காடு திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
02வித்தியாசமான படங்களை செய்ய விரும்பும் விதார்த்., கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம் தான் "காடு". புதியவர் ஸ்டாலின் ராமலிங்கத்தின் எழுத்து, இயக்கத்தில், இயக்குனர், நடிகர் சமுத்திரகனியும், சமூக புரட்சியாளராக பெரிய, பெரிய விஷயங்களை எல்லாம் பேசும் சின்னதொரு பாத்திரம் செய்து, விதார்த்துடன் இணைந்து காடு படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்.

கதைப்படி, காட்டையும், காட்டை சார்ந்த விலங்குகள், மரங்களையும் நம்பி வாழ்க்கை நடத்தும் மலைஜாதி கிராமத்தை சார்ந்தவர் வேலு எனும் விதார்த். காட்டில் பட்டு விழும் மரங்களை விறகுகளாக்கி அந்த ஊர் டீ -டிபன் கடைக்கு விற்று பிழைப்பு நடத்தும் வேலு- விதார்த்துக்கும், அந்த டீக்கடையின் முதலாளி தம்பிராமைய்யாவின் மகள் பூங்கொடி எனும் சமஸ்கிருதிக்கும் காதல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பூத்து காய்த்து குலுங்குகிறது.

இந்நிலையில், படித்து வேலையில்லாமல், ஃபாரஸ்ட் ஆபிசர் ஆகும் ஆசையுடன் திரியும் தன் நண்பனுக்காக, அவர் கடத்திய சந்தன கட்டைகளை, தான் கடத்தியதாக சொல்லி சிறைக்கு செல்கிறார் விதார்த். ஒருவாரத்தில் விதார்த்தை, ஜாமினில் எடுப்பதாக சொல்லி சிறைக்கு அனுப்பும் நண்பன்., விதார்த்தை பிடித்து கொடுத்ததையே பெரிய பெயராக்கி., பேனை பெருமாளாக்கி, தான் விரும்பிய காட்டு இலாகா வேலைக்கு போகிறார். சொன்னபடி விதார்த்தை மீட்கவும் இல்லை...சிறையில் வந்து சந்திக்கவும் இல்லை. மாறாக...தன் பதவியை பயன்படுத்தி தொடர்ந்து பெரும்புள்ளிகளுக்கு ஆதரவாக, சந்தன கட்டை கடத்தலில் ஈடுபடுவதுடன், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் மலைவாழ் மக்களை, மலையை விட்டு கீழே குடிபெயர செய்யும் முயற்சியிலும் இறங்குகிறார். இதில் கடுப்பாகும் விதார்த்., சிறையில் சந்திக்கும் புரட்சியாளர் சமுத்திரகனியின் அறிவுரைப்படி., சிறையை விட்டு வெளியில் வந்ததும் எடுக்கும் ஆக்ஷன் ரிவென்ஜ் தான் காடு படம் மொத்தமும்!. காட்டையும், காட்டு மக்களையும், விதார்த், தன் நண்பனின் நயவஞ்சகத்தில் இருந்து காப்பதும், காதலியை கரம்பிடிப்பதும் கிளைமாக்ஸ்!.

விதார்த்., வழக்கம்போலவே மலைவாழ் வேலுவாக மாற நிறைய உழைத்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்து ரசிகர்களை சீட்டோடு கட்டி போடுகிறார்.

இந்த காடுதான் எங்க கடவுள்., காடு அதுவா தர்றதை நாங்க வித்து பிழைப்பு நடத்துவோமே தவிர., ஒரு செடியை கூட வெட்டி சாய்க்க மாட்டோம்...என விதார்த் அடிக்கடி பேசும் டயலாக், மலைவாழ் மக்களின் புனிதத்தன்மையை போற்றும்படியாக அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

விதார்த்தின் காதலி பூங்கொடியாக வரும் சமஸ்கிருதி., தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் மற்றொரு ரேவதி, ரோகிணி, தேவயானி ...எனலாம். அம்மணி, குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கிறார். பேஷ், பேஷ்!.

சமுத்திரகனி புரட்சியாளர் நந்தாவாக, சிறையில் சே குவேராவின் கருத்துக்களை கர்ஜிப்பதில், விதார்த்தின் கவனத்தை ஈர்த்து, அவரது எண்ணத்தில் புரட்சி விதையை தூவுவதில் மட்டுமல்ல...ரசிகர்களின் மனநிலைகளிலும் மாற்றங்களை கொண்டுவர முயல்வது காடு படத்தின் பெரும்பலம்!.

தம்பிராமைய்யா, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், பூ ராம், ஆர்.என்.ஆர். மனோகர், டி.கே.கலா, லட்சுமி, கருணாவாக, துரோகியாக வரும் முத்துக்குமார் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மகேந்திரன் ஜெயராஜூவின் ஒளிப்பதிவில் காடு மிளிர்கிறது. கே.வி-யின் இசையில் காடு மிரட்டுகிறது! படத்தில் பாத்திரங்கள், ஒவ்வொருத்தர் பேசும் டயலாக்குகளும் பிசிரடிக்காத டப்பிங் சவுண்ட்டில் 'டான் டான்' என விழுந்து காடுகளை குளிர்விக்கின்றன, சண்டை மற்றும் பாடல் காட்சிகளில் ஸ்பெஷல் எபெக்ட்ஸூம் மற்ற படங்களை காட்டிலும் பிரமாதம்.

காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும் உன் முன்னோர்களின் ஆன்மா, அதை வெட்ட வர்றவனை நீ வெட்டு தப்பில்லை. "சமாதானம்ங்கிறதே ஏமாற்று வேலைதான்", " உலகத்துலே மொத்தமே 8 பல்லுயிர் காடுகள் தான் இருக்கு....அதுல, 2 இந்தியாவுல இருக்கு" . புலிகளை கொன்னுட்டு, ஜூவுல பிடிச்சு அடைச்சுட்டு, காடுகளை எப்படி வளர்க்க முடியும்?! எனும் டயலாக்குகளிலும், தகவல்களிலும் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம்.,இயக்கத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், படத்தை வளமான காடு ஆகத்தான் படைத்திருக்கிறார்!

மொத்தத்தில், விதார்த்தின் காடு, விரும்பும் நம் "நாடு"...!
ADVERTISEMENTS