ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
oru orrla rendu raajaவிமலை காமெடியனாகவும், பரோட்டா சூரியை கதாநாயகராகவும் காட்ட முயன்றிருக்கும் திரைப்படம் என்று ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்!

அதாகப்பட்டது இரண்டு வயசிலிருந்து நட்போடு வாழும் ஒரே ஊர்க்காரர்கள் பரோட்டா சூரியும், விமலும். சென்னையில் வேலை பார்க்கும் சூரி, லீவுக்கு ஊருக்கு வரும்போது பார்த்தவுடன் ஒரு பணக்கார வீட்டு பப்ளிமாஸ் மீது... ஓ, சாரி பருவமங்கை மீது காதல் கொள்கிறார். சென்னைக்கு தப்பித்து போக திட்டமிடும் அந்த ஜோடிக்கு உதவ போகும் விமல், டிக்கெட் எடுக்க கூட இருபது ரூபாய் பற்றாக்குறையில் இருக்கும் சூரியின் இயலாமையையும், இல்லாமையையும் சொல்லி அந்த காதலுக்கு வேட்டு வைத்து, காதலிக்கு பதில் சூரியுடன் சென்னை கிளம்புகிறார்.

அப்புறம்? அப்புறமென்ன..? அதே ரயிலில் தங்களுடன் பயணிக்கும் ப்ரியா ஆனந்த் மீது காதல் கொள்கிறார் விமல். அதுவும் எப்படி.? ஆப் பிராந்திக்காக விருதுநகர் ஸ்டேஷனில் இறங்கி ஓடி, ரயிலை எடுப்பதற்குள் பிராந்தி வாங்கி திரும்பும் தன்னுடன், ஓடி வந்து குவாட்டர் பிராந்தி வாங்கி திரும்பும் ப்ரியா ஆனந்த்தை பார்த்து முதலில் அதிர்ச்சியும், அதன்பின் அவர் ஒரு டாக்டர், ரயிலில் ஒரு அவசர பிரசவத்திற்கு மருந்துகள் கிடைக்காத காரணத்தினால் தான் மது வாங்கி வந்தார்... என்பது தெரிந்ததும் மகிழ்ச்சியும் கொண்டு ப்ரியா மீது காதல் கொள்கிறார்.

பத்தாங்கிளாஸ் படித்துவிட்டு படிப்புக்கு பை பை சொல்லி எந்த இலக்கும் இல்லாமல் திரியும் விமலின் எம்பிபிஎஸ்., டாக்டர் ப்ரியா ஆனந்த் உடனான ஏழாம் பொருத்த காதலுக்கு கட்டியம் கூறி பச்சை கொடி காட்டுவதற்காகவே ப்ரியா ஆனந்த், ஒரு பொது பிரச்னையில் அதுவும் பலர் உயிர் சம்பந்தப்பட்ட பெரும் பிரச்னையில் மாட்டி, விமலின் கண் முன்பே உயிருக்கு போராடும் இடியாப்ப சிக்கலில் இருக்கிறார்.

அந்த சிக்கல்களை எல்லாம் விமலும், விமலைத்தாண்டி பரோட்டா சூரியும் எப்படி களைந்து ப்ரியா ஆனந்தையும் இன்னும் பல உயிர்களையும் எப்படி மீட்கின்றனர்? எனும் கதையுடன் விமல், ப்ரியா ஆனந்தின் காதல் காமெடி, பரோட்டா சூரிக்கும் பைட்டு, ஆடி வழிபோக்கர் தம்பி ராமையாவுக்கும் சென்டிமென்ட், ரயில் சிநேகிதர் சிங்கமுத்துவின் குடி காமெடி கலாட்டா,சில நிமிடங்களே ப்ரியாவின் ப்ரண்டாக வந்து பரிதாபமாக உயிரை விடும் கல்பனா எனும் விசாகா சிங்கிற்கு நாசரின் பேக்டரியில் ஏற்படும் விபரீத முடிவு, பாடாவதி பேக்டரி அதிபர் கம் வில்லன் நாசருடன் சேர்ந்து அவரது ஆசை மனைவியான ஆன்ட்டி கேரக்டர் அனுபமா குமாருக்கும் வில்லத்தனம்... என ஏகப்பட்ட இத்யாதி, இத்யாதிகளை கலந்து கட்டி ஜனரஞ்சகமான சினிமாவை தருகிறேன் பேர் வழி... என ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவை டிராமாவாக தந்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

விமல் அழகு எனும் பாத்திரத்தில் அழகாக பொருந்தி நடித்திருக்கிறார். வழக்கம் போலவே நம்பர் ஒன்-ஆக இருக்கிறது அவரது நடிப்பு. ஆனால், குரல் ரசிகர்களை கூக்குரலிட வைக்கிறது. வராத ஆங்கில உச்சரிப்புகளை விமல் ஏன்.? வளைத்து பிடித்து வரவழைக்க முயற்சிக்கிறார் என்பது புரியாத புதிர்!

மைக் எனம் மைக்கேலாக சூரி சில இடங்களில் சிரிப்பும், பல காட்சிகளில் கடுப்புமேற்றுகிறார்! அதுவும் ப்ரியா ஆனந்த்தை கொல்ல வரும் பிண அறுப்பாளருடன் விமலைத்தாண்டி, பைட் போடும் காட்சிகளில் தியேட்டரே அதிர்ச்சியில் அலறுகிறது. விமலுக்கு இங்கிலீஷூம், நமக்கு பைட்டும் எதுக்கு சூரி சார்.?!

ப்ரியா ஆனந்த் தான் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துல கதைக்கு அடுத்த பெரும் பலவீனம்! அம்மணி முற்றின கத்திரிக்காய் மாதிரி குளோசப் காட்சிகளில் ரசிகர்களை பயமுறுத்துகிறார். பாடல் காட்சிகளில் பத்தாங்கிளாஸ் படிக்கும் பெண் மாதிரி சின்ன உடம்பு, பெரிய தலை, ரொம்ப கம்மி உடை... என மேலும் பயமுறுத்துகிறார். ப்ரியாவுக்கு என்னாச்சு.?! ப்ரியா ஆனந்த் ஹீரோயின் என்றாலே ப்ரியாவை சம்பந்தப்படுத்தி ஒரு குடி போதைக்காட்சி ஒவ்வொரு படத்திலும் இருப்பது எப்படி.?! அதுவும் ரயிலில் பிரசவம் பார்க்க ஒரு இளம் பெண் எம்பிபிஎஸ்., குவாட்டர் வாங்கி போவதெல்லாம் ரொம்ப ஓவர்! இன்றைய நவீன யுகத்திலும் இந்தியன் ரயில்வேயின் மருத்துவ வசதிகளையும் நக்கலும் நய்யாண்டியும் செய்வது போல் உள்ளது இக்காட்சி. இந்திய ரயில்வே மீது ப்ரியா ஆனந்துக்கும், இயக்குநர் ஆர்.கண்ணனுக்கும் அப்படி என்ன கோபமோ!

கல்பனா எனும் விசாகா சிங், நாசர், அனுபா குமார், தம்பி ராமைய்யா, சிங்கமுத்து உள்ளிட்டோர் படத்தில் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது பெரும் ஆறுதல்!

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, டி.இமானின் இசை, பாடல்கள் எல்லாம் இப்படத்தின் பெரும்பலம்! ஆனால் அதை எல்லாம் தன் குருநாதர் மணிரத்னத்தின் காப்பி பாடல்களாகவே படமாக்கியிருக்கும் ஆர்.கண்ணன் ஒரே ஸ்டேஷனில் ரயிலை அவ்வளவு நேரம் நிறுத்தி வைத்து(இப்பொழுது எல்லாம் தென் மாவட்டங்களுக்கு செல்லும், அங்கிருந்து சென்னை வரும் ரயில்கள் இன்ஜின் மாற விழுப்புரத்தில் கூட பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்பதில்லை...) மொத்த கதையையும் அதுவும், ப்ரியா ஆனந்த் ஆபத்தில் மாட்டியுள்ள பிளாஷ்பேக்குடன் சேர்த்து சொல்வதெல்லாம் சுத்தபோர்!

ஜெயம் கொண்டான் தொடங்கி சேட்டை வரை தெரிந்தும், தெரிந்தாமலும் ரீ-மேக் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், சொந்த கதை எழுதி, இயக்கி இருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா-விலும் கோட்டை விட்டிருக்கிறார்.

மொத்தத்தில், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - கோட்டை விட்ட ராஜாக்கள்! குறட்டை விடும் ரசிகர்கள்!!
ADVERTISEMENTS