விலாசம் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
09இதுநாள்வரை வில்லன் நடிகராகவும், இரண்டாம் நாயகராகவும் நடித்துவந்த பவன், கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம். பவனுக்கு ஹீரோ விலாசம் தந்திருக்கும் விலாசம் படத்தின் கதைக்களம் பற்றி இனி....

கதைப்படி, லோக்கல் ரவுடியான பவன்., ஒரு இக்கட்டான சூழலில், நான்கு கயவர்களிடமிருந்து கதாநாயகி சனம் ஷெட்டியை காபந்து செய்கிறார். அதுமுதல் நாயகி சனத்திற்கு பவன் மீது ஒரு ஈர்ப்பு. ஆனால், பவனுக்கு ஒருநாளாவது சனத்துடன் சல்லாபிக்க வேண்டுமென்பது நினைப்பு. ஆனால், , நேரமும், காலமும் ஒத்துவராததால் காத்திருக்கிறார். இதுமாதிரி சூழலில், ஒருநாள் செய்யாத கொலைக்குற்றத்திற்காக, போலீஸிடம் சிக்கும் பவனை, ஜாமினில் எடுக்க வரும் சனம் மீது அந்த கணமே, பவனுக்கு இருக்கும் தவறான எண்ணம் மறைந்து காதல் கசிந்துருகுகிறது. அப்புறம்? அப்புறமென்ன? பவன் நல்லவராகி, சனத்தை தடை பல கடந்து கரம்பிடிக்கிறார்...நல்ல காவல்துறை அதிகாரி ஆடுகளம் நரேனின் அட்வைஸூடன்! கூடவே, நாயகி சனம் ஷெட்டியின் காதல் நாயகர் ரவுடி பவனுக்கு நல்விலாசம் தருகிறது. இதுதான் விலாசம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்பு மான கரு, கதை, களம்...எல்லாம்.

பவன், அடாவடி நாயகருக்கான அத்தனை அம்சங்களுடன் தன் பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார்.ஆக்ஷன் வரும் அளவிற்கு மனிதருக்கு ரொமான்ஸ் வராதது மைனஸ்!.

சனம் ஷெட்டி, சபாஷ் குட்டி எனும் அளவிற்கு பளிச் நடிப்பும், சிலிர்ப்பும் ஏற்படுத்துகிறார். சுஜிபாலாவின் குத்தாட்டம், ஷர்மிலி, பாவா லட்சுமணன், நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்திற்கு ப்ளஸ்!.

பா. ராஜகணேசனின் இயக்கத்திற்கு யு.கே.செந்தில்குமாரின் அழகிய ஒளிப்பதிவும், ரவிராகவின் இனிய இசையும் பக்கபலமாக இருந்து விலாசத்திற்கு வெற்றி முகவரி தந்திருக்கின்றன எனலாம்!.

மொத்தத்தில் விலாசம் பவனுக்கு ஹீரோவாக விலாசம் தந்திருப்பதுடன் ரசிகர்களுக்கு சந்தோசம் தரும் திரைப்படம்!.
ADVERTISEMENTS