ஜெய்ஹிந்த்-2 திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
14பல வருடங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற தனது ஜெய்ஹிந்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என ஆக்ஷன் கிங் அர்ஜூன் கல்லா கட்ட முயன்றிருக்கும் திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் 2. அதை இன்னும் கொஞ்சம் நல்லா காட்ட அர்ஜூன் முயன்றிருந்தால் ஜெய்ஹிந்த் - 2 வும் ஜெயித்திருக்கும் !

கதைப்படி, கராத்தே மாஸ்டரான அர்ஜூன், ஒரு ஐந்து வயது ஏழை பெண் குழந்தை பணக்கார கல்விக்கு ஆசைப்பட்டு அநியாயமாக குடும்பத்தோடு பலியாவது கண்டு வெகுண்டெழுகிறார். "இந்தியாவில் தனியார் பள்ளிகளே கூடாது. எல்லா தனியார் பள்ளிக்கூடங்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். ஏழை, பணக்காரர் வீட்டு பிள்ளைகள் பாகுபாடின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என கல்வி சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் சிலவற்றை மீடியாக்களை கூட்டி அறிவித்து தனியார் பள்ளி முதலாளிகள் சிலரின் கொலை வெறிக்கு ஆளாகிறார்.

அந்த சில தனியார் பள்ளி முதலாளிகள் ஒன்று கூடி ஆக்ஷன்கிங் செய்யாத குற்றங்களை எல்லாம் அவர் மீது சுமத்தி அவரை பிடித்து ஜெயிலில் போடுகின்றனர். கூடவே அவரை கொலை செய்யவும் ஆட்களை அனுப்புகின்றனர். சககைதிகள் தொடங்கி சிறை வார்டன்கள் வரை ஒட்டுமொத்த சிறையும் அர்ஜூனை கொல்ல முயன்றும், ஒரு நல்ல எண்ணமுடைய கைதியின் உதவியுடன் அங்கிருந்து தப்பிக்கும் ஆக்ஷன்கிங் நேராக லண்டன் போய் இறங்கி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பு படிக்கும் ஏழு இந்திய மாணவர்களை கடத்தி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல்லா பள்ளி மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க முயற்சிக்கிறார். ஆக்ஷன்கிங் அர்ஜூனின் முயற்சி வெற்றி பெற்றதா? அந்த ஏழு லண்டன் மாணவர்கள் யார்? அவர்களுக்கும் இந்திய ஏழை பள்ளி மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என இன்னும் ஏகப்பட்ட கேள்விகளுக்கு வித்தியாசமாக விடையளிக்கிறது அர்ஜூனின் ஜெய்ஹிந்த் -2 .

தற்காப்பு கலை கற்றுத்தரும் குருவாக, அபிமன்யுவாக அர்ஜூன். இத்தனை வயதிலும் உடம்பை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போலவே அதிரடி செய்து கதாநாயகி சுர்வின் சாவ்லாவை மட்டுமல்லாது லண்டன் மாணவி சிம்ரன் கபூரையும் கவருகிறார். கூடவே ரசிகர்களையும் சீட்டோடு கட்டி போடுகிறார் ஆக்ஷன் சீன்களில் மட்டும் ! மற்றபடி ஆக்ஷன்கிங்கின் ரொமான்ஸ், பர்ப்பாமெண்ட்ஸ் இதெல்லாம் காமெடியாக இருக்கிறது.

நாயகி சுர்வின் சாவ்லா அர்ஜூன் சாருக்கு மகள் மாதிரி தெரிந்தாலும் மனதில் நிற்கிறார். ஜெயிலுக்கே வந்து அவர் அபிமன்யுவை மணமுடிக்கும் காட்சிகள் நச் சென்று படமாக்கப்பட்டிருக்கிறது. நாயகி சுர்வின் சாவ்லாவே ஆக்ஷன்கிங்கிற்கு மகள் மாதிரி தெரிகிறார் என்றால் அர்ஜூனால் கடத்தி பின் காப்பாற்றப்படும் லண்டன் இந்திய மாணவி சிம்ரன் கபூர் சாருடன் டூயட் பாடுவதெல்லாம் ரொம்ப ஓவர் ! ஆனாலும் சுர்வின் மாதிரியே சிம்ரனும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காமெடி பிரம்மானந்தம், ராகுல்தேவ், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி, விஜய் பிரசாத், நரசிம்மராஜூ, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், சுமீத்திவாரி, பேபி யுனிதா என பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. இருந்து என்ன பயன்? பிரம்மானந்தம், மயில்சாமியால் கூட சிறப்பான சிரிப்பு தர முடியாதது வேதனை!

அர்ஜூன் ஜெனியாவின் இசை இருப்பதே தெரியவில்லை. ஹச்.சி.வேணு கோபாலின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய ப்ளஸ் ! "இந்தியாவில் எல்லா மாணவர்களுக்கும் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி கல்வி வழங்க அரசு முயற்சிக்க வேண்டும் !" எனும் அழகான மெஸேஜ், ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கடி, சென்டிமென்ட் என அர்ஜூனின் எழுத்து, இயக்கத்தில் தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருப்பதால் சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஆக மொத்தத்தில் ஜெய்ஹிந்த்-வுக்கும் 2-க்கும் பெயரில் மட்டுமே பெரும் ஒற்றுமை ! கதையில், காட்சிபடுத்தலில், வெற்றியில்....?!
ADVERTISEMENTS