அதே நேரம் அதே இடம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
அப்பா காசில் குட்டி சுவரு, கெட்ட நண்பர்கள், குரூப் தம், தண்ணி என ஊரை சுற்றும் ஜெய்க்கு அதே ஏரியாவில் அடிக்கடி தட்டுப்படும் (தென்படும்) விஜயலட்சுமி மீது காதல். விஜியும், காதலாகி கசிந்துருக..., இந்த சமயத்தில் ஹீரோ ஜெய்யின் காதல், அவரது அப்பா நிழல்கள் ரவிக்கு தெரிய வருகிறது. ஆனால் வழக்கமான சினிமா அப்பாக்கள் மாதிரி குய்யோ, முறையோ என்று குதிக்காமல், அப்பா காசில் சுற்றித்திரியும் உனக்கு பொறுப்பு வர வேண்டும்... எனக் கூறி மகன் ஜெய்க்கு ஒரு கண்டிஷன் போடுகிறார். அதாகப்பட்டது.., ஒரு வருடம் உன் காதலியை பார்க்கமாமல், பேசாமல் ஆஸ்திரேலியா போய் சம்பாதித்து கொண்டு வா... அதன் பின் நீ விரும்பும் பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறேன் என்கிறார். அதன்படி அத்தகவலை காதலியிடம் தெரிவித்து விட்டு ஆஸ்திரேலியா கிளம்பும் ஜெய்க்கு, திரும்பி வரும்போது பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன? அதற்கு காரணம் என்ன? அதற்கு ஜெய்யின் ரீயாக்ஷன் என்ன? என்பது அதே நேரம் அதே இடம் படத்தின் மீதிப் பாதி!

கார்த்திக் எனும் பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்திருக்கும் ஜெய், முன்பாதியில் காதல் நவரச கார்த்திக்காகவும், பின்பாதியில் ஆக்ரோஷ விஜய்(சாயலில்)யாகவும் மாறி தன் பாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

ஜனனி எனும் பாத்திரத்தில் விஜயலட்சுமின் செயல்கள் படம் பார்ப்போரை ஜன்னி காண வைக்கிறது. ஜெய்யை காதலிப்பதும், பணத்தாசை பிடித்து, புதுமுகம் ராகுலை கல்யாணம் கட்டிக்கொண்டு செட்டில் ஆவதும் க்ளைமாக்ஸில் ஜெய்யிடம் உனக்கு வேண்டுமானால் ஒருநாள் மனைவியாக இருக்கிறேன்... என குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தி குத்துப்பட்டு சாவதும், எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து படத்தை சுவாரஸ்யப் படுத்துவதுடன் விஜி மீது பரிதாபத்தையும் அனுதாபத்தையும் ஏற்படுத்துகிறது.

ஜெய், விஜயலட்சுமி மாதிரியே புதுமுகம் ராகுல், லொல்லுசபா ஜீவா, நிழல்கள் ரவி, ஸ்ரீகலா, ரவிபிரகாஷ் உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

பிரேம்ஜி அமரனின் இசையில் பின்னணி இசையும் சரி, பாடல்கள் இசையும் சரி, படத்திற்கு பலம்! பவன் சேகரின் ஒளிப்பதிவும், ஜி.பி.வெங்கடேஷின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கும் மேலும் சில சமாச்சாரங்கள்.

ஆனால், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், அதே நேரம் அதே இடம் படத்தில் ஏதோ ஒன்று இல்லாத குறை! அது என்ன என்பது இப்படத்திற்கு புதிய கதையும், திரைக்கதையும் எழுதி, இயக்கி இருக்கும் பிரபு.எம்மிற்கே வெளிச்சம்.
ADVERTISEMENTS