திருடன் போலீஸ் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
13அட்டக்கத்தி, குக்கூ படங்களுக்கு பின் தினேஷ் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், பீக்கில் இருக்கும் கதாநாயகிகள் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது போல கதாநாயகன் விஜய் சேதுபதி ஒத்த பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கும் திரைப்படம், அதற்கும் மேல் ஆஸ்தான நாயகி (!) ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக விஜய் சேதுபதி விட்டு்த் தந்திருக்கும் திரைப்படம், இவை எல்லாவற்றிற்கும் மேல் போலீஸ் துறையை பொளந்து க(கா)ட்டி புகழ்ந்து கட்டியிருக்கும் வெற்றி திரைப்படம் தான் திருடன் போலீஸ்.

கதைப்படி, போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஹெட்கான்ஸ்டபிள் சிங்காரம் எனும் நடிகர் ராஜேஷின் மகன் தான் விஷ்வா எனும் ஹீரோ தினேஷ். இவருக்கும் இதே குடியிருப்பில் வசிக்கும் ஏ.சி.யின் மகனுக்குமிடையில் அடிக்கடி முட்டல், மோதல்கள் ஏற்பட்டு, அதனால் அந்த போலீஸ் குடியிருப்பே அல்லோல கல்லோலப்படுகிறது. இதில் கடுப்பாகும் ஏ.சி., ஹெட்கான்ஸ்டபிள் ராஜேஷை கூப்பிட்டு கடிந்து கொள்ள, நேர்மையான ஏட்டாக வரும் ராஜேஷ், சும்மா குதிக்காதீங்க சார், உங்க புள்ள, உங்க பவரை பயன்படுத்தி செய்த ஒரு கற்பழிப்பு பற்றிய ஆதாரத்தை நானும் திரட்டி முடிச்சுட்டேன். கூடிய விரைவில் கமிஷனர்கிட்டே உங்க ரெண்டு பேத்தையும் மாட்டி விடுறேன் என்று உண்மையை போட்டுடைக்க, இதில் வெகுண்டெழும் ஏ.சி., தன் கைக்கூலி - ரவுடி நான் கடவுள் ராஜேந்திரனை தூண்டிவிட்டு ஏட்டு ராஜேஷை போட்டு தள்ளுகிறார். ராஜேஷ் இறந்தால் ஏட்டு குடும்பமே போலீஸ் குடியிருப்பில் இருந்து காலி செய்து போகும் எனும் கனவில் சந்தோஷப்படுகிறது ஏ.சி. குடும்பம்!.

மாறாக கமிஷனர் ஆடுகளம் நரேன், ராஜேஷின் நேர்மையை பாராட்டி அவரது வாரிசு ஹீரோ தினேஷூக்கு போலீசில் வேலை தருகிறார். இதில் மேலும் கடுப்பாகிறது ஏ.சி.யும், அவரது குடும்பமும். ஆனால் உயிருடன் இருந்தவரை எப்போதும் கண்டிப்பாக நடந்துகொண்ட அப்பா ராஜேஷையும், அவரது போலீஸ் வேலையையும் பிடிக்காத தினேஷூக்கு, அப்பா இறந்தபின்பு தான் அவரது அருமையும், போலீஸ் வேலையின் கடுமையும் புரிய வருகிறது. உயர் அதிகாரிகளின் படுத்தலையும் தாண்டி, கமிஷனரின் ஒப்புதல் ப்ளஸ் பாராட்டுதலோடும் போலீஸ் நண்பன் பாலசரவணனின் உதவியோடும் அப்பாவை கொன்றவர்களை ஹீரோ தினேஷ் கூண்டோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் கதை தான் திருடன் போலீஸ். படத்தின் மொத்த கதையும், இந்த கதையோடு நாயகி ஐஸ்வர்யா ராஜேஷூடனான தினேஷின் லவ்வையும், கவுன்சிலர் தம்பியாக வந்து ஒத்தப்பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டு போகும் விஜய் சேதுபதியின் லந்தையும் கலந்துகட்டி திருடன் போலீஸ் திரைப்படத்தை, வித்தியாசமும், விறுவிறுப்புமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜூ.

அட்டக்கத்தி தினேஷ், விஷ்வா பாத்திரத்தில் அட்டையாக ஒட்டிக்கொண்டு பக்காவாக நடித்திருக்கிறார். அப்பா ராஜேஷ் உயிருடன் இருக்கும்வரை அவரது கண்டிப்பை தப்பாக புரிந்துகொண்டு கடுப்பாகும் தினேஷ், அப்பாவின் மறைவிற்கு பின் கொஞ்சம், கொஞ்சமாக பொறுப்பான போலீஸ் ஆகும் காட்சிகளில் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். பிணவறைக்கு போய் வந்து வாந்தி எடுக்கும் அப்பாவை, நக்கல் அடிப்பதிலாகட்டும், திருடனை கோர்ட்டுக்கு அழைத்து போகும் போது கைவிலங்கை தன் கையிலும் மாட்டிக்கொண்டு போய் கையில் காயம் ஏற்பட்டு திரும்பும் அப்பா ராஜேஷூக்கு ஆயின்ட்மெண்ட் கொடுத்துவிட்டு நல்லா போடுங்க, வேணுமுன்னா இன்னும் வாங்கி வருகிறேன் என்றபடி போலீஸ் அடியில் அக்கியூஸ்ட்டுகளுக்கு தான் காயம் ஏற்படும் இங்க,. போலீஸூக்கே காயம் என்று முனகியபடி கிண்டல் அடித்ததெல்லாம், தான் போலீஸ் ஆனபின், தனக்கு நேரும் காட்சிகளில், பக்காவாக நடிப்பை வாரிவழங்கி,.நம் விழியோரம் நீர் கசிய விடுகிறார் மனிதர். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் தினேஷ் கச்சிதம்.

ஏரியாவிற்கு புதிதாக குடிவரும் சப் இன்ஸ்பெக்டர் மகளாக பூர்ணிமாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தினேஷின் மனதை மட்டுமல்ல, ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொள்கிறார். தினேஷ், இவருக்கு லிப்ட் கொடுக்கும் இடங்களும், இவர் தினேஷிற்கு லிப்ட் கொடுக்கும் இடங்களும் சூப்பர்ப்!.

தினேஷின் சீனியர் கான்ஸ்டபிள் வணங்காமுடியாக, தினேஷின் நண்பராக வரும் பாலசரவணன் தான் ஏற்று நடித்த குட்டிப்புலி பப்புவையும், பண்ணையாரும் பத்மினியும் பீடையையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கிறார் இப்பட பாத்திரத்தின் மூலம். ஒரு பொம்பளைகிட்டே அடி வாங்கிட்டு வந்த போலீஸூன்னும் நான் கைதிகளுக்கு சாப்பாடு வாங்கப்போற போலீஸூன்னும் யாருக்கும் தெரியாது. நம்ம போலீஸூக்குள்ள மரியாதையை இப்ப பாருன்னு., மக்கள் இவர்கள் யூனிபார்முக்கு கொடுக்கும் மரியாதையை தினேஷூக்கு புரிய வைக்கும் இடங்களில் தொடங்கி சீனுக்கு சீன் காமெடி சரவெடிகளை கொளுத்தி போடும் இடங்களில் பாலசரவணன், நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

பாலசரவணன் மாதிரியே ரவுடி மாணிக்கமாக வரும் நான் கடவுள் ராஜேந்திரனும் அவரது சகோதரர் மரவட்டையாக வரும் ஜான்விஜய்யும், விக்கு தலையும் கட்டின புடவையுமாக பண்ணும் அலப்பறைகள், தியேட்டரில் அடிக்கடி சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.வில்லன் ராஜேந்திரன் இனி காமெடியனாக தாராளமாக நடிக்கலாம், கலக்கலாம்.

கெஸ்ட் ரோல் விஜய் சேதுபதி, எஸ்.பி.பி., ராஜேஷ், ஆடுகளம் நரேன், ரேணுகா, உமா பத்மனாபன், முட்டை கண்களுடன் மிரட்டும் ஏ.சி.யின் வாரிசு நிதின் சத்யா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜாவின் இசையும், சி்த்தார்த்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும்பலம்! புதியவர் கார்த்திக் ராஜூவின் எழுத்து, இயக்கத்தில் நாம் ஓப்பனிங்கிலேயே சொன்ன மாதிரி போலீஸ் துறை உயர்அதிகாரிகளின் குறிப்பாக அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களின் அக்கிரமங்களை காமெடியாக பொளந்து க(கா)ட்டி, அத்துறையின் அருமை பெருமைகளையும் புகழந்து காட்டியிருக்கிறது திருடன் போலீஸ்!

"மொத்தத்தில் திருடன் போலீஸ், திரும்ப, திரும்ப பார்த்தாலும் திகட்டாத போலீஸ்!".
ADVERTISEMENTS