காவியத்தலைவன் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
12"சினிமாவால் நாடகங்கள் அழிந்தது" எனும் பரவலான பழைய கருத்தை பொய்யாக்கும் விதமாக சினிமாவில் நாடகத்தையும், நாடக காலத்தையும் நம் கண்களுக்கு விருந்தாக காவியத்தலைவன் படம் மூலம் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

வசந்தபாலனுக்கு சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகாசோடி, நாசர், தம்பிராமைய்யா, பொன்வண்ணன், சிங்கம்புலி, மன்சூரலிகான் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும், ஜெயமோகன், நீரவ்ஷா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட தொழில்நுட்ப கூட்டமும் உண்மையாக உழைத்து உறுதுணையாக இருந்து, இந்த காலத்து இளம் ரசிகர்களுக்கு ஓர் உன்னதமான காவியத்தை "காவியத்தலைவன்" படமாக தந்திருக்கிறதென்றால் மிகையல்ல!.

இனி காவியத்தலைவன் கரு, கதை, களம், காட்சிபடுத்தல் பற்றி பார்ப்போம்...

நல்ல நட்பும், காதலும்(நண்பன் துரோகி, காதலன் துரோகி என்றாலும் அவனுக்காக உயிரையும் கொடுக்கும். நட்புக்கும், காதலுக்கும் துரோகம் செய்தவர்களும் அதைப்பார்த்து நெஞ்சு பொறுக்காமல் உயிரை விடுவார்கள்...) என்பது தான் காவியத்தலைவன் படத்தின் கரு!. நல்ல நட்பிற்கு இலக்கணமாக விளங்கும் இந்த கருவை, நாடக கொட்டகைகளில் களமாக்கி, கலர்புல்லாக காட்சிபடுத்தி இருப்பதில்தான் ஓங்கி உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் வசந்தபாலன்!.

கதைப்படி., அனுபவத்திலும், வயதிலும் பெரியவரான சுவாமி நாசரின் நாடக குழுவில் காளி- சித்தார்த்தும், கோமதிநாயகம் - பிருத்விராஜூம் முக்கிய நடிகர்கள். ஸ்திரிபார்ட், சைடுபார்ட் வேடமேற்கும் இவர்களை காட்டிலும் பெரிய நடிகராக ராஜபார்ட்டாக பொன்வண்ணன் அந்த சுற்றுவட்டாரத்திலேயே பிரபலமான நடிகராக இவர்கள் குழுவில் இருக்கிறார். வீட்டுவேலையும், விபச்சாரமும் செய்ய விரும்பாத வித்தகி வேதிகா, தன் தாய் குயிலியுடன் முதல் பெண் கலைஞராக அந்த குழுவில் வந்து இணைகிறார். இந்நிலையில், நாசருடன் ஏற்படும் ஈகோ மோதலால், ராஜபாட் பொன்வண்ணன், அந்த நாடக குழுவில் இருந்து பிரிந்து போகிறார்.

காளி - சித்தார்த், கோமதி - பிருத்விராஜ் இருவருக்குள் யார்? அடுத்த ராஜபார்ட் எனும் போட்டி வருகிறது. சீனியர் பிருத்விராஜை காட்டிலும் நாசரின் கண்களுக்கு அதிக திறமை காட்டும் சித்தார்த ராஜபார்ட்டாகிறார். இதில் கடுப்பாகும் பிருத்விராஜ்., அந்த ஊர் ஜமீன் மகளுக்கும், சித்தார்த்துக்கும் உள்ள காதலை, நாசரிடம் போட்டு கொடுக்க, இதில் வெகுண்டெழும் நாசர் சித்தார்த்தை, அத்தனை பேர் எதிரிலும் அடித்து துவைத்து, (இனி எடுபிடி வேலைகள் செய்...)என கட்டளை இடுவதுடன், ஜமீன் மகளை பார்க்கவோ, பேசவோ கூடாது...என்று சத்தியமும் வாங்கி கொண்டு அந்த ஊரில் இருந்து தனது நாடக குழு டேராவையும், காலி செய்கிறார்.

கலை மீது உள்ள காதலில், காதலை மறந்து காதலியை மறந்து..நாடக குழுவுடன் கிளம்பும் சி்ததார்த் மனப்புழுக்கத்துடன் கலைஞனாகவும் இல்லாமல், காதலனாகவும் வாழ முடியாமல் நாடக குழுவின் எடுபிடி வேலைகளை செய்தபடி இருக்கிறார். இத்தருணத்தில் வயிற்றில் பிள்ளையுடன் சித்தார்த்தின் காதலி அனைகாசோடி மலை மீதிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார்..எனும் தகவல் வருகிறது. இதில் பரிதவித்து போகும் சித்தார்த், நாசரை நாடககுழுவிற்கு முன் கண்டபடி பேசி., குருதான் சிஷ்யருக்கு சாபம் கொடுக்க வேண்டுமா? என்ன? யோவ், நான் குருவிற்கே சாபம் தருகிறேன்...என்று நாசருக்கு சாபம் தருகிறார். தன்னால் தன் அவசரத்தால் ஓர் உயிர்போன வருத்தத்தில் நொடிந்து போகும் நாசர் இறந்து போகிறார்...

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி்க்கொள்ளும் பிருத்விராஜ்., சித்தார்த்தை அந்த குழுவில் இருந்து வெளியேற்றி அவரை ஒருதலையாக காதலிக்கும் வேதிகாவையும் தன்வசப்படுத்த காய் நகர்த்துகிறார். பிருத்விராஜின் எண்ணம் பலித்ததா? சிததார்த் ஜெயித்தாரா? வேதிகா யாருக்கு கிடைத்தார்? எனும் சுவாரஸ்யமான கதையுடன், வள்ளி திருமணம், கர்ணமோட்சம், சூரபத்மன் வதை உள்ளிட்ட புராண நாடகங்களையும், புதுமையாக கலந்துகட்டி கலக்கலாக, கமர்ஷியலாக கதை பண்ணியிருக்கிறார்கள். கலர்புல்லாக அதை காட்சியும் படுத்தி இருப்பதுதான் காவியத்தலைவனின் பெரும்பலம்!.

சித்தார்த், காளியாக பிச்சி பெடலெடுத்திருக்கிறார். பிருத்விராஜ், கோமதியாக பிரித்து மேய்ந்திருக்கிறார். சைடுபார்ட், ஸ்த்ரிபார்ட், ராஜபார்ட் வரை அத்தனை வேடங்களிலும், இருவரும் பிரமாதமாக நடித்து நம்மை நாடக காலத்திற்கே அழைத்து போகின்றனர். அதிலும் நண்பனுக்காக உயிரையும் கொடுக்கும் சித்தார்த், தேசபக்தி நிரம்பிய நாடக கலைஞராக ஒருபடி மேலேயும் தெரிகிறார். வடிவு எனும் வடிவாம்பாளாக வேதிகாவும், மாஜி ஜோதிகாவையும் தாண்டி ஜொலித்திருக்கிறார். அனைகாசோடியும் அவர் எடுக்கும் முடிவும் உருக்கி எடுத்து விடுகிறது.

நாசர், தம்பிராமைய்யா, பொன்வண்ணன், சிங்கம்புலி, மன்சூரலிகான் உள்ளிட்டவர்களும் புராண கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி சபாஷ் சொல்ல வைக்கின்றனர்.

ஏ.ஆர். ரகுமானின் இசையில், பாடல்கள், புதுரகத்திலும் முற்றிலும் புதிய ராகத்திலும் சுகராகமாக இருக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு பாத்திரத்தையும் அழகுக்கு அழகு கூட்டுவது மாதிரி மேலும் ஒளிரச்செய்கிறது.

பிரவீன் கே.எல்.லின் படத்தொகுப்பும், ஜெயமோகனின் வசனவரிகளும் கூட படத்திற்கு பெரும்பலம்!. காஸ்டியூம் டிசைனரும், ஆர்ட் டைரக்டரும் இப்படத்திற்காக பெரிதும் உழைத்திருப்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணரமுடிகிறது.

வசந்தபாலனின் இயக்கத்தில் கதையும், களமும், நாடகக்காலத்து கதை என்பதால் சற்றே மெதுவாக நகர்வதும், கிளைமாக்சில் நாடகநடிகர் பிருத்விராஜின் கையில் துப்பாக்கி வந்தது எப்படி? என்னும் கேள்வியும் சற்றே நெஞ்சை குடைகிறது என்றாலும், அதிலும் எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதாவின் கதையை ஒளித்து, மறைத்து கலந்து கட்டி துணிந்து சொல்லியுள்ள வசந்தபாலனின், "காவியத்தலைவன்" நல்லா கல்லா கட்டும் "கலை-கமர்ஷியல் தலைவன்."
ADVERTISEMENTS