக்க இருக்கிறது.

நவநீத கண்ணனின் ஒளிப்பதிவும், ஆர்.டி.மோகன்சிங்கின் இசையும், பாடல் காட்சிகளில் பதம், பலம்! படக்காட்சிகளில் பாதகம், பலவீனம்!

முதல் படத்திலேயே பொன்னம்பலம், ரியாஸ்கான் மாதிரி த‌டிமன் தடிமனான வில்லன்களுடன் மோதி பத்து, பதினைந்து சண்டை கலைஞர்களை ரோப் (கயிறு) உதவியுடன் கட்டி தூக்கி பத்தடிக்கு பந்தாடுவதை விடுத்து, கதையில் மேலும் கவனம் செலுத்தி இருந்தால் குமரனின் தைரியத்தை இன்னும் நன்றாக பாராட்டி இருக்கலாம். எனினும் நடிப்புடன் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என ஐந்தாறு பொறுப்புகளை ஏற்றிருக்கும் குமரனின் தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும்.

புதுமுகம் குமரனின் தைரியம் பல இடங்களில் பயமுறுத்தவில்லை; சில இடங்களில் உறுத்துகிறது!
ADVERTISEMENTS