ஆ திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
3அம்புலி 3டி குழுவினரின் அடுத்த படைப்பாக வெளிவந்திருக்கும் பிரமாண்ட பேய் படம் தான் ஆ. ஒரே டிக்கெட்டில் 5 பேய் படம் என வித்தியாசமாக விளம்பரம் செய்யப்படும் ஆ திரைப்படம் ஆ என அலறும் படி இருக்கிறதா ஆஹா என பாராட்டும்படி இருக்கிறதா பார்ப்போம்...

அம்புலி கோகுல்நாத், பாபி சிம்ஹா, பாலா எனும் பாலசரவணன், நாயகி மேக்னா உள்ளிட்ட நால்வரும் நண்பர்கள்! நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு பார்ட்டியில் மீண்டும் சந்திக்கும் நண்பர்களுக்குள் ஒரு பெட்டிங்! அதாகப்பட்டது., வசதிபடைத்தவரும், பெட்டிங் பிரியருமான பாபி சிம்ஹா, உலகத்தில் பேயே கிடையாது என்கிறார். பேய் இருக்கிறது என்கின்றனர் கோகுல், பாலா, மேக்னா மூவரும். அப்படி பேய் இருக்கிறதென்று நீங்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்தால் என் சொத்தில் பாதியை தருகிறேன். என் சொத்து பாதியின் மதிப்பு ரூபாய் அறுபது கோடி என்கிறார். அதற்கு ஈக்குவல் பெட்டிங்காக படிக்கும் காலத்தில் கோகுலிடம், சிம்ஹா ஒரு பெட்டிங்கில் தோற்றதால் கொடுத்த 100 சிசி யமஹா பைக்கை இந்த பெட்டிங்கில் கோகுல் அண்ட் கோவினர் தோற்றுப்போனால் திரும்ப தந்தால் போதும் என்கிறார் சிம்ஹா!

அறுபது கோடிக்கு ஒரு பழைய யமஹா பைக் போதும் என்றதும் வந்தால் மலை, போனால் 100 சிசி... என காமிராவும், கையுமாக களம் இறங்குகின்றனர் மூவரும். முதலில் நடுக்கடலில் இரண்டு பேருடன் காணாமல் போன படகு, அவ்வப்போது பேய்களுடன் கடலில் உலா வருவதாக கேள்விப்பட்டு மந்திக்குழி எனும் கடல் பகுதிக்கு போகும் மூவரில், கோகுல் பேயை பார்த்தும், அது கையால் அறை வாங்கியும், அதை வீடியோ பதிவாக்கி சிம்ஹா முன் காட்சிப்படுத்த முடியாத சூழலில் சிக்குகிறார். அடுத்து ஜப்பான் மருத்துவமனையில் ஒரு அறையில் பதுங்கி இருக்கும் பேயை பிதுக்கி எடுக்க ஜப்பான் போகின்றனர் மூவரும். அந்த பேயும் வீடியோவில் பதிவாக மறுக்கிறது.

மேற்படி இரண்டு இன்ஸிடண்டுகளுக்கு அப்புறம் துபாயில் ஒரு வீட்டில் ஏசனியா எனும் ஆண்மோகி பேய், இளவரசி போன்று வாழ்ந்து வருவதாகவும், அது கையில் சிக்கும் ஆண்களின் கதி அதோ கதி தான் எனக் கேள்விப்பட்டு துபாய் போய் இறங்கும் மூவரும், அதற்குரிய ஆட்களை பிடித்து ஏசனியா பேய் முன் அதன் ஏஜென்ட்டுடன் போய் நிற்கின்றனர். பாலசரவணனின் அழகில் பேயும், எசனியா பேயின் அழகில் பாலசரவணனும் மயங்கி நிற்க, ஒன்று கூடினால் உண்டு இல்லை... என ஆக்கிவிடும் அந்த ஆண் மோகினி பேயிடமிருந்து பாலசரவணனை மீட்டு வருவதே கோகுலுக்கும், மேக்னாவிற்கும் பெரிதாய் இருக்கிறது. இதில் எங்கிருந்து வீடியோ காமிராவை எடுப்பது.? என துபாயில் இருந்து திரும்புகின்றனர்.

இதற்கப்புறம் புறநகர் சென்னையில் ஒரு ஏடிஎம் சென்டரின் காவலாளியான எம்.எஸ்.பாஸ்கருக்கும், பெரிய பேய் அனுபவம் உண்டென்று அவரைபோய் பார்க்கின்றனர். அதுவும் இவர்களது 60 கோடி ஆசைக்கு சரியான தீனியாக அமையவில்லை. இதன்பின் கோகுல், பாலாவுடன் சுற்றிக் கொண்டிருக்கும் மேக்னாவை அவரது காதலன் சந்தேகப்பட்டு தேடி வரும்போது அவரும், அவரது நண்பர்களும் விபத்தில் சிக்கி பலியாகின்றனர். அவரைத்தேடி போகும் இந்த மூவரும் பேயிடம் சிக்கி சின்னாபின்னமாக, இதற்கெல்லாம் காரணம், இவர்களது 60 கோடி ஆசை பேய் தான் என சொல்லாமல் சொல்லி முடியும் ஆ திரைப்படம் அதன் பகுதி-2-க்கும் அச்சாரம் போட்டு முடிவது தான் ஆ படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மிரட்டும் கதை!

கோகுல்நாத், பாலசரவணன், மேக்னா, பாபி சிம்ஹா, எம்.எஸ்.பாஸ்கர் எல்லோரும் ஆவில் ஆஹ என சொல்லும் படி நடித்திருக்கின்றனர். ஆனாலும் வித்தியாசமான முக அமைப்பு கொண்ட கோகுல்நாத், பேயாக வராதது வருத்தமளிக்கிறது. அந்த வருத்தத்தை பாலசரவணன் - துபாய் ஏசனியா பேயின் கண்களால் காதலும், பாலைவன காதல் துரத்தலும் பக்காவாக ஈடு செய்து விடுகிறது. பாபி சிம்ஹாவின் ரஜினி ஸ்டைல் பேச்சும், சஸ்பென்ஸ் வில்லத்தனமும் படத்திற்கு பெரிய பலம்! எம்.எஸ்.பாஸ்கரும் அவரது பேய் அனுபவமும் கூட த்ரில். (ஐந்து பேய் கதைகளை ஒரே விமர்சனத்தில் சொல்ல வேண்டியிருப்பதால் இங்கு, ஒருசில வரிகளில் மேற்படி கேரக்டர்களை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஹி...ஹி...!)

சதிஷ்ஜியின் ஒளிப்பதிவு, இருட்டிலும் மிரட்டலாக ஒளிர்வதும், கே.வெங்கட்பிரபு ஷங்கரின் இசையும், சாம்.சி.எஸ்.ன் பின்னணி இசை மிரட்டலும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஹரிசங்கரின் படத்தொகுப்பும் பக்கா!

ஒருசில லாஜிக் குறைகள் இருந்தாலும் ஹரி அண்ட் ஹரிஸ் எனும் இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில், ஐந்து பேய்களின் அட்டகாசம், ஆவை ஆ என வாய்பிளக்க செய்வதுடன் டெக்னிக்கலுக்காக ஆஹா ஓஹோ என்றும் சொல்ல வைக்கின்றன!

மொத்தத்தில், ''ஆ - ஆஹா!''
ADVERTISEMENTS