அப்புச்சி கிராமம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
07விஞ்ஞானம், விண்கல், விஞ்ஞானிகள்...என டிரைலரில் வரும் பில்டப்புகளை பார்த்து ஏதோ சயின்ஸ் பிக்ஷன் படமென்று போனால், வழக்கமாக காதில் பூ சுற்றும் காதல், காமெடி கதைதான் அப்புச்சிகிராமமும்!.

சிலரது பங்காளி சண்டை, பண சண்டை, ஜாதிசண்டை உள்ளிட்ட இத்யாதி, இத்யாதி காரணங்களால் இரண்டுபட்டு கிடக்கும் ஊர்தான் அப்புச்சி கிராமம். இந்தியாவை நோக்கி வெகுவேகமாக வரும் விண்கல் ஒன்று தமிழ்நாட்டில், அதிலும் அப்புச்சிகிராமத்தில் வழுந்து ஊரையே அழிக்கப்போகிறது...என்னும் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு கண்டு ரெண்டுபட்டு கிடக்கும் ஊர்மக்கள் ஒன்று சேர்கிறார்கள்.

இதில் கஞ்சன், வள்ளல் ஆவதும், விரோதிகள் நண்பர்கள் ஆவதும், மொடாக்குடியன் குடியை மறப்பதும்., இதுநாள்வரை குடிக்காதவர்கள் ஒருநாள் குடித்து பார்ப்போம்...என கிளம்புவது உள்ளிட்ட காமெடி, சென்டிமெண்ட், லவ் எபிசோட்டுகள் நான்கைந்தை கலந்து கட்டி, அப்புச்சி கிராமத்தை கலர்ஃபுல்லாக காட்ட முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர்.வி.ஆனந்த். ஆனால், அதில் பாதிக்கு மேல் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக இருப்பது தான் அப்புச்சி கிராமத்தின் பலவீனம்!. ஆனால், அதையும் தாண்டி தன் ஆட்டுக்குட்டியை ஊர் அழியும் நேரத்தில் விட்டு வர மறுத்து போராடும் சிறுமி, காதலனுடன் சேர்ந்து சாக விரும்பும் காதலி,..உள்ளிட்ட சுவாரஸ்ய காட்சிகள் பிளஸாக மேலோங்கி நிற்கின்றன.

பிரவீன் குமார், விஷ்ணு முரளி, அனுஷா, சுவாஷிகா உள்ளிட்ட புதுமுகங்களுடன் கஞ்சா கருப்பு, ஜி.எம்.குமார், ஜோ மல்லூரி, நாசர், சுஜா வாருணி உள்ளிட்ட ஒரு பெரும்நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அதில், சுஜா வாருணியின் பாத்திரமும், ஆட்டமும் படத்தில் வித்தியாசத்தையும் விறுவிறுப்பையும் கூட்டுகிறது. அதேநேரம அம்மாம் பெரிய விண்கல் விழப்போகும் மேட்டரை, தமிழக முதல்வர் மட்டுமே கையாள்வது அபத்தமாக இருக்கிறது. இந்தியாவே., ஏன்? உலகமே....இந்த விசயத்தில் மூக்கை நுழைத்திருக்க வேண்டுமே? அதுபற்றி ஒருகாட்சியும் இல்லாதது அப்புச்சி கிராமத்தை போரடிக்க செய்கிறது!.

பிரசாத்தின் ஒளிப்பதிவு, விஷாலின் பின்னணி இசை...உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள்.

புதியவர் வி.ஆனந்தின் எழுத்து, இயக்கத்தில் விண்கல் பற்றிய படத்தில் போதிய விஞ்ஞானம் இல்லாதது "அப்புச்சிகிராமத்தை சும்மா பூச்சி காட்டும் கிராமமாக காட்டுகிறது!".
ADVERTISEMENTS