அரண்மனை திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
3
இதுநாள் வரை காமெடி ஹிட் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி., முதன்முதலாக இயக்கி இருக்கும் கமர்ஷியல் பேய் படம்தான் அரண்மனை. சந்திரமுகி, அருந்ததி, காஞ்சனா, யாமிருக்க பயமே... பட வரிசையில் அரண்மனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கப் போவது நிச்சயம்!கதைப்படி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்து கிடக்கும் ஜமீனின் அரண்மனையை விற்க ஏற்பாடு செய்கிறார் அதன் பொறுப்பாளர் அய்யனார் - சரவணன். அதற்காக சமையல்காரருடன் ஓடிப்போன, கோவை சரளா உள்ளிட்ட ஜமீன் குடும்பத்து வாரிசுகள் எல்லாம் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் மராமத்து பணிபார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட அரண்மனையில் வந்து தங்குகின்றனர். இதுநாள் வரை பாழடைந்து கிடந்த அந்த அரண்மனையில் அந்த ஜமீன் வீட்டு பையன் வினய்யை காதலித்து தன் ஆசை நிறைவேறாமல் சிலரது சுயலாபத்தால் அகால மரணமடைந்த ஹன்சிகாவின் ஆவியும் குடியிருக்கிறது.

அந்த ஆவி வீட்டை விற்க வந்த வினய்யின் ஆசை மனைவி ஆண்ட்ரியாவின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு, எவ்வாறு தன்னை திட்டமிட்டு கொன்றவர்களை பழிவாங்குகிறது? என்பதும், தன் ஆசை நாயகனை எவ்வாறு அடைய முனைகிறது என்பதும்தான் அரண்மனை படத்தின் மிரட்டலான கரு, கதை, களம் எல்லாம்!

பேய், பிசாசு கதையையும் பிரமாதமான காமெடி கலந்து கலகலப்பாக, கலர்ஃபுல்லாக, பேன்டஸியாக வழங்கி இருக்கும் சுந்தர். சி.,க்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லியே ஆக வேண்டும்.

வக்கீலாக ஆண்ட்ரியாவின் அண்ணனாக வரும் சுந்தர். சி., முரளியாக ஆண்ட்ரியாவின் ஆத்துக்காரராக ஹன்சிகாவின் காதலராக வரும் வினய்., ஜமீனின் வப்பாட்டி வீட்டு பேரனாக பிறந்து சொத்துக்காக அரண்மனையில் சமையல்காரராக ஐக்கியமாகி சளைக்காமல் சிரிப்பு சிக்ஸர்களை அள்ளி வீசும் சந்தானம் என மூன்று கதாநாயகர்கள் மூவருமே தத்தமது பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி பளிச்சென்று நடித்திருக்கின்றனர்.

சுந்தர்.சி., சந்திரமுகி-யில் டாக்டராக வரும் ரஜினிகாந்தை அடிக்கடி ஞாபகப்படுத்துவது அரண்மனையின் பலமா, பலவீனமா தெரியவில்லை! வினய், ஆண்ட்ரியாவின் ஹஸ்பெண்டாக அவரிடம் பெண்டு நிமிரும் காட்சிகளை காட்டிலும், ஹன்சிகாவுடனான கண்பார்வை காதல் காட்சிகளில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். இவர் இருவரை காட்டிலும், தானும் ஜமீனின் வாரிசு என்பதற்கு இருந்த ஒரே ஃபோட்டோ சாட்சியையும் காக்கா எச்சத்தில் இழந்து விட்டு அரண்மனையில் தன் அசிஸ்டெண்டுகளுடன் சமையல்காரராக சேர்ந்து லட்சுமிராயை ஒன்சைடாக டாவடிக்கும் சந்தானம் தான் ஹன்சிகா பேய்க்கு ஈக்குவலான படத்தின் பெரும்பலம்! முருங்கைக்காய் சாப்பிட்டாதான் முறுக்கேறும்பாங்க இங்க என்ன? முருங்கைக்காய்க்கே முறுக்கேறி கிடக்குது என்று கோவை சரளாவின் ஆத்துக்காரரை பார்த்து கமெண்ட் அடிப்பதில் தொடங்கி, சரளாவை சைனா பொம்மை, கீ-கொடுத்த பர்மா பொம்மை... என்பதும், என்ன சாப்பிட இருக்கு.? என ஒருகாட்சியில் கேட்கும் சுந்தர்.சியிடமே, குஷ்பு இட்லி இருக்கு சாப்பிடுறீங்களா.? என்பது வரை வயிறு வலிக்க தான் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைப்பதில் தியேட்டரே அதிர்கிறது. சந்தானத்தின் காமெடிகளில் தற்போதெல்லாம் டபுள் மீனிங் குறைந்து மெஸேஜ் மிளிர்வது வரவேற்கத்தக்கது.

ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூவரில் ஹன்சிகா நடிப்பிற்கும், ஆண்ட்ரியா நடிப்பு, இளமை துடிப்பு இரண்டிற்கும், லட்சுமி ராய் கிளாமருக்கும் பக்காவாக பயன்பட்டிருக்கின்றனர். கோவை சரளா, சரவணன், கோட்டா சீனிவாஸராவ், சித்ரா லட்சுமணன், சந்தானபாரதி, நிதின் சத்யா, விச்சு, ராஜ்கபூர், சுவாமிநாதன், கணேஷ் கர், ஆர்த்தி, மறைந்த காதல் தண்டபாணி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்திற்கு பலம் கூட்டி பலே சொல்ல வைக்கின்றனர்.

யு.கே.செந்தில் குமாரின் மிரட்டலான ஒளிப்பதிவில், கார்த்திக் ராஜாவின் இசையில், பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா..., சொன்னது சொன்னது நீதானே... என தொடங்கி தொடரும் பாடல்கள் ஹிட் ரகம். பரத்வாஜின் பின்னணி இசை , ஸ்ரீகாந்தின் படத் தொகுப்பு, குருராஜின் ஆர்ட் டைரக்ஷனில் அந்த அரண்மனை செட் உள்ளிட்ட பிளஸ் பாயின்டுகள், சுந்தர்.சி.,யின் எழுத்து, இயக்கத்தில் அரண்மனையை தூக்கி நிறுத்தினாலும் அரண்மனையில் ஹன்சிகாவின் ஆவி, அவரைக் கொன்றவர்களை ஆண்ட்ரியாவின் உடம்புக்குள் புகுந்து பழிவாங்குவது ஓ.கே.. ஆனால் "பிறன்மனை" ( ஆண்ட்ரியாவின் வினய்யை) யை நோக்குவது... எந்த விதத்தில் நியாயம்?! எனும் கேள்வி எழுவதை இயக்குநர் உஷாராக தவிர்த்திருந்தார் என்றால்., அரண்மனை இன்னும் அழகாக, அம்சமாக பயமுறுத்தி இருக்கும்!

சந்திரமுகி, அருந்ததி, காஞ்சனா, யாமிருக்க பயமே எல்லாம் கலந்த பழைய அரண்மனை என்றாலும் சுந்தர்.சி. இயக்கத்தில புதிதாக ஜொலித்திருப்பதால் பார்க்கலாம்... ரசிக்கலாம்!

ADVERTISEMENTS