புலிப்பார்வை திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
15பலதரப்பினது எதிர்ப்புக்கும், பலத்த எதிர்பார்ப்பிற்குமிடையில் வெளிவந்திருக்கும் புலிப்பார்வை, பிரவீன் காந்தியின் எழுத்து, இயக்கத்தில் தமிழனின் பெருமை பேசும்விதமாக உறுமி இருக்கிறதென்றால் மிகையல்ல!. இலங்கையில் ஈழத்திற்காக நடந்த இறுதிக்கட்ட போரில் புலி்களின் தலைவர் பிரபாகரனின் இளைய வாரிசு பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம், ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் புலிப்பார்வை, ஒரு சில அமெச்சூர் தனமான குறைகளை கொண்டிருந்தாலும், கல்நெஞ்சம் கொண்டோரையும் கரைக்கும் விதத்தில் பார்த்திருக்கின்றது, பாய்ந்திருக்கின்றது,.பாதிக்கிருக்கின்றதெல்லால் மிகையல்ல...!

இனி,. படம், கதை, களம் பற்றி பார்ப்போம்....

இலங்கை,. ஈழப்பகுதியில் நடந்த இறுதிக்கட்டபோரில் புலிப்படை வீரர்களுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் நடந்த உக்கிரமான சண்டை பின்னணியில் படம் தொடங்குகின்றது. இலங்கை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் உள்ளிட்ட போர் விமானங்கள் மூலமாகவும், டாங்குகள், பீரங்கிகள் மூலமாகவும் தமிழர் பகுதிகளில் குண்டுகளை வீச, பதிலுக்கு புலிகளும் தாக்கி, படு பரபரப்பாக ஆரம்பமாகிறது புலிப்பார்வை படக்காட்சி....கூடவே புலிகளின் தலைவராக இருந்த கிருபாகரனின் (புலிப்பார்வை படத்தில் புலித்தலைவர் பிரபாகரனின் பெயர் அப்படித்தான் உச்சரிக்கப்படுகிறது). இளைய மகன் பாலேந்திரனின் (பாலசந்திரன் எனும் இவரது பெயரும் , இப்படத்தில் பாலேந்திரன் என்றே விளிக்கப்படுகிறது..) பள்ளி பருவமும் காட்சிபடுத்தப்படுகிறது. பிற புலிக்குழந்தைகளுடன், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை தானும் பயின்று வளரும் பாலேந்திரன், துப்பாக்கிகளை பற்றியும் நன்கு பயின்று தேருகிறான்.

ஒருகட்டத்தில், உடன் படிக்கும் சிறுவர்களின் புலி அப்பாக்கள் இறந்தநாளில் அவர்களது சமாதிக்கு மலர்வளையம் வைக்க சிறுவர்களுடன் போகும் பாலேந்திரனை, அதுநாள்வரை கண்காணித்து வரும் இலங்கை ராணுவம் அலேக்காக கடத்திச் சென்று, ஒரு மிலிட்டரி முகாமில் அடைத்து வைத்து அவரது அப்பா புலித்தலைவர் குறித்தும், அவரது படைபலம் குறித்தும் கேட்டறிய முயலுகிறது. வாயைத்திறக்க மறுக்கும் பாலேந்திரனின் வீரம் கண்டும், விழிகளில் பயமின்றி வழிந்தோடும் தீரம் கண்டும் மிரளும் இலங்கை ராணுவம்...பாலேந்திரனை வைத்து அவரது அப்பாவை பிடிக்க திட்டம் தீட்டுகிறது. பாலேந்திரன் தங்களிடம் சிறைபட்டிருக்கும் வீடியோவை, ஒரு சி.டி.யாக்கி தங்களிடம் பிடிப்டட மற்றொரு இளம்புலியிடம கொடுத்தனுப்பி புலித்தலைவரை தங்கள் வலையில் வீழ்த்த நினைக்கிறது சிங்கள ராணுவம்.

ஆனால், ஒரு இளம்பெண்ணுடன் காதல்வயப்பட்ட அந்த இளம் புலிவீரன், தன் இயக்கத் தலைவனின் இளம்வாரிசு, சிங்கள ராணுவத்திடம் சிறைப்பட்டு கிடக்கும் சி.டி.யுடன் தான், தான் சிறையிலிருந்து விடுபட்டு செல்கிறோம்...என்பது தெரியாமல் தன் காதலியை தேடி போகிறார். காதலுக்கும், காதலிக்கும் கட்டுப்படும் அவர்,. சி.டி.யை புலித்தலைமையிடம் சேர்த்தாரா? புலித்தலைமை பாலேந்திரனை விடுவிக்க போராடியதா? அப்புறம் எப்படி? பாலேந்திரன் குண்டடிபட்டு இறந்து போனான்...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு, நிஜத்துடன் கற்பனையையும் கலந்து வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது புலிப்பார்வை படத்தின் பரபரப்பான மீதிக்கதை.!

இளம்வீரனின் அமெச்சூர்தனமான காதல் எபிசோடுகளை தவிர, பிற காட்சிகள் குறிப்பாக நாட்டிற்காக , தலைவனின் மகனுக்காக, நடுக்கடலில் காதலை கைவிட்டு, மீண்டும் இயக்கத்திற்கு திரும்பும் அந்த காதல் வீரனை கண்ணியம் மெச்சும்படி படமாக்கப்பட்டிருப்பது ஆறுதல்!, பாலேந்திரன் பிடிபடும் காட்சிகள்., மீட்கப்படும் காட்சிகள், மீண்டும் சிக்கி சிங்கள ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாகும் காட்சிகள்...புலித்தலைவர் கிருபாகரனின் என்ட்ரி., இறந்துபோன சடலங்களில் இருந்து எழுந்து இயந்திர துப்பாக்கி உதவியுடன் எதிராளிகளை பந்தாடும் காட்சி உள்ளிட்ட காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது படத்திற்கு பெரும்பலம்!. அதேநேரம், ஹெலிகாப்டர் தவிர்த்த போர்விமானங்கள் குண்டு வீசும் காட்சிகள் வீடியோ கேம் பார்ப்பது மாதிரி படமாக்கப்பட்டிருப்பது பலவீனம்!. இதுமாதிரி போர்முனை கதைகளில் காதல் காட்சிகள், டூயட்டுகள் தேவைதானா? என்பதை இயக்குனர் இன்னும் சற்று யோசித்து திணித்திருக்கலாம்!

மற்றபடி., பாலேந்திரனாக சிறுவன் பாலசந்திரனாக வரும் அறிமுக சிறுவன், புலித்தலைவர் கிருபாகரன் எனும் பிரபாகரனாக வரும் வேந்தர் மூவிஸ் மதன் (மதன், அச்சு அசலாக பிரபாகரனின் நடை, உடை, பாவனைகளில் பிரகாசித்திருப்பது படத்திற்கு மேலும் பலம்) உள்ளிட்டோர் பாத்திரத்திற்கு ஏற்ற பளி்ச் தேர்வு!. சிங்கள ராணுவத்தில் மேஜராக! - கொடுமையாளராக வரும் ராஜசேகரா, தனது பெயரிலும் ,அடிக்கடி ராஜபக்சே கெட்-அப்பிலும், பாலேந்திரனின் வயதை ஒத்த தன் இளம் மகனையும் வீரனாக்க முயன்று தோற்பதில் ஆயிரம் அர்த்தங்களை பதிவு செய்து ஜெயித்திருக்கிறார் பிரவீன் காந்தி!. அதேமாதிரி சிங்கள ராணுவத்தில், சிலருக்கும் ஈவு, இரக்கம் உண்டு என்பதற்காக, கலிங்கா பாத்திரத்தை கண்ணியமாக காட்டியிருப்பதற்கும் இயக்குனரை பாராட்டலாம்!.

"வீரமரணம் என்பது போராளிகளுக்கும் ஒன்று தான், தலைவனுக்கும் ஒன்றுதான்.!", " பயம் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பிறக்கும்போதே அவனது தாயின் கர்ப்பப்பையில் இருந்து நீக்கப்பட்ட ஒன்று", என்ற வசனங்களும் " உங்களால் எண்ட அப்பாவை பிடிக்கவே முடியாது..." என பாலேந்திரன் அடிக்கடி அடிக்கும் பஞ்ச் டயலாக் உள்ளிட்டவைகளுடன் பச்சமுத்து என்ற பாரிவேந்தரே எழுதியிருக்கும் "நீ பார்த்த புலிப்பார்வை..." பாடலும் நச்சென்று நம் மனதை டச் செய்கின்றன.

மொத்தத்தில் யுத்த பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் பிரமாண்ட தமிழ்ப்படமான "புலிப்பார்வை" தமிழனின் "புகழ்பார்வை!"
ADVERTISEMENTS