விழிமூடி யோசித்தால் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
03அயன் படத்தில் ஹிட் அடித்த பாடல் வரியையே டைட்டிலாக்கி, அதையே, படத்தின் ஒன்லைன் கதையுமாக்கி விழிமூடி யோசித்தால் படத்தை இயக்கி, நடித்து தயாரித்திருக்கிறார் புதியவர் கே.ஜி.செந்தில் குமார். பின்பாதி கதையை புதுசாக யோசித்தவர்(நம்பமுடியாத தீவிரவாத ஒழிப்பு... கதை என்றாலும்) முன்பாதியில் வழக்கமான தமிழ் சினிமா போலவே கல்லூரி காதல் என்று கடுப்பேற்றி விடுகிறார். முன்பாதி கதையையும் செந்தில்குமார் சற்றே கவனமாக கையாண்டிருந்தார் என்றால் ரசிகர்களையும் விழிமூடி யோசிக்க வைத்திருப்பார்!
கதைப்படி, கோயம்பத்தூரில் இருந்து சென்னைக்கு வந்து நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கல்லூரியில் படிக்கிறார் ஹீரோ கே.ஜி.செந்தில்குமார். உடன் படிக்கும் வாய்பேச முடியாத நாயகி நிகிதாவுடன் ஹீரோவுக்கு காதலும் பிறக்கிறது. ஒருநாள் காதலி மற்றும் நண்பர்களுடன்., தன்னுடன் ஊடலில் இருக்கும் காதலியை சந்தோஷப்படுத்த பிக்னிக் போகிறார் ஹீரோ. போன இடத்தில், ஒரு கும்பல் ஒருத்தரை கொன்று போடும் கண்றாவி காட்சி ஒன்றை, காதலி, தன் வீடியோ காமிராவில் பதிவு செய்ய, அதை பார்க்கும் அந்த கும்பல் நிகிதாவை ஓடவிட்டு கொளுத்துகிறது ஹீரோவின் கண் எதிரிலேயே.! இதில் வெகுண்டெழும் நாயகர் கே.ஜி. அந்த ஒட்டுமொத்த கும்பலையும் நண்பர்கள் உதவியுடன் தேடிப்பிடித்து கொன்று குவித்து, நாட்டிற்கும், சி.பி.சி.ஐ.டியில் அதிகாரியாக இருக்கும் தன் அப்பாவுக்கும் உபகாரம் செய்வது தான் விழிமூடி யோசித்தால் படத்தின் மொத்த கதையும்! இந்த கதையுடன் ஹீரோவிற்கு அடிக்கடி ஏற்படும் ஐந்து நிமிடத்திற்கு முந்தைய அமானுஷ்ய சக்தியையும் கலந்துகட்டி வித்தியாசமும், விறுவிறுப்புமாக கதை சொல்லி இருப்பது தான் விழிமூடி யோசித்தால் படத்தின் ஹெலைட்!
புதியவர் கே.ஜி.செந்தில்குமார், ஆரம்பகாட்சியில் முதலாண்டு கல்லூரி மாணவராக சீனியர்களின் ரேகிங்கை தடுக்க புத்திசாலித்தனமாக செயல்படுவதில் தொடங்கி க்ளைமாக்ஸில் நாயகி நிகிதாவை தன் கண் எதிரே தீர்த்துகட்டிய கும்பலை கூண்டோடு கைலாசம் அனுப்பி, இப்படத்தின் பகுதி-2க்கு அச்சாரம் போடுவது வரை புதுமுகமாக தெரியாத அளவிற்கு பிரமாதமாக செய்திருக்கிறார். இவரே இயக்குநராக க்ளைமாக்ஸில் மெயின் வில்லன் தூக்கிட்டு கொல்லும் காட்சியில் பிரமாண்டமாகவும் செய்திருப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு.

நாயகி நிகிதா வாய்பேசமுடியாத பெண்ணாக நடித்திருந்தாலும் நடை, உடை, பாவனைகளில் ரசிக்க வைக்கிறார்கள். மற்றொரு நாயகி மேகா எனும் பானுமெஹ்ரா(தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூனுடன் எல்லாம் ஜோடி போட்டவராக்கும்...) ஒத்தப்பாட்டுக்கு செமகுத்தும் போட்டு மெயின் வில்லனை மட்டுமல்ல... ரசிகர்களையும் சுத்து போட வைக்கிறார் சபாஷ்!
பீயர் போட்டி நடத்தும் சீனியர் ஸ்டூடண்டாக பவர்ஸ்டார் சீனிவாசன், பாம் வைக்க உதவும் கறிக்கடை பாயாக பாலாசிங், சிபிசிஐடி., ஆபிஸர் கணேசனாக-ஹீரோவின் அப்பாவாக அருள் டி.ஜோதி, நாயகியின் அப்பா துரை ரமேஷ் உள்ளிட்டோர் கச்சிதம். நாயகரின் அம்மாவாக வரும் ஊர்வசியின் ஓவர் ஆக்டிங் மற்றும் ஓவர் டாக்கிங் முன்பாதி கதை, காட்சியமைப்புகள் மாதிரியே கடுப்பேற்றுவதை இயக்குநரும், படத்தொகுப்பாளரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!
மற்றபடி கவ்பாசுவின் ரிவைசிங் ஷாட்கள் நிரம்பிய புதுமாதிரி ஒளிப்பதிவும், பி.அதிப்பின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மெய்யாலுமே பெரும் பலம்! மொத்தத்தில், கே.ஜி.செந்தில்குமாரின் நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தில் ரசிகர்கள் சில காட்சிகளில் வேறுவழியே இன்றி விழிமூடிக்கொண்டிருந்தால் விழிமூடி யோசித்தால் படத்தை புதுமையான கரு, கதை, களம் காட்சியமைப்புக்காக ரசிக்கலாம்! ஒருமுறை பார்க்கலாம்!!
ADVERTISEMENTS