விஞ்ஞானி திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
4அமெரிக்கா - நாசா விண்வெளி ஆய்வுகூடத்தில் விஞ்ஞானியாக இருந்த தமிழர் பார்த்தி, தமிழ் சினிமாவில் மீரா ஜாஸ்மின், சஞ்சனா சிங் இருவருடனும் ஆட்டம் போட... ஓ சாரி... தமிழ் சினிமாவில் ஒரு விதை நெல் விஞ்ஞானத்தை படமாக எடுக்க விரும்பி இயக்கி, தயாரித்து, நாயகராக நடித்தும் இருக்கும் திரைப்படம் தான் ''விஞ்ஞானி''!

கதைப்படி, விருதுகள் பல குவித்த விஞ்ஞானி பார்த்தி, ஒரு விஞ்ஞானிகள் மாநாட்டில் ''பயிர் வளருவதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாத சத்துக்கள் நிரம்பிய ஒரு விதை நெல்லை உருவாக்கி சாதனை செய்கிறேன் பார்...'' என சவால் விட்டு உறுதி கூறி, ஆராய்ச்சியில் இறங்குகிறார். அதெல்லாம் முடியாது... என அவருக்கு எதிராக சவால்விடும் விஞ்ஞானி பார்த்திக்கும், அவரது ஆராய்ச்சிக்கும் எதிராக களம் இறங்குகிறார், காய் நகர்த்துகிறார். இந்நிலையில், கிராமத்தில் வசிக்கும் மீரா ஜாஸ்மினுக்கு பல நூறு வருடங்களுக்கு முன் வருங்கால சந்ததியினர் பஞ்சம் வரும்போது பிழைத்து கொள்ள வசதியாக தொல்காப்பியர் புதைத்து வைத்து சென்ற பழைமையான விதை நெல்கள் கிடைக்கிறது. அதை விஞ்ஞானி பார்த்தியிடம் சேர்க்க அவரது மனைவியாகிறார் மீரா. அந்த நெல்மணிகளை பார்த்தி கையில் சேருவதற்கு முன் கடத்தி போகிறார் பார்த்தியின் பெண் உதவியாளரும், போட்டி விஞ்ஞானியின் கைகூலியுமான சஞ்சனா சிங்.

போட்டி விஞ்ஞானி கோஷ்டி, சஞ்சனாவை கொன்று அந்த பழியை தூக்கி, தலைமறைவான பார்த்தியின் மனைவி மீரா ஜாஸ்மின் மீது போடுகிறது. போலீஸ், பார்த்தியையும் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கிறது. இதையெல்லாம் தாண்டி, விதை நெல் விஞ்ஞானம் ஜெயித்ததா.? தொல்காப்பியர் தந்த விதை நெல்லால் விஞ்ஞானி ஜெயித்தாரா.? என்பது க்ளைமாக்ஸ்!

பார்த்தி, விஞ்ஞானி ராமகிருஷ்ணனாக நடித்து வாழ முயற்சித்திருக்கிறார். நடிக்காமல் வாழ்ந்திருந்தார் என்றால் நன்றாக இருந்திருக்கும். மீரா ஜாஸ்மின், காவேரியாக கலக்கி இருக்கிறார். தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், பாலாசிங், மியல்சாமி, பாலு ஆனந்த், டி.பி.கஜேந்திரன், சஞ்சனா சிங், தேவதர்ஷினி, தேவிப்ரியா, ஸ்ரீரஞ்சனி, நிர்மல், சுரேஷ் நாயர், கிம்யா சினேகா என எண்ணற்றோர் எக்கச்சக்கமாக நடித்திருப்பது தான் ''விஞ்ஞானி'' படத்தின் பலம், பலவீனம் எல்லாம்!

மாரீஸ் விஜய்யின் இசை, அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு, ஆர்.கே.வித்யாதரனின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், பார்த்தியின் எழுத்து-இயக்கத்தில், அந்த ஒற்றை பழைமையான நெல்லையே பாலீதின் கவரில் போட்டு எடுத்து வந்து வில்லனை தேடி வந்து விஞ்ஞானி சந்திப்பது உள்ளிட்ட(வேறு பொய்யான நெல் மணிகளை பழசாக்கிகாட்ட வேண்டியது தானே.?!) இன்னும் பல காமெடிகளை தவிர்த்திருந்தால் ''விஞ்ஞானி'' ஜெயித்திருப்பான்!

மொத்தத்தில், ''விஞ்ஞானி படத்தை ரசிகர்கள் 'மெய்ஞானி'களாக இருந்தால் பார்க்கலாம், ரசிக்கலாம்!''
ADVERTISEMENTS