நாணயம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
நாணயம் மிகுந்த ஒருவனை நாணயமே இல்லாதவர்கள் கூட்டு சேர்ந்து படுத்தும் பாடுதான் நாணயம் படத்தின் மொத்த கதையும்!

கதைப்படி நாயகன் பிரசன்னா, நாயகி ரம்யா திருமணமாகி விவாகரத்து ஆனவர் என ‌தெரிந்து, அவர் மீது காதல் கொள்கிறார். ஆனாலும் இவர்களது காதலுக்கு குறுக்கே வருகிறார் ரம்யாவின் மாஜி கணவர். அவரை தீர்த்துக் கட்டும் வில்லன் சிபிராஜ் அண்ட் கோவினர் கொலையை பிரசன்னா செய்ததாக ஜோடித்து அதற்கு தகுந்த சாட்சியையும், புகைப்பட ஆதாரத்தையும் தயார் செய்து பிரசன்னாவை மிரட்டுகின்றனர். ஏன்? எதற்கு? பிரசன்னா வேலை பார்க்கும் பேங்க் லாக்கரை கொள்ளையடிக்க தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனும் திட்டத்துடன்தான்! அப்புறம்? அப்புறமென்ன...? சிபிராஜ் சகாக்களின் பிளாக்மெயிலுக்கு பயந்தபடியும், மற்றொரு பக்கம் தனது மனசாட்சியின் உறுத்தலுக்குள் உறைந்தபடியும் வங்கிக் கொள்ளைக்கான நாள் குறித்து காரியத்தில் இறங்குகிறார். சிபிராஜின் திட்டப்படி வங்கி கொள்ளையடிக்கப்பட்டதா? பிரசன்னாவின் காதல் இடையூறுகள் தீர்ந்து நிறைவேறியதா, இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல சந்தேகங்களுக்கு சாதாரண ரசிகர்கள் யூகிக்க முடியாத சவாலான பதில் தருகிறது நாணயம் படத்தின் மீதிக்கதை!

பிரசன்னா ஹீரோவா, வில்லனா, வில்லானிக் ஹீரோவா? என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கடைசி வரை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். ஆங்காங்கே அஞ்சாதே பட பிரசன்னா தெரிவதால் அவரை இறுதிவரை யூகிக்கவே முடியவில்லை. சபாஷ். சவாலான நடிப்பு!

சிபிராஜ், வில்லனுக்காக இன்னும் சற்றே தன்னை தோற்றத்திலும் நடை-உடை-பாவனைகளிலும் மாற்றிக் கொண்டு நடித்திருந்தால் நம் மனதில் இடம்பிடித்திருப்பார். இப்போதைக்கு சாரி! சாதாரணமாகவே தெரிகிறார்.

ரம்யா - யாஸ்மின் இருவரும் பெயருக்கு நாயகிகள் என்றாலும், ரம்யா பல கோடிகள் இருக்கும் பேங்க் லாக்கரின் கதிர்வீச்சுகளுக்கு இடையே நடனமாடி புகுந்து லாக்கரை இடத்தில் மட்டும் நம் மனதை கொள்ளை கொள்கிறார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வங்கியின் முதலாளியாக பெரிய மனிதராக வந்து, தன்னை ஆரம்ப காட்சியில் காபந்து செய்யும் பிரசன்னாவிற்கு வேலை தந்து, நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். இறுதியில் அத்தனை கொள்ளைக்கும், குழப்பத்திற்கும் காரணகர்த்தா அவர்தான் எனத் தெரியும்போது உயர்ந்த நம் உள்ளத்தில் இருந்து பொத்தென்று விழுகிறார்.

ஓம்.பிரகாஷின் ஒளிப்பதிவும், ஜேம்ஸ் வசந்தனின் இசையும், தமனின் பின்னணி இசையும் இயக்குனர் சக்தி எஸ்.ராஜனின் இயக்கத்திற்கு சில இடங்களில் பலம். சில இடங்களில் பலவீனம்! சிலபல ஆங்கில படங்களின் சாயல் தெரிந்தாலும்... நாணயம் - நயம்!
ADVERTISEMENTS