1 பந்து 4 ரன் 1 விக்கெட் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
10'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை அப்படியே கொஞ்சம் மாற்றி பேய் படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? என யோசி்த்திருப்பார் போலும்... '1 பந்து, 4 ரன், 1 விக்கெட்' படத்தின் இளம் இயக்குநர் வீரா! அதன் வெளிப்பாடு 'ந.கொ.ப.காணோம்' படத்தில் கிரிக்கெட் பந்து பட்டு அதன் நாயகருக்கு திருமண நாளுக்கு முன்பாக நினைவு தப்பும். இதில் கிரிக்கெட் பந்து வீசும் நாயகிக்கு பந்து படாமலேயே திருமணம் நடைபெற இருந்த நாளுக்கு முதல் நாள் பேய் பிடித்து நினைவு தப்புகிறது....

அப்புறம்? கட்டிக்கப்போற காதலனில் தொடங்கி காவல்துறையினர் வரை சகலரையும் சில நேரங்களில் பெண்ணாகவும், பல நேரங்களில் பேயாகவும் இருந்து புரட்டி எடுத்து ஈ.சி.ஆர். பங்களாவில் இருந்து தப்பிக்க முடியாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார் கதாநாயகி காதலனிடமிருந்து கதாநாயகியை பிரிக்க நினைக்கும் 'காட்டான்' முறைமாமனில் தொடங்கி அவரது அடியாள் கோஷ்டிகளும் கூட வகையாய் வந்து நாயகியின் பேயாட்டத்தில் சிக்கி கொள்கின்றனர்.

முறைமாமனுடன் கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட தருணத்தில் காதலருடன் மதுரையில் இருந்து சென்னைக்கு எஸ் ஆகும் நாயகிக்கு சென்னை ஈ.சி.ஆர். பங்களாவிற்கு வந்ததும் பேய் பிடிக்க காரணம்? அந்த பங்களாவில் ஏற்கெனவே வசித்த ஸ்ரீமன் - மதுமிதா ஜோடிதான்!

புருஷன் 'கடைசியில் கல்யாணம்' டி.வி. சீரியல் பார்க்க விடாமல் கிரிக்கெட் பார்த்ததால் தூக்கில் தொங்கும் மதுமிதா ஆவியாக வந்து அந்த பங்களாவில் காதலனுடன் தங்கும் நாயகி ரம்யா எனும் ஹசிகாதத்தின் உடம்பில் புகுந்து கொண்டு நாயகர் விஸ்வா எனும் வினய் கிருஷ்ணா உள்ளிட்டோரை படாதபாடுபடுத்துகிறார். இறுதியாக, தான் பார்க்காமல் இறந்து போன 1200 எபிசோடுகளை கடந்த 'கடைசியில் கல்யாணம்' சீரியல் க்ளைமாக்ஸை பார்க்க ஏற்பாடு செய்தால் தான் நாயகி ரம்யா - ஹசிகாதத்தின் உடம்பில் இருந்து விலகுவதாக நாயகனுடன் பேசி உடன்படிக்கை செய்கிறார். ஹீரோ விஷ்வா - வினய் கிருஷ்ணா இறுதி எபிசோட்டை தேடி அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கிளம்புவதாக காமெடியாக முடிகிறது - '1 பந்து, 4 ரன், 1 விக்கெட்' திரைப்படம்! தியேட்டரே அதிர்கிறது... பேயின் அடாவடியை பார்த்து அல்ல. சிரிப்பையில் தான் அதிர்கிறது. டி.வி. சீரியல் பாணியில் தொடரும்... எனும் எண்ட் கார்டுடன் படம் இனிதே முடிகிறது..!

விஷ்வாவாக நாயகராக புதுமுகம் வினய்கிருஷ்ணா நிறையவே பயந்து நடித்திருக்கிறார். நாயகி ரம்யாவாக ஹன்சிகாதத் ரொம்பவே பயமுறுத்தியிருக்கிறார். அவர் மீது பேய் ஏறும் போதெல்லாம் இங்கிலீஷிலேயே அவர் பேசுவது வௌ்ளைக்கார பேயாக இருக்குமோ? எனும் சந்தேகத்தை கிளப்புவது காமெடி!

கிரிக்கெட் பிரியர் அருணாக ஸ்ரீமன், அவரது சீரியல் பிரியை மனைவி காதம்பரியாக வரும் மதுமிதா இருவரும் கொஞ்ச நேரமே வந்தாலும் இன்றைய டி.வி. சண்டை வீடுகளை பிரதிபலித்து நெஞ்சை அள்ளுகின்றனர். அடாவடி முறை மாமனாக சிங்கதுரையாக வரும் சென்ட்ராயனுக்கும் 'பொல்லாதவனு'க்கு அப்புறம் பொருத்தமான கேரக்டர். ஹீரோவின் நண்பர் கட்டளையாக வரும் லொள்ளு சபா ஜீவா, வொயிட்-முனிஸ்ராஜா, இன்ஸ் புலிக்குட்டி - நந்தா சரவணன், 'கல்நக்கி' சுப்புராஜ், பிரியாணி 'திண்டுக்கல்' சரவணன், நாயகியின் அப்பர் 'பாய்ஸ்' ராஜன், கதிர் - கார்த்திக், மீரா கிருஷ்ணன், கீதா சரவணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பளிச்சென்று நடித்து பலே சொல்ல வைக்கின்றனர்.

உமேஷின் மிரட்டும் இசை, கார்த்திக் நல்லமுத்துவின் அதிரடி ஒளிப்பதிவு, டி.எஸ். ஜாயின் பக்கா படத்தொகுப்பு எல்லாம் வீராவின் இயக்கத்தில் ஒரு சில் 'உட்டாலங்கடி' குறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் '1 பந்து, 4 ரன், 1 விக்கெட்' திரைப்படத்தை சிக்ஸர் அடிக்க செய்திருக்கின்றன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில் '1 பந்து, 4 ரன், 1 விக்கெட்' - 1 பேய், 4-க்கும் மேற்பட்டோர், ரசிகர்களின் பயமும் சிரிப்பும் தான் வெற்றி விக்கெட்டுகள் என நிறைவாய் இருக்கிறது!
ADVERTISEMENTS