கத்தி திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS

kathi''குறையொன்றுமில்லை'', ''வெண்ணிலா வீடு'' என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராத என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது கத்தி!!


வட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.


அதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான்! ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார்.? கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, ''கத்தி'' மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.


விஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் 'கத்தி' கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே!


கதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்சை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களில் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். சமந்தாவின் 'நான் ஈ' பிளாஷ்பேக் சூப்பர். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளுந்து கட்டியிருக்கிறார்.


தமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லோக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்தியாவாகவே இருப்பதின் மர்மம் என்ன.? விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.


பத்திரிகை மற்றும் மீடியாக்களின் மீது நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் அப்படி என்ன கோபமோ.? ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும்! ஏன் இந்த கொலவெறி.?


குளிர்பாண கம்பெனிகளின் தண்ணீர் திருட்டு, விவசாய நில திருட்டு, புரட்டு என ஏகப்பட்ட திருட்டுகளையும், புரட்டுகளையும் சொல்லி நியாயம் பேசி இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இனியாவது கதைதிருட்டு குற்றச்சாட்டுகளில் அடிக்கடி சிக்காது இருக்க வேண்டுமென்று, ஆங்காங்கே ஒரே கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தும் கத்தி படக்காட்சிகள் போரடிக்கும்போது நம்மையும் அறியாமல் தோன்றுகிறது. படம் சில இடங்களில் அநியாயத்திற்கு ஸ்லோவாக தெரிவது கத்தியின் பலமா.? பலவீனமா தெரியவில்லை.!


ஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லோக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லோகேசன்களிலும் சரி பியித்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.


அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் அபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது போன்று தெரிந்தாலும் விஜய் படங்களில் வழக்கமாக இருக்கும் கொண்டாட்டம் கத்தியில் சற்றே மிஸ்ஸிங்!


''ரமணா'', ''7ம் அறிவு'', ''துப்பாக்கி...'' என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ''கத்தி'' படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், டபுள் ஆக்ட்டு விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.


ஆகமொத்தத்தில், ''கத்தி'' - காலத்திற்கேற்ற ''''புத்தி!'' - கலெக்ஷ்ன் ''உத்தி''யும் கூட...!

ADVERTISEMENTS