ஹேப்பி எண்டிங்(இந்தி) திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
04இரட்டையர்கள் ராஜ் நிதிமொரு - கிருஷ்ணா.டி.கே., இயக்கத்தில், சைப் அலிகான், இலியானா, கோவிந்தா, கல்கி கோச்சலின் ஆகியோரது நடிப்பில், ரொமாண்டிக்-காமெடி படமாக வெளிவந்திருக்கும் படம் தான் ஹேப்பி எண்டிங்.

பிரபல எழுத்தாளர் யுதி ஜெட்லி(சைப் அலிகான்). 6 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் எழுதிய ஆபரேஷன் பேக் எனும் புத்தகம் எல்லோராலும் பாராட்டப்பட்டதோடு, அதிகமாக விற்பனையான புத்தகமாகவும் திகழ்ந்தது. இந்த மகிழ்ச்சியால் பெண்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நேரத்தை வீணடிக்கிறார். இந்தக்காலகட்டத்தில் ஆன்சல்(இலியானா) எனும் புதிய எழுத்தாளர் பிரபலமாக, சைப்பின் புகழ் மங்குகிறது. அத்துடன் சைப்பிற்கு பணக்கஷ்டமும் வருகிறது. இதற்கிடையே பாலிவுட் நடிகரான அர்மான்(கோவிந்தா) தான் சந்தித்த தொடர் தோல்வி படங்களால் வருத்தத்தில் இருக்கிறார். தனக்கான அடுத்த கதையை அமைக்கும் பொறுப்பை சைப்பிடம் வழங்குகிறார் கோவிந்தா. கோவிந்தாவிற்கு வெற்றி படத்திற்கான கதையை சைப் எழுதி கொடுத்து, இழந்த தனது பெயர், புகழை மீண்டும் பெற்று வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற்றாரா என்பது தான் ஹேப்பி எண்டிங் படத்தின் மொத்த கதையும். இதனூடையே, இலியானாவுடனான ரொமான்ஸ் இத்யாதி இத்யாதியை கலந்து காமெடியாக படத்தை கொடுத்திருக்கின்றனர் இரட்டையர்கள் ராஜ் அண்ட் டி.கே.

சைப் அலிகான், யுடி, யோகி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வழக்கம்போலவே தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் அவரது நடிப்பு சூப்பர்.

இலியானாவின் நடிப்பு ஓ.கே., ஆனால் சைப் அளவுக்கு அவரால் ஈடுகொடுத்து நடிக்க முடியவில்லை, ரசிகர்களையும் கவரவில்லை.

ஹேப்பி என்டிங் படத்தை காமெடியாக நகர்த்தி செல்வதே கோவிந்தா தான். ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் கோவிந்தாவிற்கு வில்லன் ரோல் மட்டுமல்ல வழக்கம்போல காமெடியும் தனக்கு நன்றாக வரும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

கல்கி கோச்சலின், சிறப்பு தோற்றத்தில் வரும் கரீனா கபூர், ப்ரீத்தி ஜிந்தா, ரன்வீர் சிங் ஆகியோரது நடிப்பும் ரசிகர்களை கவருகிறது.

சச்சின் சிகாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதாக ஈர்க்கவில்லை. அதேசமயம் படத்தின் ஒளிப்பதிவு அழகு ஓவியமாக தெரிகிறது. படத்தொகுப்பும் பக்கா.

இரட்டையர்களான ராஜ் அண்ட் டி.கே., தங்களது முந்தையை படங்களை போலவே இந்தப்படத்தையும் வித்தியாசமாக படமாக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். படத்தில் கதை என்று புதிதாக ஒன்றுமில்லையென்றாலும், அதை படமாக்கியிருக்கும் விதம் அருமை. குறிப்பாக வசன காட்சிகள் வாவ் சொல்ல வைக்கிறது. படத்தின் இரண்டாம் பாதி மெதுவாக நகர்வது ரசிகர்களை போரடிக்க வைக்கிறது. படத்தில் ஆங்காங்கே ஆங்கில படங்களின் தழுவல் தெரிந்தாலும், இரட்டையர்களின் இயக்கத்தில், ஹேப்பி என்டிங், நான்ஸ்டாப் காமெடியாக இருக்கிறது.

மொத்தத்தில், ஹேப்பி எண்டிங் - பைசா வசூல் மற்றும் நான்ஸ்டாப் காமெடி!
ADVERTISEMENTS