வன்மம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
01தமிழ் சினிமாவில் கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் மீண்டும் 2 நண்பர்களின் கதை!. வளரும் நடிகர்கள் விஜய் சேதுபதி, கிருஷ்ணா இணைந்து நடிக்க, இந்த முறை குமரி மாவட்டத்து பின்னணியில், அந்த ஊர் ஸ்லாங்கில் நண்பர்களின் லவ்வும், ஆக்சன் ரவுசும், சென்டிமெண்ட் கலந்து சொல்லப்பட்டிருப்பது புதுசு!.

கதைப்படி, பொழுது சாய்ந்தால் கள்ளு கலையமும், கையுமாக குடித்து விட்டு ஊருக்குள் படபடக்கும் பைக்கும், கெத்துமாக திரியும் ராதாகிருஷ்ணன் எனும் விஜய் சேதுபதியும், செல்லத்துரை எனும் கிருஷ்ணாவும் உயிர் நண்பர்கள். இந்த நட்புக்குள் ஒரு விரிசல். அது வழக்கமாக, தமிழ் சினிமாவில் வருவது மாதிரி பொன்னாலோ, பெண்ணாலோ, மண்ணாலோ அல்ல...ஒரு கொலையால்!.,ஒரு சின்ன வார்த்தையால்....!

தன் முரட்டு சுபாவத்தால் ராதா -விஜய்சேதுபதி., நண்பன் செல்லத்துரை - கிருஷ்ணாவை அடிக்க வந்த அவரது காதலி வதனா எனும் சுனைனாவின் அண்ணன் தடிரத்தினத்தை தாக்க, எதிர்பாராமல் அவர் இறந்துபோகிறார். போலீஸ் கேஸ், சாட்சி....எல்லாவற்றையும் தன் செல்வாக்கால் தவிடுபொடியாக்கி விடும் விஜய்சேதுபதியை நீ அவசரப்பட்டிருக்கக்கூடாது...என நண்பன் கிருஷ்ணா சொன்ன வார்த்தை காயப்படுத்தி விடுகிறது.

அதுமுதல், இருவேறு துருவங்களாகி வரும் இருவரும்., ஒருத்தர் மீது ஒருத்தர் வன்மம் கொண்டு அலைகின்றனர். ஊரில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த விஜய்சேதுபதிக்கு தன் காதலி வீட்டிலும் செல்வாக்கு கூடுவது கண்டு மனம் பொறுக்காத கிருஷ்ணா., ஒரு கட்டத்தில், "உன் அண்ணனை கொன்றது நீங்கள் நினைப்பது மாதிரி அவரது தொழில் எதிரி ஜெ.பி கிடையாது. விஜய் சேதுபதிதான்" என்று சுனைனாவின் குடும்பம் உள்ளிட்ட அனைவரது குடும்பமும் நிரம்பி இருக்கும் ஊர் திருவிழாவில், உண்மையை போட்டுடைக்கிறார். இதற்கு, கிருஷ்ணாவின் பின்னணியில் இருக்கும் ஜெ.பி., இதை வைத்தே நண்பர்கள் இருவரையும் தீர்த்து கட்டிவிட்டு தானும் தடிரத்தினம் குடும்பம், தன் மீது போட்டிருக்கும் மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க பார்க்கிறார். ஆனால், இதை எல்லாம் தாண்டி அவர்களுக்குள் இருக்கும் ஆழமான நட்பு., விஜய் சேதுபதி, கிருஷ்ணா இருவரையும் ஒனறு சேர்த்து, கிருஷ்ணாவை, காதலி சுனைனாவுடன் சேர்ப்பது தான் வன்மம் கிளைமாக்ஸ்!.

விஜய் சேதுபதி, ராதா எனும் ராதாகிருஷ்ணனாக, கண்களாலேயே நட்பை காட்டி நடித்தும், கைகளால் நட்பை பிரிக்க நினைப்பவர்களை பந்தாடியும், அடர்ந்த தாடியும் முகமுமாக அசத்துகிறார். படபடா பைக்கில், வெள்ளை சட்டை, வேஷ்டியில் அவர் உலா வரும் ஸ்டைலே தனியாக இருக்கிறது . பலே.பலே!.

கிருஷ்ணாவும் தன் பங்குக்கு அவசர புத்திக்கார நண்பராக, நண்பனை காட்டிக் கொடுப்பதில் தொடங்கி, காதலியுடன் கடலை போடுவது வரை சகலத்திலும் சக்கைபோடு போட்டிருக்கிறார்.

சுனைனா, வதனாவாகவே வாழ்ந்திருக்கிறார். எங்கே., தன் குடும்பத்திற்கு உதவும் விஜய் சேதுபதியையும் தன் காந்தப் பார்வையால் கவிழ்த்து விடுவாரோ என யோசித்தால்., விஜய் சேதுபதி., கிருஷ்ணாவிற்காக விட்டுக்கொடுத்து விடுகிறார். ரசிகர்கள் வதனாவிடம் கவிழ்ந்து விடுகின்றனர்.

தடிரத்தினமாக வரும் மதுசூதனராவ், கிருஷ்ணாவின் அண்ணனாக வரும் போஸ் வெங்கட், ஜெ.பி.யாக வரும் சுப்ரமணியபுரம் ராஜா, தடிரத்தினம் மனைவி ஸ்ரீரஞ்சனி, வதனாவின் மாமாவாக வரும் முத்துராமன், இன்ஸ்பெக்டர் அருள் டி. ஜோடி உள்ளிட்டோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

எஸ்.எஸ்.தமனின் இசையில் பாடல்களும், பாலபரணியின் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டமும், சுரேஷ் அர்ஸின் கனகச்சிதமான படத்தொகுப்பும், ஜெய்கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில் வன்மம் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன!.

மொத்தத்தில், பக்கா கமர்ஷியலாக, கலர்புல்லாக வெளிவந்திருக்கும் "வன்மம்" - வண்ணமயம் - வசூலிலும் மாயம் செய்யும்!.
ADVERTISEMENTS