ஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
10
பிரபல இயக்குநர் பத்ரியின் இயக்கத்தில் மேட்ச் பிக்ஸிங் எனப்படும் கிரிக்கெட் சூதாட்டத்தை காமெடி களத்தில் அக்குவேரு... ஆணிவேராக அலசி ஆராய்ந்திருக்கும் படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா திரைப்படம் மொத்தமும்!.

லோக்கல் கிரிக்கெட்டை களமாக கொண்ட சென்னை-28 படத்தின் நாயகி விஜயலட்சுமி தான்., இண்டர்நேஷனல் கிரிக்கெட் பிக்ஸிங்கை களமாக கொண்ட இப்படத்தின் நாயகி என்பதும், வளரும் இளம் நடிகர்கள் கருணாகரன், சிம்ஹா, பாலாஜி மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் காமெடியாக நடித்திருப்பதும் இப்படத்தின் பெரும் பலம்!


கால்டாக்ஸி டிரைவரான கதாநாயகர் கருணாகரன், பத்து லட்சத்திற்கும் மேல் கடனில் இருக்கிறார். பிறந்ததில் இருந்து காமன் பாத்ரூமில் காலை கடன்களை முடிக்கும் காலனி குடித்தனத்தில் காலம் தள்ளும் கதாநாயகி விஜயலட்சுமி. வீட்டுக்குள்ளேயே பாத்ரூம் இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக தன் தள்ளுவண்டி கடையில் நாஷ்டா திண்ண வரும் கருணாவின் காதலை கசிந்துருகி ஏற்றுக் கொள்கிறார். ஆனால், முதல் இரவு முடியும் தருவாயில் கருணா பெரும் கடன்காரன், அவர் வீட்டில் தான் வட்டிக்கு கொடுத்த கடன்காரர்கள் எல்லாம் வந்து (பாத்ரூம்) போவார்கள்...எனும் விஷயம் தெரிந்து விவாகரத்து வாங்காத குறையாக கடனை அடைத்து விட்டுவா...என விலகி (காமன் பாத்ரூமே பெஸ்ட் என...) போகிறார். இந்நிலையில் கருணாவின் கால்டாக்ஸியில் பை நிறைய பணத்துடன் வந்து ஏறும் கிரிக்கெட் சூதாட்ட தரகர் பாலாஜி, தன்னை சரியாக கவனித்துக் கொண்டால் நடக்க இருக்கும் 20-20 மேட்ச் முடிந்ததும் உன் கடனை நான் அடைக்கிறேன்... என வாக்குறுதி தருகிறார். ஆனால், பாலாஜி கத்தி குத்துபட்டு மேட்ச்க்கு முன்பே மர்மமாக மரணமடைகிறார். கால்டாக்ஸி டிரைவர் கருணாகரன் தான் குற்றவாளி என போலீஸ் இன்ஸ் சிம்ஹா, கருணாவை கைது பண்ண, அவரை சிம்ஹாவிடம் தான், மும்பையிலிருந்து இந்த கேஸ்க்காக வந்துள்ள போலீஸ் என ஏமாற்றி அழைத்து போகிறார் ஆடுகளம் நரேன். இன்ஸ் சிம்ஹா ஏமாந்தது தெரிந்தும் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரும் எண்ட்ரி ஆகிறார். போலீஸ் எல்லோரும் சேர்ந்து கருணாவையும், ஆடுகளம் நரேனையும் பிடித்தார்களா? கருணா தான் கொலையாளியா? கருணாவை, நரேன் கடத்த காரணம் என்ன? கருணாவிற்கு பத்து லட்சம் கிடைத்ததா? பல கோடி கிடைத்ததா? சிம்ஹா சிறப்பான போலீஸ் என பெயர் எடுத்தார்? கருணா, விஜயலட்சுமி ஜோடி சேர்ந்ததா?என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும், காமெடியாகவும், கலர்ஃபுல்லாகவும் விடையளிக்கிறது ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் மிச்ச சொச்ச கதை!


இதுநாள் வரை காமெடி நடிகனாக முகம் காட்டிய கருணாகரன், இதில் காமெடி கதாநாயகராக, கால்டாக்ஸி டிரைவராக கலக்கி இருக்கிறார். இட்லிக்கடை விஜயலட்சுமியின் கடை இட்லியையே காதலி விஜயலட்சுமிக்கு கிஃப்ட் பேப்பர் சுற்றி இட்லிக்குள் தங்க மோதிரம் வைத்து கொடுத்து காதலை சொல்வதும், முதல் இரவு முடிவதற்குள் வீட்டு வாயிலில் முண்டி அடிக்கும் கடன்காரர்களுக்கு கதவை திறந்து விட்டு, புது பொண்டாட்டியை அவர்களுக்கு காபி போட சொல்லிவிட்டு பால் வாங்க கிளம்புவதும் , தன் கால் டாக்ஸியில் பையை தவறவிட்டு புகார் கூறிய பாலாஜியை போனிலும், நேரில் மீண்டும் பார்த்ததும் படுத்துவதும்... அவர் பை நிறைய பசை உள்ள பார்ட்டி என தெரிந்ததும் வாலாட்டுவதுமாக கருணா, கால் டாக்ஸி டிரைவர் பாத்திரமாகவே ஜொலித்திருக்கிறார்...பலே, பலே !


சிம்ஹா, போலீஸ் இன்ஸ்ஆக கிட்டதட்ட வில்லனிக் ஹீரோ மாதிரி பொளந்து கட்டி இருக்கிறார். " இப்போ நான் ஒரு நிமிஷம் கண்ணை மூட போறேன் நான் கண்ணை திறக்கறதுக்குள்ளே உங்கள்ள உண்மையை சொல்லப் போறவன் ஒரு ஸ்டெப் முன்னாடி வரணும்..." என ஆர்டர் போடுவதும், அதற்கு கருணாவை மட்டும் நின்ற இடத்திலேயே நிற்க விட்டு, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட மற்ற மூவரும் ஒரு ஸ்டெப் பின்னோக்கி நகர்வதும், சிம்ஹா கண் விழித்ததும் கருணா உண்மையை சொல்ல முன்னோக்கி வந்ததாக கருதி அவரை சிம்ஹா படுத்தும் காட்சிகளிலும் " அந்த டாக்கை இறக்க வேண்டாம்.. இந்த டாக்கை வண்டியில் ஏற்று" என்னும் காட்சிகளிலும் சிம்ஹாவின் ஸ்டைலும் மேனரீஸங்களும் அந்த காலத்து வில்லன் ரஜினிகாந்த்தை நம் கண்முன் நிறுத்துகிறது என்றால் மிகையல்ல.


கிரிக்கெட் சூதாட்ட தரகர் பாலாஜியும் கிடைத்த இடத்தில் எல்லாம் நடித்திருக்கிறார். அவரது புரோக்கர் ஃபேம்லி பேக்ரவுண்டும், காதல் எபிசோடும், புத்தம் புதுசு! பாலாஜியின் சந்தோஷமே அவருக்கு எமனாகும் க்ளைளமாக்ஸ் பிளாஸ்பேக்கும் சூப்பர்ப்! பார்க்க சகிக்காத தன் பையனை ஹீரோ ஆக்கிவிடும் முடிவில் படம் எடுத்து பட்ட கடனை அடைக்க சூதாட்டம், ஆள்கடத்தல், மும்பை போலீஸ் வேஷம்....என போகாத வழிக்கெல்லாம் போய் படாதபாடு படும் ஆடுகளம் நரேன் அன்ட் கோவினர்., " விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தானில்... இண்டர்நேஷனல் போலீஸ் கமல் சாரே தமிழில் பேசிய போது., இந்த மும்பை போலீஸ் தமிழ் பேசமாட்டாரா?" என கருணாகரனை போலி போலீஸ் ஆடுகளம் நரேனுடன் அனுப்பி வைக்க ஐடியா கொடுக்கும் ஏட்டு சேத்தன், சினிமாக்காரரின் டைரியை இறந்து போன தயாளன் பாலாஜியின் டைரியாக கருதி ஆக்ஷனில் குதிக்க ஐடியா தரும் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரும் அவரது நாட்டாமை நினைவூட்டலும்...பைனானாசியர் ராதாரவியின் எகத்தாளமும் ஏமாற்றமும், ஆல்பர்ட்- அபிஷேக்கின் இண்டர்நேஷனல் புக்கி பாத்திரமும்....கதாநாயகி விஜயலட்சுமியின் ஈகுச்சி உடம்பும், பாத்ரூம் பஞ்சாயத்தும் ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் ஜெயிப்பிற்கும், ஜெயத்திற்கும் பக்கபலமாக உள்ளது!


துவாரகநாத், சிவா, சான் ரோல்டன், டி.செந்தில் குமரன், கே.ஜெ.வெட்கட் ரமணன், குருராஜ் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம்.... ஆகிய ப்ளஸ் பயிண்டுகளுடன் பத்ரியின் எழுத்து இயக்கத்தில், பக்கா கமர்ஷியலாக , காமெடியாக, கலர்ஃபுல்லாக, கிரிக்கெட் சூதாட்டத்தை புட்டு, புட்டு வைத்திருக்கும் ஆடாம ஜெயிச்சோமடா - அழகாக, அம்சமாக ஜெயித்திருக்கிறது!


மெத்தத்தில், ஆடாம ஜெயிச்சோமடா - எல்லோரும் பார்த்து, சிரித்து, ரசிக்க வேண்டிய படமடா!!"

ADVERTISEMENTS