அழகிய பாண்டிபுரம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
7திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகிய கிராமமான 'அழகிய பாண்டிபுரத்'தை, படபெயராகவும், பின்னணியாகவும் கொண்டு உருவாகியிருக்கும் காதல், காமெடி, கமர்ஷியல் திரைப்படம்!

ஒரு கிராமத்தில், ஒரே தெருவில், எதிர் எதிர் வீடுகளில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே காலம் காலமாய் நிரந்தர பகை! அந்த பகையின் நதிமூலம், ரிஷிமூலம் தெரிவதற்குள் இந்த வீட்டு பெண்ணுக்கும், அந்த வீட்டு ஆணுக்குமிடையில் காதல் தீ பற்றிக்கொள்கிறது, காதலில் ஜெயிக்க காதலர்கள் ஒன்று சேர தங்கள் குடும்ப பகையின் காரணம் தேடி களம் இறங்குகின்றனர். அற்ப காரணத்திற்காக அப்பாக்கள் அடித்துக் கொண்ட கதை தெரியவருகிறது. அதன்பின் சொற்பநேரத்தில் காதலர்களும் சேர்ந்து, தங்கள் குடும்பத்தையும் ஒன்று சேர்ப்பது தான் 'அழகிய பாண்டிபுரம்' படத்தின் மெஸேஜ் நிரம்பிய மீதிக்கதை!

அறிமுக நாயகராக இளங்கோ, இண்டர்வெல்லுக்கு முன் வரும் கிருஷ்ணர் வேடத்தில் கலக்கியிருக்கிறார். அறிமுகநாயகி அஞ்சனா, எதற்கும் அஞ்சாதவராக தெரிகிறார். எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீமன், சுப்புபஞ்சு, தேவதர்ஷினி, பாத்திமாபாபு, யுவராணி, மீராகிருஷ்ணன், ரிஷா, ஆக்னஸ், சக்திவேல், முத்துகாளை, நெல்லை சிவா, 'கிரேன்' மனோகர், 'சிஸர்' மனோகர், மாஸ்டர் சிவசங்கர், குண்டு ரவி, சங்கர், டாக்டர் காளிதாஸ், தாஸ்கதிர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ரசிகர்களை சிரிப்பாய் சிரிக்க வைக்க முயன்று சிரித்திருக்கிறது!

பரத்வாஜின் இசையில் ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல பாடல்களை கேட்ட திருப்தி. அகிலனின் ஒளிப்பதிவும், அழகிய பாண்டிபுரத்தை மேலும் அழகாக்கி இருக்கிறது.

ந.ராயனின் எழுத்து-இயக்கத்தில், பசுமாட்டு பண்ணையே வைத்திருப்பதாக காட்டப்படும் பகை குடும்பங்களில் ஒன்று, ஆரம்ப காட்சியில் பால் வண்டிக்காரரிடம் பால் வாங்க காத்திருப்பது போன்ற அபத்த காட்சிகள் இருந்தாலும், எதிர்வீட்டை வெறுப்பேற்ற சதாசர்வகாலமும் ஏசி போட்டுவிட்டு அதன் குளிரில் நடுங்கியபடி இருக்கும் பகை குடும்பமும், அழகியபாண்டிபுரம், அக்ரஹாரத்தில் ஆரம்பத்தில் காமிராவை டில்டவுன் பண்ணிகாட்டிவிட்டு, ''இந்த இடம் நம்ம கதைக்களம் கிடையாதுங்க... அடுத்த தெருவுக்கு வாங்க...'' எனும் ஓப்பனிங் சீன்..., பச்சை தண்ணீர் பற்றிக்கொண்டு எரியும் 'பலே' காட்சி, பந்தியில் பாயாச சண்டை... உள்ளிட்ட சுவாரஸ்யங்களுக்காக, ''அழகியபாண்டிபுரத்'தை ரசிக்கலாம்! அங்கே கொஞ்சம் வசிக்கலாம்!!
ADVERTISEMENTS