யான் திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
11
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம், ‛கோ வெற்றி படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் ஜீவா, மீண்டும் நடித்திருக்கும் படம், முன்னால் முன்னணி நாயகி ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுடன் ‛கோ-வில் ஜோடி போட்ட ஜீவா, இதில் ராதாவின் இளைய மகள் துளசியுடன் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ள படம், ஹாரிஸ் ஜெயராஜின் இசை, பாடல்களால் வழக்கம் போலவே வரவேற்பை கூட்டியுள்ள திரைப்படம்... என ஏகப்பட்ட பரபரப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம் தான் ‛‛யான்! இதுமாதிரி பரபரப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் ‛ யான் எத்தனை தூரம் பூர்த்தி செய்தான்? என இனி பார்ப்போம்...

சின்ன வயதிலேயே விபத்தொன்றில் பெற்றோரை இழந்து, ‛எம்பிஏ படித்தும், வேலை வெட்டி இல்லாமல் பாட்டியின் அரவணைப்பில் மும்பையில் வளரும் தமிழ் இளைஞர் சந்துரு எனும் ஜீவா, அம்மாம் பெரிய மும்பையில் ‛தம் கட்டி, காதலித்தால், ஒரு தமிழச்சியை தான் காதலிப்பேன்... என பிடிவாதமாக இருக்கிறார்.

ஒருநாள் ஒரு அசாதரணமான சூழலில் தோளை உரசி செல்லும் துப்பாக்கி தோட்டக்களுக்கு இடையே போலீஸ்க்கும், போதை மருத்து கடத்தல் கும்பலுக்கும் இடையயான சண்டையில், தன் நாயகி ஸ்ரிலா எனும் துளசியை ‛காபந்து செய்து காதலிக்க தொடங்குகிறார் ஜீவா. அப்புறம்? அப்புறமென்ன..? வழக்கம் போலவே நாயகியின் அப்பா நாசர் எதிர்க்கிறார். அப்பாவின் நண்பரும், மும்பை போலீஸ் ஆபிஸருமான ஜெயபிரகாஷ் ஆதரிக்கிறார், நாயகியின் அப்பா நாசரிமுடம் இவர்களுக்காக பேசுகிறார்.

ஆனாலும், வழக்கம் போலவே., வங்கி உத்தியோகத்தில் இருக்கும் சைலண்ட் வில்லனாக வரும் நாயகியின் முறைபையன் ரிஷி, (கொஞ்சம் மாறுதலுக்காக... மனைவியை விவாகரத்து செய்த முறைபையன்...) ஜீவாவிற்கு வேலை இல்லை என்பதை சுட்டிக்காட்சி துளசியை தான் அடைய முயல்கிறார்.

‛‛வேலைதானே உங்கள் பிரச்னை.? என வெகுண்டெழும் ஜீவா, கம்பெனி, கம்பெனியாக வேலை தேடி ஏறி, இறங்குகிறார். ஆனால், இங்கே எல்லாம் கிடைக்காத வேலை, பலுசிஸ்தானில் ஜீவாவிற்கு கிடைக்கிறது.

டிராவல் ஏஜென்ட் போஸ் வெங்கட், நல்லவர் மாதிரி நடித்து ஜீவாவுடன் ஒரு ஆட்டிஸ குறைபாடுள்ள இளைஞனையும், பலுசிஸ்தானுக்கு பிளைட் ஏற்றிவிட்டு, இருவரது லக்கேஜ்ஜிலும் எக்கச்சக்கமான போதை பொருளை வைத்து அனுப்புகிறார்! அங்கு அரபு நாட்டில் போய் ஜீவா இறங்கியதும் போதை பொருளை இருப்பதை கண்டுபிடிக்கும் போலீஸ், ஜீவாவையும், அந்த ஆட்டிசம் இளைஞனையும் கைது செய்து சிறையில் தள்ளி, தலையை துண்டிக்க தயாராகிறது. விஷயம் அதே பலுசிஸ்தான் சிறையில் இருந்து சிறிய குற்றம் செய்து, ரிலீஸ் ஆகி சொந்த ஊர் திரும்பும் தம்பி ராமைய்யா மூலம் மும்பையில் இருக்கும் ஜீவாவின் பாட்டிக்கும், காதலிக்கும் தெரியவர, மயங்கிவிழும் பாட்டியிடம், தன்னால்தான் ஜீவாவுக்கு இப்படி ஆயிற்று... என பொங்கி எழும் துளசி, ஜீவாவை மீட்டு வர தனி ஆளாக(!) அந்த நாட்டிற்கு விமானம் ஏறுகிறார். துளசி, ஜீவாவை மீட்டாரா.? அல்லது ஜீவா தலை துண்டிக்கப்பட்டு மாண்டாரா.? எனும் கதையுடன் அப்பாவி ஜீவா, பலுசிஸ்தான் போலீசில் மாட்ட காரணமான வில்லன்களையும், ஜீவா தீர்த்து கட்டி வேர்த்து விறுவிறுத்து துளசியுடன் எப்படி? இந்தியா திரும்ப முயற்சிக்கிறார்.? எனும் கதையையும் கலந்து கட்டி ‛யான் படத்தை ஒருவழியாக முடிக்கிறார்கள்!

சந்துருவாக ஜீவா, வழக்கம் போலவே முன்பாதியில் ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என்றபடி கிண்டலும், கேலியுமாக திரிவதும், பின்பாதியில் செயற்கரிய காரியங்களை எல்லாம் செய்து ஆக்ஷ்னில் லாஜிக் இல்லாமல் மேஜிக் செய்வதுமாக வெளுத்து கட்டியிருக்கிறார். என்ன? எல்லாம்... நம்ப முடியாத மேஜிக்காக இருப்பது பலவீனம்!

ஸ்ரிலாவாக துளசி, ‛பளிச் என சிரித்தபடி பக்கா கிளாமர் உடையில் மனம் கவருகிறார். அதற்காக அவர் தனியாளாக பலுசிஸ்தான் போய், ஜீவாவை மீட்க முயல்வதெல்லாம் ரொம்ப ஓவர். அதிலும், அங்கு போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் ஜீவாவிற்காக, கடுமையான சட்டதிட்டங்கள் உடைய அந்த நாட்டில் போய் போராட்டம் பண்ணுவது, பேனர் பிடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர்!

நாசர், ஜெயபிரகாஷ், அர்ஜூன் நந்தகுமார், கருணாகரன், போஸ் வெங்கட், தம்பி ராமைய்யா, நவாப்ஸா உள்ளிட்டவர்களில் கருணாகரனும், போஸ்வெங்கட்டும் நாசர் அளவுக்கு நம்மை நடிப்பில் கவருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், ‛‛நீ வந்து போனது நேற்று மாலை... பாடல் மட்டும் இனிக்கிறது. மனுஸ்நந்தனின் ஒளிப்பதிவு யான் படத்தின் பெரிய ப்ளஸ்!

அந்த ஆரம்பகாட்சி விசிட்டிங் கார்டு துரத்தல், நாசர், நாயகியின் அப்பா என்று தெரியாமலே ஹீரோ பினாத்தல்... தமிழ் சினிமா வழக்கப்படி வங்கி வேலை முறைப்பையன்... அடிக்கடி நாசர், ஹீரோவை பார்த்து, ‛‛அப்போ நீ வேலையில்லா பட்டதாரி என சமீபத்தில் ரிலீஸான ஒரு பட டைட்டிலையே டயலாக் அடிப்பது...உள்ளிட்ட குறைகளை நீக்கிவிட்டு பார்த்தால், ‛யான் ஓகே!

ஆனாலும் நடிப்பும், துடிப்பும் நிரம்பிய ஜீவா, பட நாயகராக இருந்தும், ரவி கே.சந்திரனின் இயக்கத்தில், ‛யான் படத்தில் பெரிதாய் இல்லை ‛‛ஜீவன்!!
ADVERTISEMENTS