சுற்றுலா திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
04தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் பெரிய ஸ்டார் என்றாலும் அவரது மைத்துனர் ரிச்சர்ட் (ஷாலினி அஜித்தின் சகோதரர்...) இன்னமும் முட்டி மோதி போராடிக்கொண்டு தான் இருக்கிறார்!. என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றொரு படம் சுற்றுலா!.

ஜானி எனும் ரிச்சர்ட், ஊட்டியில் 4 -5 தங்கும் விடுதிகள் - ஹோட்டல்களை சொந்தமாக வைத்துக்கொண்டு லூட்டி அடிக்கும் பொலிகாளை!. தனது ஹோட்டல் விடுதிகளில் வந்து தங்கும் இளம்பெண்களை திட்டம் போட்டு வேட்டையாடுவதும் , அது போரடித்தால் தன் சகாக்களுடன் துப்பாக்கியும், கையுமாக மலை, காடுகளில் விலங்குகளை வேட்டையாடுவதுமாக பொழுதை கழிக்கிறார். ஒருநாள் அவரது ஹோட்டலில், திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் ஊரைவிட்டு ஓடிவந்த ஒரு காதல் ஜோடி தங்குகிறது. அந்த காதலியையும் பொலிபோட பொலிகாளை ரிச்சர்ட் முயற்சிக்கிறார். ஆனால், அந்த காதலியின் முகம், தன் இறந்துபோன தாயின் சாயலில் இருப்பதால், அவரை தன் தாயாக கருதும் ரிச்சர்ட்., அந்த ஜோடியை பிரிக்க முயற்சித்து தன் தாயை அடைய (தாயாக தான்...) முயற்சித்து அந்த ஜோடிக்கும் அவர்களது நட்பு வட்டத்திற்கும் தரும் சைக்கோ தன டார்ச்சர் தான் சுற்றுலா படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!.

இறுதியில் ரிச்சர்ட்டின் கொலை தாக்குதலில் தன் நண்பர்களை இழக்கும் காதலன் மகேஷ் எனும் மிதுன்., காதலி ஸ்ரீஜியையும் இழந்தாரா? இல்லை ரிச்சர்ட்டை கொன்றாரா? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்க வேண்டிய கிளைமாக்ஸ்!. ஆனால் அவ்வாறு படமாக்கப்படாதது சுற்றுலா படத்தின் பெரிய மைனஸ்!

ஜானியாக ரிச்சர்ட், மகேஷாக மிதுன், பிரஜன், சான்ட்ரா, தீபாவாக ஸ்ரீஜி, அங்கிதா, சிங்கமுத்து, ஜெகன் என நிறைய சின்னத்திரை நட்சத்திரங்களும் இப்படத்தின் மூலம் பெரிய திரையில் தோன்றி நடித்துள்ளனர். ரிச்சர்ட்டும், அவரது இரண்டாவது அப்பாவாக வரும் ஜெகனும் திரும்பிப்பார்க்க வைக்கின்றனர்.

பரணியின் இசையில், யாரோ யாரோ... பாடல் தாளம் போட வைக்கிறது.

ரவிஸ்வாமியின் ஒளிப்பதிவில் ஊட்டி ஒளிர்கிறது. ஆனாலும், ராஜேஷ் ஆல்பிரட்டின் எழுத்து, இயக்கத்தில், திகில் உலாவாக இருக்க வேண்டிய சுற்றுலா சாதா உலாவாக கண்ணைக்கட்டுகிறது...! ரசிகர்கள் தியேட்டரை விட்டு வீதி உலா கிளம்பாதிருந்தால் சரி..!
ADVERTISEMENTS